PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:
ராமநாதபுரம்
தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி,
லோக்சபாவில் இதுவரை ஏதாவது ஒரு விஷயத்தை பேசியுள்ளார் என்பதை நிரூபித்தால்,
அவருக்கே முழுமையாக ஓட்டு போட சொல்கிறேன். நான் நிறுத்தியுள்ள வேட்பாளரை
மற்ற வேட்பாளர்களுடன் சீர்துாக்கி பாருங்கள். எதிலாவது குறைந்திருந்தால்
எனக்கு ஓட்டு போட வேண்டாம்.
இவருக்கு என்ன போச்சு...? நவாஸ்கனி
தி.மு.க., அனுமதி இல்லாம லோக்சபாவில் சுயமா பேசி இருந்தா, இப்ப மீண்டும்
வேட்பாளராகி இருக்க முடியுமா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சீனா தானா அடகு கடையில், 40 ஆண்டுகளாக அடகு வைக்கப்பட்டிருக்கும் சிவகங்கை சீமையை மீட்க, பிரதமர் அனுப்பி இருக்கும் தேவதுாதனே தேவநாதன் யாதவ். ராகுலுடன் சுமுக உறவு இல்லாத கார்த்தி, அப்பா சிதம்பரத்தின் விசிட்டிங் கார்டை வைத்து மீண்டும் வேட்பாளராகி இருக்கிறார்.
தேவதுாதன் ஜெயிக்கிறாரா இல்ல சிவகங்கை சீமை, அடகு கடையில் இருந்து மீள முடியாமல் மூழ்குதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ தனிக் கட்சி துவக்கிய போது, பல தொண்டர்கள் தற்கொலை செய்து உயிரை விட்டது, அந்த கட்சிக்கு உரம் போல் வித்திட்டது. எந்த தி.மு.க., வின் வாரிசு அரசியலை எதிர்த்தாரோ, அதே தி.மு.க., நிழலில் அண்டி பிழைக்கும் நிலை அவருக்கு வந்தது, தன் வாரிசு அரசியல் நலன் கருதியே. எந்த தற்கொலைகள் ம.தி.மு.க., வளர்ச்சிக்கு வித்திட்டதோ, அதே தற்கொலை தான் ம.தி.மு.க., வீழ்ச்சிக்கும் வித்திட்டு விட்டது.
ஒரு எம்.பி., ரெண்டு எம்.எல்.ஏ., சீட் தான் குறின்னு இருக்கிறவங்க மற்ற விஷயங்களை பற்றி கவலைப்பட போறாங்களா என்ன?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: சென்னை, ஆழ்வார்பேட்டையில் மதுபான கூடத்தின் கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் இறந்துள்ளனர். பாதுகாப்பு வசதிகளின்றியும், நேர கட்டுப்பாடின்றியும், சென்னையில் பல மதுபான கூடங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. வணிக நோக்கத்தை மட்டும் மையமாக வைத்து, இதுபோன்ற கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
அதே ஆழ்வார்பேட்டையில் இருக்கும், 'ஆண்டவர்' கண்களுக்கு இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியலையோ?

