PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

அக்டோபர் 19, 2023
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள மேல்மருவத்துாரில், கோபால நாயக்கர்- மீனாம்பாள் தம்பதியின் மகனாக,1941, மார்ச் 3ல் பிறந்தவர், சுப்பிரமணி எனும் பங்காரு அடிகளார். ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர் பணியில் ஈடுபட்டார்.
கடந்த, 1966ல் இவரது குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில், இவரை ஆதிபராசக்தி ஆட்கொண்டதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் இருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் பரவ, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.
அந்த இடத்தில் ஆதிபராசக்திக்கு கோவில் கட்டி, பங்காரு அடிகளாகி, பக்தர்களுக்கு அருளாசி வழங்க ஆரம்பித்தார். அந்த கோவிலில்,'பெண்கள் கருவறை வந்து பூஜை செய்யலாம்; மாதவிடாய் காலத்திலும் வந்து வழிபாடுசெய்யலாம்' எனக் கூறி, ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்.
இன்றும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் சிகப்பு உடை, சக்தி மாலை அணிந்து, அந்த கோவிலுக்கு வருகின்றனர். பக்தர்களால், 'அம்மா' என அழைக்கப்பட்ட இவர், 2023ல், தன், 82வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
ஆன்மிகம் மற்றும் சமூக சேவைக்காக,'பத்மஸ்ரீ' விருது பெற்ற பங்காரு அடிகளாரின் நினைவு தினம் இன்று!

