PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, துாத்துக்குடியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'துாத்துக்குடியில் சமீபத்தில் துவங்கப்பட்ட வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை போன்ற நிறுவனங்களில் கடினமான, அடித்தட்டு வேலைகளுக்கு மட்டுமே உள்ளூர் மக்களை பயன்படுத்துகின்றனர். அதிகாரம் மிக்க பணிகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
'துாத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்படும் தொழிற்சாலைகள், ஏற்கனவே துவங்கிய தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்படி எல்லாம் சட்டம் போட்டா, எந்த தொழிற்சாலையும் துாத்துக்குடி பக்கமே வராது...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடி கலைந்தனர்.