PUBLISHED ON : டிச 01, 2024 12:00 AM

டிசம்பர் 1, 2016
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்,சித்த மருத்துவரின் மகனாக, 1944ல் பிறந்தவர் செ.கா.சீ.சாகுல் ஹமீது எனும் இன்குலாப்.
இவர், கீழக்கரையில் பள்ளி படிப்பையும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளிலும் படித்தார். அப்போது,ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பி.ஏ., தமிழ் முடித்த இவர், சென்னை புதுக்கல்லுாரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து, தமிழர்களின் உரிமைகளுக்காக, 'கார்க்கி' இதழில் கவிதைகள் எழுதினார். 'தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உங்கள் விசிட்டர்' உள்ளிட்ட இதழ்களிலும் எழுதினார்.
'இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு' உள்ளிட்ட கவிதை தொகுதிகள், 'பாலையில் ஒரு சுனை' எனும் சிறுகதை தொகுதி, 'அவ்வை, மணிமேகலை' உள்ளிட்ட நாடக நுால்களையும் எழுதி உள்ளார்.
'சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது, கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2016ல் தன் 72வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
அரசு மருத்துவமனைக்கு தன் உடலை தானமாக எழுதி வைத்த கவிஞரின் நினைவு தினம் இன்று!

