PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் மற்றும் அதிகாரிகள் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, தேர்ச்சி விபரங்களை அளித்தனர்.
அவசர, அவசரமாக தன் அலுவலகம் வந்த கலெக்டர், தலையை கூட சரிவர வாரிக் கொள்ளவில்லை. மாநிலத்தில் திருப்பூர் முதலிடம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர், அப்படியே நிருபர்களுக்கு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்.
இதை கவனித்த வீடியோகிராபர் ஒருவர், 'சார்... வியர்வையை துடைத்துக் கொள்ளுங்கள்; தலையை வாரிக் கொள்ளுங்கள்... ரிலாக்ஸாக இருங்கள்...' எனக்கூற, 'திருப்பூரில் ரொம்ப வெயிலுப்பா... அதனால, தலைக்கு எண்ணெய் வைத்திருக்கிறேன்...' என, கலெக்டர் ஜாலியாக கமென்ட் அடித்தார்.
இதைப் பார்த்த கல்வி அதிகாரி ஒருவர், 'கலெக்டர் ஜாலி டைப்பா இருக்கார்... இவ்வளவு சகஜமாக பேசுறாரே...' எனக்கூற, அங்கே இருந்தவர்கள் அதை ஆமோதித்து சிரித்தனர்.

