/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'மிரட்டினால் தான் புத்தி வருது!'
/
'மிரட்டினால் தான் புத்தி வருது!'
PUBLISHED ON : டிச 18, 2025 03:31 AM

திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி சின்னக்காளி பாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்றதால், அவர்கள் இயற்கை உபாதை கழிக்கப் பயன்படுத்துவதற்காக, எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லக்கூடிய, தற்காலிக கழிப்பறைகளை போலீசார் கொண்டு வந்திருந்தனர்; ஆனாலும், அவற்றை பயன்படுத்த, யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால், ஆவேசமான சில பெண்கள், 'கழிப்பறையைப் பயன்படுத்தக் கூட, உங்களிடம் அனுமதி பெற வேண்டுமா? இது மிகவும் மோசமான மனித உரிமை மீறல். நிச்சயமாக இதற்கு, கோர்ட்டில் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்' என, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்த, போலீசார் அனுமதித்தனர்.
இதை பார்த்த ஒரு பெண்மணி, 'மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமா...? மிரட்டினால் தான் நம்ம போலீசாருக்கு புத்தி வருது...' என முணுமுணுக்க, சக பெண்கள் ஆமோதித்தனர்.

