PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

ஏப்ரல் 6, 1909
சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியின் மகனாக 1909ல், இதே நாளில் பிறந்தவர் ராம.அழகப்ப செட்டியார்.
இவர், காரைக்குடி எஸ்.எம்.எஸ்., வித்யாசாலையிலும், சென்னை மாநிலக் கல்லுாரியிலும் படித்தார். கேரள மாநிலம், புதுக்காடு கிராமத்தில், 'கொச்சி டெக்ஸ்டைல்ஸ்' துணி ஆலையை துவக்கினார். தொடர்ந்து, மலேஷியாவில் தேயிலைத் தோட்டம், மியான்மரில் அலுமினிய சுரங்கம், கோல்கட்டாவில் காப்பீடு, மும்பையில் ஹோட்டல், சென்னையில் தியேட்டர், பங்கு மூலதனம், தனி விமான சேவை உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட்டார்.
காரைக்குடியில் அழகப்பா கலைக்கல்லுாரி, தேசிய ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகங்களை உருவாக்கினார். பல கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கினார். சர், டாக்டர் பட்டங்கள், பத்மபூஷண் விருது பெற்ற இவர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தன் 47வது வயதில், 1957 ஏப்., 5ல் மறைந்தார்.
கல்வி வள்ளல் அழகப்பா செட்டியார் பிறந்த தினம் இன்று!

