PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

செப்டம்பர் 27, 1833
மேற்கு வங்க மாநிலம், ஹூப்ளி மாவட்டம், ராதா நகரில், வசதியான பிராமண குடும்பத்தில், 1772, மே 22ல்பிறந்தவர், ராஜாராம் மோகன் ராய்.இவர், பாட்னாவில் பாரசீகம், அரபு மொழிகளையும், பனாரசில் சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளையும் கற்றார்.
வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்களையும் ஆழ்ந்து கற்று, சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கோல்கட்டா சென்றார். இதனால், தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,வீட்டிலிருந்து வெளியேறி, கிழக்கிந்திய கம்பெனியில் திவானாக பணியாற்றினார்.
ஜாதி, மத பிரச்னைகளை தீர்க்க ஒரே கடவுள் எனும் கோட்பாட்டை வலியுறுத்தி, 'ஆத்மிக சபை'யை துவக்கினார். பெண் கல்வி, விதவை மறுமணம், சொத்தில் சம உரிமை உள்ளிட்டவற்றுக்காகவும், உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், பலதார மணம் உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும் போராடினார்.
'பிரம்ம சமாஜம்' துவக்கி மூட நம்பிக்கைகளுக்குஎதிராக போராடிய இவர், 1833ல் தன், 61 வயதில், இதே நாளில் மறைந்தார்.
'இந்திய மறுமலர்ச்சியின் தந்தை' மறைந்த தினம் இன்று!

