PUBLISHED ON : ஜூன் 22, 2026 01:02 AM

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
அமைச்சர்கள், கலெக்டர், 'டீன்' மற்றும் மருத்துவ துறை தலைவர்கள் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட வேண்டும். ஆனால், த.வெ.க., மாவட்டச் செயலர் விஜய் வெங்கடேஷ், இணை செயலர் துாயவன் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் பலரும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் இதை கண்டுகொள்ளவில்லை.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'த.வெ.க.,வை சேர்ந்தவங்களுக்கு தான் இதெல்லாம் புதுசு; அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இதை கண்காணிக்க வேண்டிய பி.ஆர்.ஓ.,வும் கமுக்கமா இருக்காரே...' என முணுமுணுத்தார்.
சக நிருபரோ, 'ஆளுங்கட்சியினரை மேடையில் இருந்து எழுப்பி விட்டுட்டு, பி.ஆர்.ஓ.,வை தண்ணியில்லாத காட்டுக்கு போக சொல்றியா...?' என கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.
