PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

அக்டோபர் 15, 1855
கடலுார் மாவட்டம், அகரம் கிராமத்தில், 1855ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பராயலு ரெட்டியார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர்,தமிழ் மீது பற்று கொண்டிருந்தார்.சென்னை மாநிலக் கல்லுாரியிலும், லண்டனிலும் படித்தார். நாடு திரும்பி காங்கிரசில் சேர்ந்து அரசியல் பணிகளை செய்தார்; 1916ல் அங்கிருந்து விலகினார்.
தியாகராயர், டி.எம்.நாயர் துவங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். இரட்டை ஆட்சி முறையின்கீழ், 1920ல் சென்னை மாகாணத்துக்கு நடந்த சட்டசபை தேர்தலில், நீதிக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
சென்னை மாகாண கவர்னர் வெலிங்டன், தியாகராயரை முதல்வராக பதவி ஏற்க அழைத்தார்; அவரோ, தன் நண்பரான இவரை பரிந்துரைத்தார். இவர் 1920, டிசம்பர் 17ல் பதவியேற்று, கல்வி, சுங்கம், பொதுப்பணி ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார்.
மிகக்குறைந்த அமைச்சர்களுடன் செயல்பட்ட இவர், உடல்நலக் குறைவால், 1921 ஜூலை 11ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; 1921, தன் 66வது வயதில் நவம்பர் மாதம் மறைந்தார்.
சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் பிறந்த தினம் இன்று!

