PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

நவம்பர் 12, 1896
மஹாராஷ்டிரா மாநிலம், கேத்வாடிஎன்ற ஊரில், 1896ல் இதே நாளில் பிறந்தவர் சலீம் மொய்தீன் அப்துல் அலி.
இவர், சிறுவயதில் சுட்டு வீழ்த்திய சிட்டுக் குருவியின் கழுத்து மஞ்சள் நிறமாக இருந்தது. இது குறித்து, மும்பை இயற்கை வரலாற்று கழக கவுரவ செயலரான மில்லர்ட்டிடம் கேட்டார். அவர், பறவைகளை பற்றி படிப்பது, பாதுகாப்பது குறித்து விளக்கினார்.
இந்தியாவின் பரத்பூர், மேற்கு, கிழக்கு தொடர்ச்சிமலைகள், இமயமலை, தக்காண பீடபூமி உள்ளிட்டஇடங்களுடன் மியான்மர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பறவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
கடந்த 1930ல், துாக்கணாங்குருவி பற்றிய ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். தொடர்ந்து, பறவைகளின் தோற்றம், உணவுப் பழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, 'இந்திய பறவைகள் கையேடு' உள்ளிட்ட நுால்களை எழுதி உலகப் புகழ் பெற்றார்.
'பத்ம பூஷன், பத்ம விபூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1987 ஜூலை 27ல், தன் 91வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

