PUBLISHED ON : ஆக 28, 2024 12:00 AM

ஆகஸ்ட் 28, 1934
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், பார்த்தசாரதியின் மகளாக,1934ல் இதே நாளில் பிறந்தவர் ஏ.பி.கோமளா. தன் தந்தையிடம், 6 வயதில் கர்நாடக இசையை கற்றார். 9வது வயதில் சென்னை வானொலி நிலையத்தின், 'ஏ கிரேடு' பெற்று, வானொலி நிலைய பாடகியானார். தன் 13வது வயதில், வேலைக்காரி திரைப்படத்தில், 'உலகம் பலவிதம்...' என்ற பாடலை பாடி பின்னணி பாடகியானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில், 20 ஆண்டுகள் பின்னணி பாடகியாக கோலோச்சினார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சி.ஆர்.சுப்புராமன், விஸ்வ நாதன் - ராமமூர்த்தி, சி.எஸ்.ஜெயராமன்,டி.ஆர்.பாப்பா, கண்டசாலா உள்ளிட்டோரின்இசையில், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தரராஜன், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம்,கே.ஜே.ஜேசுதாஸ், பி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து பாடினார்.
'எங்கள் இந்திய பாரதியே, குண்டுமல்லி வளர்ந்திருக்கு, முல்லை மலர்க்காடு, அல்லி விழி ஆசை...' உள்ளிட்ட பாடல்கள் பாடிய இவர், 2024, ஏப்ரல் 26ல் தன் 90வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

