PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM

கோவையில், 'கேலோ இந்தியா' சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அதிகாரிகள், நடுவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாவலர்கள் என, அனைவரும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தது.
இதனால் உள்ளூர் பயிற்சியாளர்கள், வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். ஒரு வாரம் நடந்த இந்த விளையாட்டு போட்டியில், உணவருந்தும் அறை, ஓய்வறை, வீரர்கள் உடை மாற்றும் அறை போன்றவை எங்கு உள்ளது என்பதை அவர்களிடம் ஆங்கிலத்தில் அரை, குறையாக கேட்டபோது, பெரும்பான்மை நேரத்தில், 'நஹி மாலும்' என்ற பதிலே கிடைத்தது.
இதனால் நொந்து போன வீரர் ஒருவர், 'விளையாட பயிற்சி எடுத்த போதே, கொஞ்சம் ஹிந்தி பேசவும் பயிற்சி எடுத்திருக்கலாம் போல...' என, சக வீரரிடம் கூற, பயிற்சியாளர் ஒருவர், 'நம்ம ஆட்சியாளர்கள் தான் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

