PUBLISHED ON : மார் 09, 2026 02:00 AM

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில், தி.மு.க., சார்பில், அகில இந்திய மகளிர் கபடி போட்டி சமீபத்தில் நடந்தது. போட்டியை, அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
போட்டி குறித்து, நேர்முக வர்ணனை செய்த தி.மு.க.,வினர், ஹிந்தியில் பொளந்து கட்டினர். அதேநேரம், 'வட மாநிலங்களில் இருந்து வந்திருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஹிந்தியில் கூறுகிறோம்' என, சமாளிக்கவும் செய்தனர்.
தி.மு.க.,வினர் ஹிந்தியில் வாய்ஜாலம் காட்டியதை, அங்கிருந்த பலரும் வாயை பிளந்து வியப்புடன் பார்த்தனர்.
போட்டியை காண வந்திருந்த ஒருவர், 'நம்மை எல்லாம் ஹிந்தி படிக்கக்கூடாது என்று கூறிவிட்டு, இவங்க எங்கே போய் ஹிந்தி கத்துக்கிட்டாங்கன்னு தெரியலையே...' என, முணுமுணுத்தார்.
அவரது அருகில் இருந்தவர், 'அது சரி... அவங்க அதிபுத்திசாலிகளா இருந்திருக்காங்க... நாம அடி முட்டாளா இருந்திருக்கோம் பா...' என்றபடியே, இடத்தை காலி செய்தார்.

