PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம், மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற எம்.பி., கனிமொழியிடம், பல தொழிற்சங்கத்தினர், கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அதில் ஒரு மனுவில், 'தென்மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்' என கூறப்பட்டு இருந்தது.
அதை படித்து பார்த்தவர், மனு கொடுத்தவர்களிடமே திருப்பி கொடுத்து, 'என்னை வம்பில் மாட்டி விடாதீங்க' என, சிரித்தபடியே கூறினார்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'பரவாயில்லை... எந்த மனு கொடுத்தாலும், வாங்கிட்டு, 'கண்டிப்பா முடிச்சு தர்றோம்'னு வாய் வார்த்தையா சொல்லாம, படிச்சு பார்த்து, உண்மையை, 'பளிச்'னு சொன்ன இவங்களை பாராட்டியே ஆகணும் பா...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

