தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பிராமண அமைச்சரை மட்டும் எதிர்ப்பது ஏன்?

 பிராமண அமைச்சரை மட்டும் எதிர்ப்பது ஏன்?

 பிராமண அமைச்சரை மட்டும் எதிர்ப்பது ஏன்?

2


PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.வாகைச்செல்வி, திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. தன் அமைச்சரவையையும் சமீபத்தில் விரிவாக்கியது.

புதிதாக பதவியேற்ற, 23 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்தபோது, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,வான ரமேஷ், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோது எழாத சர்ச்சை, ரமேஷுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டவுடன், எழ ஆரம்பித்து விட்டது. காரணம், ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.

'பிராமண சமூகத்தைச் சார்ந்தவருக்கு, எப்படி ஹிந்து அறநிலையத் துறையை கொடுக்கலாம்?' என, சமூக நீதியை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் நபர்கள், வரிந்து கட்டி, பிரச்னை கிளப்பத் துவங்கி விட்டனர்.

உடனே, அமைச்சர் ரமேஷும், 'நான் பெரியார் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன்' என, தன்னிலை விளக்கம் கொடுத்து, ஈ.வெ.ரா., சிலையுடன் எடுத்த போட்டோவையும் வெளியிட்டார்.

இதே ஆட்சியில், சபாநாயகராக பதவியேற்ற பிரபாகர், பைபிள் வசனங்களை, தன் பதவியேற்பின்போது சொன்னார். தான் ஒரு கிறிஸ்து என்பதை மறைக்கவோ, மறுக்கவோ விரும்பவில்லை.

அதேபோல், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் ஷாஜகான், தன் இருக்கையில் அமரும் முன், தன் மதகுருவை வரவழைத்து தொழுகை நடத்திய பிறகே அமர்ந்தார். அவர், தான் ஒரு முஸ்லிம் என்பதை மறைக்க விரும்பவில்லை.

ஏன், முதல்வரே, தன் மதத்தை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.

சினிமாவில் நடிக்கும் வரை, விஜயாக இருந்த அவர், முதல்வராகப் பதவி ஏற்கும்போது, ஜோசப் விஜய் என்று, தன் மதத்தின் அடையாளத்துடனேயே பதவியேற்றுள்ளார்.

இவர்கள் அனைவரும், தாங்கள் சார்ந்த மதத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்தத் தயங்காதபோது, ரமேஷ் மட்டும், ஏன் தயங்க வேண்டும்? தைரியமாக தன் மதத்தையும், ஜாதியையும் ஒத்துக் கொள்ளட்டுமே? பிறப்பால் ஒருவரை புறக்கணிக்கக் கூடாது என்பது தானே சமூக நீதி? ரமேஷுக்கும் இது பொருந்துமே? அவரை மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்?

மற்றவர்களுக்கு, இந்த தமிழகத்தில் வாழ எப்படி உரிமை உள்ளதோ, அதே போல, பிராமணர்களுக்கும் உரிமை உண்டு. பிராமண ஓட்டுக்களும், விஜய்க்கு விழுந்திருக்குமே!

மற்ற இனத்தவர்களுக்கு அமைச்சர் ஆக எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை, பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு.

பிராமணர்கள் என்னவோ தீவிரவாதிகள் போலவும், அவர்களுக்கு பதவி கொடுத்தால், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து விடுவர் என்பது போலவும், அவர்களால், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விடும் என்பது போலவும், அவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு, அவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் துறையும், வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், விளையாட்டில் ஆர்வம் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு விளையாட்டுத் துறையும் கொடுக்கும்போது ரமேஷுக்கு, ஹிந்து அறநிலையத் துறை கொடுத்ததில் என்ன தவறு?

ரமேஷ், தன் துறையை எப்படி கவனிக்கிறார் என்றும், திறம்பட செயல்படுகிறாரா என்று மட்டும் பாருங்கள். மற்றபடி யாரும், கோணங்கித்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்!

lll

புதியவர்கள் கைகளில் தமிழகம் மலரட்டும்! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என்று, தி.மு.க., கனவிலும் நினைத்திருக்காது; அதேபோன்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவோம் என்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் நினைத்திருக்க மாட்டார்.

விஜய் விஸ்வரூபம் எடுப்பார் என்று, நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட, மற்ற கட்சிகளும் எதிர்பார்த்திருக்காது.

கடைசி நேரத்தில் மகளிருக்கு வழங்கிய, 5,000 ரூபாய், தி.மு.க., ஆட்சியை தக்க வைத்துவிடும் என்று ஸ்டாலினும், 11 சதவீத ஓட்டு வங்கி வைத்திருந்த பா.ஜ.,வுடனும், பா.ம.க.,வுடனும் வலுவான கூட்டணி அமைத்திருப்பதால் ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் என்று, பழனிசாமியும் கனவு கண்டு கொண்டிருந்தனர்.

ஆனால், இவ்விரு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் ஏமாற்றத்தையே பரிசாகக் கொடுத்ததால், தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஆற்றாமையால் பொங்குகின்றனர், புலம்புகின்றனர்.

கிட்டத்தட்ட, 60 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டும் திருப்தி இல்லை; 'புதியவர்கள் வரட்டுமே' என்கிற பரந்த மனப்பான்மை இல்லை. மாறாக, பொறாமை தீ பற்றி எரிகிறது இவர்களிடத்தில்!

எப்படியோ, 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஊழல் பெருச்சாளிகள் அகற்றப்பட்டு, புதியவர்கள் கைகளில் ஆட்சியதிகாரம் வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமே!

புதியவர்களின் கை களில் தமிழகம் மலரட்டும்!

lll

கட்டண முறையில் மாற்றம் வருமா? ஜெ.ஜி.சுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இருமாத மின்கட்டண முறை காரணமாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் ஒரே நேரத்தில் அதிக தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால், குடும்பச் செலவு பாதிக்கப்படுவதோடு, கட்டணம் செலுத்த தாமதமும்ஏற்படுவதுடன், பலர்கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

இருமாத மின் கட்டண முறையில், கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த, '100 யூனிட் இலவச மின்சாரம்' திட்டத்தின் பலனை பல குடும்பங்களால் பெற முடியவில்லை.

மாதாந்திர கணக்கீடு நடைமுறைக்கு வந்தால், மக்கள் தங்களது மின் நுகர்வை சீராக கட்டுப்படுத்தி, குறைந்த கட்டணம் செலுத்த முடியும்.

எனவே, முதல்வர் விஜய், 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிப்பதை விட, மாதாந்திர மின் கட்டண முறையை கொண்டு வந்தாலே போதும்; மக்களின் சிரமம் வெகுவாக குறைந்து போகும்.

டிஜிட்டல் மீட்டர்கள், ஆன்லைன் கட்டண வசதிகள், 'ஸ்மார்ட் மீட்டர்' போன்ற தொழில்நுட்பங்கள் விரிவடைந்துள்ள நிலையில், மாதாந்திர கட்டண முறை நிர்வாக ரீதியாகவும் சாத்தியமானதாகும்.

பல மாநிலங்களில் இது வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் நலனை முன்னிறுத்தும் புதிய அரசு, மக்களின் இந்த நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us