PUBLISHED ON : மார் 06, 2026 03:01 AM

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா விருப்பமனு அளித்துள்ளார்; இவர், 2016ல் இத்தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
கடந்த, 2021ல் இவருக்கு தான், 'சீட்' என கூறப்பட்டது; ஆனால், கடைசி நேரத்தில், மான்ராஜ் என்பவருக்கு சீட் வழங்கி, அவரும் ஜெயித்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த சந்திரபிரபா, இம்முறை சீட் பெறுவதில் உறுதியாக இருக்கிறார். கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அவரது வலப்புறத்தில் மான்ராஜ், இடப்புறத்தில் சந்திரபிரபா அமர்ந்திருந்தனர்.
இதை பார்த்த நிர்வாகி ஒருவர், 'அண்ணன், ரெண்டு பேரையும் பக்கத்துலயே வச்சிருக்காரு... இதுல, யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் தர போறாரோ...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சிரித்தனர்.

