PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், சுகாதார துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்றனர்.
இதில், மகேஷ் பேசுகையில், 'ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளும் தன்னிறைவு பெற வேண்டும் என, இலக்கு நிர்ணயித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்;அது விரைவில் நிறைவேறும். அதேபோல, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் எண்ணம், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவது தான். இப்படி போட்டி போட்டு, பொதுமக்கள் உயிரை காக்க தி.மு.க., தலைமையில் உள்ளோர் செயல்படுகின்றனர்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'எய்ம்ஸ் மருத்துவமனை வந்துட்டா, அப்புறம் உதயநிதி எந்த செங்கல்லை காட்டி தேர்தலில் பிரசாரம் செய்வார்...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அதானே... உதயநிதி எண்ணத்தை இவர் சரியா புரிஞ்சுக்கலையோ...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

