PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

அக்டோபர் 3, 1906
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தில், கச்சபாலைய முதலியார் - அம்மாகண்ணு தம்பதியின் மகனாக, 1906ல் இதே நாளில் பிறந்தவர் வஜ்ஜிரவேல் முதலியார்.
இவர், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் பி.ஏ., பட்டத்தையும், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் எல்.டி., படிப்பையும் முடித்தார். தான் படித்த பள்ளிக்கே ஆசிரியராகி, தலைமை ஆசிரியராக உயர்ந்தார்.
தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட மெய்கண்டார் தமிழ் கல்லுாரி முதல்வராகவும், திருவாவடுதுறை ஆதீன வித்வானாகவும், மதுரை காமராஜர் பல்கலையில் சைவ சித்தாந்த துறை தனி அலுவலராகவும் பணிபுரிந்தார்.
சைவ சித்தாந்த ஆய்வறிஞரான இவர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தர்மகர்த்தாவாகவும் இருந்தார். இந்தியா, இலங்கையில் சைவ சித்தாந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 'சைவம், திருவருட்பயன், சைவமும் வைணவமும்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர் 1989, மார்ச் 10ல் தன், 83வது வயதில் மறைந்தார்.
'சித்தாந்த சிகாமணி' பிறந்த தினம் இன்று!

