PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

டிசம்பர் 11, 1882
துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், சின்னசாமி அய்யர் -- லட்சுமிஅம்மாள் தம்பதிக்கு மகனாக, 1882ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பையா எனும் சுப்பிரமணியன்.
இவர், தன் 11வது வயதிலேயே கவிதை எழுதி, எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். இவரது கவித்திறமையை வியந்த மன்னர், 'பாரதி' என, பட்டம் சூட்டினார். இவர், சிறிது காலம் காசியில் வாழ்ந்தார்.அங்கிருந்து தமிழகம் வந்து தமிழாசிரியர், பத்திரிகையாசிரியர் பொறுப்புகளை வகித்தார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்க மொழிகளை நன்கறிந்த இவர், அம்மொழி இலக்கியங்களை தமிழுக்கு தந்தார். 'சுதேசமித்திரன்,யங் இண்டியா, இந்தியா' உள்ளிட்ட இதழ்களின் வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டினார். 'மண்ணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் விடுதலை வேண்டும்' என்றார்.
புலமைக்கு பரிசாக கிடைத்த வறுமையையும் ரசித்த இவர், 1921, செப்டம்பர் 11ல் தன் 39வது வயதில் மறைந்தார்.
பெண் குழந்தைகளின் பெயரிலும், பல கவிஞர்களின் புனை பெயரிலும் இன்றும் கம்பீரமாய் வாழும் பாரதியார் பிறந்த தினம் இன்று!

