PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

டிசம்பர் 29, 1912
பிரிட்டனில் உள்ள செல்டன்ஹாம் என்ற ஊரில், 1834 செப்டம்பர் 22ல் பிறந்தவர் ராபர்ட் புரூஸ் புட். இந்தியாவில், 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர், இந்திய ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டனர்.
அப்போது, வீரர்களின் மறைவிடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதால், இந்தியாவை அளந்து அடையாளப்படுத்த, விக்டோரியா ராணி, நிலவியலாளர்களை இங்கு அனுப்பினார்.
அவ்வாறு 1857ல், சென்னை மாகாணத்தை அளக்க அனுப்பப்பட்ட ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்டவற்றை துல்லியமாக ஆராய்ந்தார். சென்னையின் பல்லாவரம், செங்கல்பட்டு பகுதிகளில், 11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் முதல் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால மனிதர்கள் வரை பயன்படுத்திய கற்கோடரிகளை கண்டறிந்தார்.
தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளை அளந்ததுடன், அங்கு பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களையும் ஆவணப்படுத்தினார். இந்திய தொல்லியல் துறைக்கு முன்னோடியான இவர், 1912ல் தன், 78வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

