PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

அக்டோபர் 2, 1954
திருநெல்வேலி மாவட்டம், களக்காடுகிராமத்தில், சண்முகானந்த குருசாமி- சாரதாம்பாள் தம்பதியின் மகனாக,1954ல் இதே நாளில் பிறந்தவர் கே.ஜி.ஜவஹர்.
இவர், நாங்குநேரியில் பள்ளி படிப்பையும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லுாரியில் பி.ஏ., திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.ஏ., பொருளாதாரம் முடித்தார். டில்லியில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி பெற்ற இவர், லட்சுமி கமர்ஷியல் வங்கி பணியில் சேர்ந்து, கனரா வங்கிக்கு மாறினார்.
டில்லி, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார்.பிரபலமானவர்களை சந்தித்து பேட்டி எடுத்து, தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, வாஜ்பாய் உள்ளிட்டோரின் பேட்டிகளால் பிரபலமானார்.
'தினமலர்' நாளிதழின் 'கதைமலர்' இதழ் உள்ளிட்டவற்றில், நகைச்சுவை, துணுக்குகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதினார். அழிவின் விளிம்பில் உள்ள ஜப்பானிய இசைக்கருவி, 'புல்புல் தாரா' இசைப்பதில் வல்லவர்.
எழுத்துக்காகவும், இசைக்காகவும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவரது, 71வது பிறந்த தினம் இன்று!

