/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
விஜய் கட்சிக்கு வெற்றி கிட்டுமா ?
/
விஜய் கட்சிக்கு வெற்றி கிட்டுமா ?
PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கியுள்ளார். 'அரசியல் இன்னொரு தொழில் அல்ல, மக்களுக்கு ஆற்றும் புனிதமான சேவை. அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, நீண்டகால வேட்கை' என்றும், பளிச்சென கூறியுள்ளார்.
அவருக்கு முன், அரசியலுக்குள் புகுந்த முன்னோடிகளின் அனுபவம் விஜய்க்கு முன்னுரையாக இருக்கும்...
நடிகர் ரஜினிகாந்த், 1996ல் விடுத்த அரசியல் அறைகூவலால், தி.மு.க., - த.மா.கா., கூட்டணி அபார வெற்றி பெற்றது. அப்போதே, ரஜினி அரசி யலுக்கு வந்திருந்தால், முதல்வராகியிருப்பார்; ஆனால், அவர் வராமல் பதுங்கி விட்டார்.
அடுத்து, ஜெ., மறைந்த பின்னும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் கைவிட்டார்.
மார்க்சிஸ்ட் தலைவர்களை சந்தித்து, ஆலோசனை பெற்று கட்சி துவங்கினார் கமல்ஹாசன். முற்போக்கு இடதுசாரி சிந்தனைகளை வெளிக்காட்டினார். திறமைமிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் தொழில் முனைவோர் துணை நின்றனர்.
ஆனாலும், உட்கட்சி ஜனநாயகம், சிறு நகரங்களில் கட்சி கட்டமைப்பு இல்லாததால், கட்சி முன்னோடிகள் வெளியேறினர். பொறுப்பு, அதிகார பகிர்வு, அங்கீகாரம் இவைகளை கவனமாக செய்திருந்தால், கமல் கட்சி இன்று இன்னும் பலமாக இருக்கும்.
விஜயகாந்த் கட்சி துவங்கியபோது உணர்வுப் பூர்வமான தொண்டர்களை தமிழகம் எங்கும் பார்க்க முடிந்தது. ஆயினும், குடும்ப அரசியல், எதிர்பாராத உடல்நலக்குறைவு போன்றவற்றால் அக்கட்சி வீழ்ச்சியை சந்தித்தது. வெளிப்படையான, துணிச்சலான விஜய காந்தின் மறைவு தமிழக அரசியலுக்கே இழப்பு தான்.
தமிழகத்தில் கடந்த 1967ல் இழந்த ஆட்சியை, காங்கிரசால் இன்னும் மீட்க முடியவில்லை. தமிழகத்தில் ஏதாவது ஒரு மாற்று அரசியல் சக்தி கண்ணுக்கு தெரியாதா என, வாக்காளர்கள் ஏங்குவது உண்மை.
சமுதாயத்தை சீரழிக்கும் மது கலாசாரம், கொள்ளை போகும் இயற்கை வளங்கள், புரையோடி போய்விட்ட லஞ்சம், ஊழல் இவற்றுக்கு எல்லாம் விமோசனம் கிடையாதா என, மக்கள் காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், விஜய் கட்சிக்கு வெற்றி கிட்டும்!
காங்., தனித்து போட்டியிட வேண்டும்!
கு.அருண், கடலுாரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்த பின்,
நம்மை பெரும்பாலும் மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி தான். 55
ஆண்டுகள் அவர்கள் நம்மை ஆட்சி செய்துள்ளனர்.
ஆனால், 1970களில்
இருந்தே பெரும்பாலும் கூட்டணி அமைத்து தான் காங்., போட்டியிட்டுள்ளது.
இதனால், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை சிறிது சிறிதாக
மாநில கட்சிகளிடம் இழந்து வந்தது.
உதாரணமாக, 1970களுக்கு முன்பு,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தான் இருந்தது. பின், இரண்டு
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்று துவங்கியது முதல், தன் ஓட்டு வங்கியை
இழக்க ஆரம்பித்தது.
இதுபோன்று பல மாநிலங்களில் சறுக்கி காங்.,
தற்போது, கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மூன்று
மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சியில் உள்ளது.
'இண்டியா' கூட்டணி
கட்சிகள் கூட, ஒருமித்த கருத்துடன் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க
மறுத்து, மல்லிகார்ஜுன கார்கேவை தான் அறிவித்துள்ளன. பீஹாரில் நிதீஷ்
குமார், கழன்று ஓடி விட்டார்; மேற்கு வங்கத்தில், காங்., கட்சிக்கு சீட்கள்
ஒதுக்க முடியாது என, மம்தா கூறிவிட்டார்.
பஞ்சாபிலும், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி என, அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணி இப்போதே சிதறி விட்டது என்பதற்கு இவை உதாரணம்.
இதனால்,
நிஜமான காங்., தொண்டர்கள் பலரும், 'ஏன் காங்கிரஸ் கட்சி, லோக்சபா
தேர்தலில் நாடு முழுதும் தனித்துப் போட்டியிடக் கூடாது' என்று
கேட்கின்றனர்.
இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர்
வேட்பாளராக யாரையும் முன்னிலைப் படுத்தாமல், நாடு முழுதும் தனித்து
போட்டியிட்டு, தன் ஓட்டு வங்கியை உயர்த்த வேண்டும். 2019ல் காங்., வெற்றி
பெற்ற, 52 தொகுதிகளைவிட ஒரு தொகுதி அதிகமாக கிடைத்தாலே, அது கட்சிக்கு
மாபெரும் வெற்றியாக அமையும்.
பா.ஜ.,வுக்கு நிகராக, நாடு முழுதும்
உள்ள ஒரே எதிர்க்கட்சி காங்., மட்டுமே. எனவே, அடுத்த ஐந்தாண்டுகள் நாடு
முழுதும் கட்சியை பலப்படுத்தும் வகையில், பல்வேறு யாத்திரைகளை ராகுல்
மேற்கொள்ளலாம். இதன் வாயிலாக, 2029 லோக்சபா தேர்தலில், ராகுலை பிரதமர்
வேட்பாளராக முன்னிறுத்தி, துணிச்சலாக தேர்தலை சந்திக்க முடியும். இதை
காங்., மேலிடம் யோசிக்குமா?
தேச விரோத சட்டத்தில் நடவடிக்கை!
வெ. சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், 'வந்தே பாரத்' சொகுசு ரயில், துாத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று, சரமாரியாக கற்களை வீசி தாக்கியதில், ஏழு பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாக செய்திகள் கூறுகின்றன; நல்லவேளை, பயணியருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்த செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயலை செய்த விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, உரிய தண்டனை அளிப்பதுடன், ரயில் பெட்டிகளை பழுது பார்ப்பதற்கான தொகையையும் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
இதுபோன்று, ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசுவது, தண்டவாளங்களில் பழைய டயர்கள், கற்கள் போன்ற தடைகளை வைப்பது போன்றவைகள் அப்பட்டமான வக்கிர குணத்தின் வெளிப்பாடு. இது, பல ஆயிரம் மக்களின் உயிருடன் விளையாடும் ஆபத்தான விளையாட்டும் கூட.
மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது போராட்டமென்றால், உடனே ரயில்கள் செல்லும் பாதையில் உட்கார்ந்து கொள்வது, ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவது, பாஸ்போர்ட், தபால், வருமான வரி போன்ற மத்திய அரசு அலுவலகங்களே பெரும்பாலும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு செய்பவர்கள், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் போன்ற விஷமிகளை, தேச விரோத சட்டத்தில் கைது செய்து, தண்டிக்க வேண்டியது அவசியம்.

