PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

செப்டம்பர் 10, 1911
தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியில்,1846ம் ஆண்டு, ஏப்ரல் 12ல்பிறந்தவர் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள். இவர், சிறுவயதிலேயே வேதங்களை கற்று தேர்ந்தார். அச்சு இயந்திரம் இல்லாத அந்த காலத்தில், கையால் படிவங்கள் தயார் செய்து, 'பிர்மவித்யா' என்ற ஆன்மிக மாத இதழை நடத்தி, வேதக் கருத்துக்களை பரப்பி ஆன்மிகம் வளர்த்தார்.
உலக அமைதிக்காக, யாகங்களை செய்தார். புதுக்கோட்டை மன்னரின் குருவாக இருந்த இவர், அவரின் நிதியுதவியுடன், காலடியில் ஆதிசங்கரர் மடத்தை அமைத்தார். ஆதிசங்கர் குறித்து ஆய்வுகள் செய்து, பல நுால்களை எழுதினார்.
தமிழகத்தில் சிதைந்த கோவில்களை, மக்களின்துணையுடன் சீரமைத்தார். தமிழகம் வந்த திலகருக்கு, தமிழக மக்களின் கருத்துக்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி மடத்தின் ஆஸ்தான பண்டிதராகவும் இருந்தார். 'பிளேக்' நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர், 1911ல் தன், 65ம் வயதில் இதே நாளில் மறைந்தார்.
வேதம், ஆன்மிகம், சமூக பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர் மறைந்த தினம் இன்று!

