PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

ஜூலை 14, 1956
மதுரையில், சேஷாத்திரி - ராதா தம்பதியின் மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் டாக்டர் சந்திரசேகர்.
மதுரை மருத்துவக் கல்லுாரியில், 14 தங்க பதக்கங்களுடன், எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், பஞ்சாப் மாநிலம், சண்டிகரில், எம்.டி., பொது மருத்துவம், செரிமானம், 'எண்டோஸ்கோபி' துறைகளில் சிறப்பு பட்டம் பெற்றார். கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், செரிமானவியல் துறையை துவக்கி, 23,000 அறுவை சிகிச்சைகளை செய்தார்.
உடல் பருமன், கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்கள் குறித்து இணையம், தொலைபேசி வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். பார்வை, கேட்பு திறனற்ற மாணவர்களுக்கான நுண்ணறிவு திறன் சிகிச்சையும் அளிக்கிறார். 'பிரெய்லி' எனும் பார்வையற்றவர் படிக்க வசதியாக சுகாதாரம், சாலை விதிகளை வெளியிட்டுள்ளார். இவர், 'பத்மஸ்ரீ' மற்றும், 'மாஸ்டர், கிரிஸ்டல்' உள்ளிட்ட தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் நிரந்தர கவுரவ பேராசிரியராகி, இளம் டாக்டர்களுக்கு வழிகாட்டுகிறார். உலக ஜீரண நலத்துறை சங்க விஞ்ஞான குழு உறுப்பினராக, மக்கள் சேவை செய்யும் டாக்டர், சந்திரசேகர் பிறந்த தினம் இன்று!

