PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

செப்டம்பர் 11, 1895
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்குஅருகில் உள்ள கொலபா எனும் கிராமத்தில், நரசிம்மராவ் பாவே - ருக்மணிதேவி தம்பதிக்கு மகனாக, 1895ல் இதே நாளில் பிறந்தவர் விநாயக் நரஹரி பாவே எனும் வினோபா பாவே.
காந்தியின் அஹிம்சை, அறப்போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். விடுதலை போரில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றார். 'மஹாராஷ்டிர தர்மா' என்ற இதழை துவக்கி, தீண்டாமை ஒழிப்பு, உபநிடத கருத்துகளை எழுதினார்.
நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று, மக்களிடம்குறைகளை கேட்டார். தெலுங்கானா மாநிலம், போச்சம்பள்ளி கிராம ஏழைகள், இவரிடம் விவசாயத்துக்கு நிலம் கேட்டனர். ராமச்சந்திர ரெட்டியிடம் இருந்த, 100 ஏக்கர் நிலத்தை பெற்று பிரித்து தந்தார். 'பூமி தானம்' என்ற இயக்கத்தை துவக்கினார்.
நாட்டு செல்வந்தர்களிடம் இருந்து, 40 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று, ஏழைகளுக்கு தானமளித்தஇவர், தன் 87வது வயதில், 1982, நவம்பர் 15ல் மறைந்தார்.
நாட்டின், 'பூமி தான' தந்தை பிறந்த தினம் இன்று!

