PUBLISHED ON : டிச 14, 2025 03:26 AM

ஈரோடு மாவட்டம், கோபியில் சமீபத்தில் நடந்த, தன் நண்பரின் குடும்ப திருமண விழாவில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்றார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என, தீர்ப்பு வழங்கியது. அங்குள்ள ஒவ்வொரு சதுர அடி இடமும், கடவுள் முருகனுக்கு சொந்தமானது. அந்த இடத்தில் தீபம் ஏற்ற, ஹிந்து விரோத ஸ்டாலின் அரசு தடுக்கிறது.
'நீதிமன்ற தீர்ப்பு என்பது, ஹிந்துக்களின் உரிமை. அந்த உத்தரவை ஸ்டாலின் அரசு மீறலாமா... தமிழகத்தில் தி.மு.க., துடைத்து எறியப்பட்ட சரித்திரம் உண்டு. எனவே, வரும் தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆட்சி நீக்கப்பட வேண்டும்' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இப்படி ஆவேசமா பேட்டி கொடுத்தா மட்டும் போதாது... தி.மு.க.,வினருக்கு இணையா தேர்தல் களத்தில் இறங்கி அடிச்சால் தான், இவரது கனவு நனவாகும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கிளம்பினர்.

