PUBLISHED ON : ஜூன் 01, 2026 01:02 AM

சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் செந்தில்குமார், 53,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கையுடன், தன் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரி, அம்மா உணவகம், மருத்துவமனைகளை அடிக்கடி பார்வையிட்டு தீவிரமாக ஆய்வு மேற்கொள்கிறார். சமீபத்தில் அம்மா உணவகத்தில் ஆய்வுக்கு வந்தார் .
இதை பார்த்த இளம் பத்திரிகையாளர் ஒருவர், 'என்னப்பா புது எம்.எல்.ஏ., சுறுசுறுப்பா இருப்பதை பார்த்தால், தொகுதி பிரமாண்டமா வளர்ச்சி அடைஞ்சிடும் போலிருக்கே' என, 'கமென்ட்' அடித்தார்.
அதற்கு மூத்த நிருபர், 'அது சரி... ஆரம்பத்துல காட்டுற இந்த ஆர்வத்தை, அஞ்சு வருஷமும் காட்டினா நல்லாயிருக்கும்... ஆனா, போகப் போக இந்த ஆர்வம் இருக்குமான்னு தான் தெரியல' எனக் கூற, சுற்றி இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
