PUBLISHED ON : மே 30, 2026 12:48 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், சின்னதாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் கூட, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், தி.மு.க., ஆதரவு கோஷ்டியினர், கூப்பாடு போட்டு, அந்த விஷயத்தை பெரிதாக்கி விடுவர். அவ்வகையில், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பரந்துார் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போன்ற பல போராட்டங்கள், அ.தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்தன.
ஆனால், 2021 ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த சமூக ஆர்வலர்களின் ஐம்புலன்களும் செயலிழந்து போக, ஐ.சி.யூ.,வில் அட்மிட் ஆகி விட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் கோமாவில் இருந்த இந்த சமூக, 'போர்வைகள்' தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து விட்டது என்றதும், 'படக்'கென்று எழுந்து அமர்ந்து, சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டன.
சமீபத்தில், கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். அக்குழந்தையின் உறவினர்கள், சூலுார் காவல் நிலையம் வரவே, விஷயம் அறிந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கே வந்து, சிறுமியின் உறவினர்களிடம் பேசியுள்ளனர்; அதன்பின் மறியல் போராட்டம் நடந்துள்ளது.
இப்போராட்டத்தை துாண்டி விட்டது, தி.மு.க., - கம்யூனிஸ்ட் - இஸ்லாமிய மாணவர் அமைப்பு என சொல்லப்படுகிறது.
பழனிசாமி ஆட்சியில் நெருக்கடி கொடுத்தது போல், தற்போது, த.வெ.க., அரசுக்கும் நெருக்கடி தருவதே இவர்களது நோக்கம்!
இவர்களுக்கு, நிதி மற்றும் சட்ட உதவிகள் தாராளமாக கிடைக்கின்றன. கூடவே, தி.மு.க., ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இப்போராட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வேலையை செவ்வனே செய்கின்றன.
'த.வெ.க., ஆட்சியை, குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது தொந்தரவு செய்ய மாட்டோம்' என்று, தி.மு.க., கூறினாலும், 'சினிமா கவர்ச்சி, மாயவலை, வெகுநாட்கள் நீடிக்காது, சமூக வலைதளம் மற்றும் சிறுவர்களைப் பயன்படுத்தி அடைந்த வெற்றி' என்று, இப்போதே தன், எதிர்ப்பு அரசியலை துவங்கி விட்டது.
இனி வரும் நாட்களில் இது இன்னும் அசுர வேகத்தில் அதிகரிக்கும். ஏற்கனவே, தான் கட்டிக்காத்த கூட்டணி, இன்று சீட்டுக்கட்டுபோல் சரிந்து விட்டதே என்ற கோபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால், ஐந்தாண்டுகளாக, 'அம்பறா துாணி'யில் பத்திரப்படுத்தி வைத்திருந்த, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் இந்த விஷ அம்புகள், ஆர்ப்பாட்டம், போராட்டம், அவதுாறு பரப்புதல் போன்ற வேலைகளை செய்ய நான்கு திசைகளில் இருந்தும் புறப்பட்டு வரும்.
இந்த விஷ அம்பு வலைக்குள், த.வெ.க., மாட்டிக் கொள்ளுமா அல்லது பதில் தாக்குதல் அளித்து, ஐந்தாண்டுகளை நிறைவு செய்யுமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
lll
அரிச்சந்திரர்களே... நடிக்காதீர்கள்! ஏ.ரகுராமன், ரெட்டியார் பாளையம்,
புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை பல
ஆண்டுகளாக ஆட்சி செய்த, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், 'கட்சித் தாவல்'
என்ற கலாசாரத்தை இன்று தான் புதிதாக பார்க்கின்றனவா?
ஒவ்வொரு
ஆட்சி மாற்றத்தின்போதும், ஒரு கட்சியில் இருந்தவர்கள், மற்றொரு கட்சிக்கு
செல்வதும், மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடைபெறுவது தானே!
கடந்த, தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தோரில் பலர்
அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள்; அதேபோல், அ.தி.மு.க.,வில் முன்னாள்
தி.மு.க.,வினரும் இருக்கின்றனர்.
கூட்டணி கட்சி உறுப்பினர்களையே
தங்கள் கட்சிக்குள் இழுத்து வருவது என்பது, தி.மு.க.,வின் பழைய அரசியல்
உத்திகளில் ஒன்று தானே தவிர, புதிதாக நடப்பது அல்ல.
ஆனால், இன்று
அதையே மற்றொருவர் செய்கிறார் என்றதும், 'அரசியல் நாகரிகம், நேர்மை, ஜனநாயக
மரபு' என்று அரிச்சந்திரர்கள் போல் பேசுகின்றனர்.
நேற்று திராவிட கட்சிகள் செய்ததை இன்று, புதிய கட்சி செய்கிறது.
அரசியல்வாதிகளின் இந்த அக்கப்போருக்கு முடிவுரை எழுதத்தான், கட்சித் தாவல் தடை சட்டமே கொண்டு வரப்பட்டது.
அதேநேரம், ஒரு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றொரு கட்சிக்கு
தாவினால், பதவி இழக்க வேண்டும் என்று கட்சி தாவல் தடை சட்டம்
உருவாக்கப்பட்ட போதே, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், ஒரே நேரத்தில்
பிரிந்து சென்றால், அந்தச் சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற ஓட்டையையும்
போட்டனர்.
சட்டமே அரசியல் கணக்குகளை மனதில் வைத்து தான்
உருவாக்கப்பட்டுள்ளது எனும் போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயையும்,
அவரது அரசியல் நகர்வுகளையும் குறை கூறுவது எப்படி சரியாகும்?
ஆட்சியை பிடிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் எந்த வழிமுறையையும் பயன்படுத்துவது தான், இந்திய அரசியலின் சாணக்கியக் கொள்கையே!
அது காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இருந்தது; திராவிடக் கட்சிகளின் காலத்திலும் தொடர்ந்தது; இனியும் கூட தொடரக்கூடும்.
எனவே, இன்று நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவது போல நடிப்பதை விட, அரசியல் கட்சிகள் முதலில் தங்களை சீர்செய்ய வேண்டும்.
குதிரை ஓடுவதற்கு முன் லாயத்தை பூட்டி வைக்க வேண்டுமே தவிர, ஓடிய பின் பூட்டுவதிலோ, புலம்புவதிலோ அர்த்தமில்லை!
lll
தேர்தல் ஆணையம் அபராதம் விதிக்குமா? எம்.விக்னேஷ், மதுரையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு
பேர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தது, அக்கட்சி பொதுச்செயலர்
பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஓட்டு போட்ட
மக்களுக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாக இருந்திருக்கும்.
இன்னும் எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி வருமோ தெரியவில்லை.
தேர்தல் செலவினங்கள், நேரம் மற்றும் உழைப்பை கட்டுப்படுத்த, 'ஒரே நாடு,
ஒரே தேர்தல்' என்று சொல்லும் தேர்தல் ஆணையம், இதுபோன்று ஒரே வேட்பாளர் இரு
தொகுதிகளில் நின்று, பின் ஒன்றை ராஜினாமா செய்வதையும், ஒரு கட்சியில்
நின்று வெற்றி பெற்று, தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அடுத்த கட்சிக்கு
தாவுவோருக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
இவர்களின் சுயநல அரசியல் விளையாட்டுக்கு, மக்களின் வரிப்பணம் தான் கிடைத்ததா?
இப்படி பதவி விலகும் எம்.எல்.ஏ.,க்களிடம், இடைத்தேர்தலுக்கான செலவு தொகையை
வசூலிப்பதுடன், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடாதவாறு, தேர்தல்
ஆணையம் சட்டம் கொண்டு வரவேண்டும்!
lll
