PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

டாக்டர்
மு.தங்கமுத்து, பொள்ளாச்சி-யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'திண்ணையில் கிடந்தவனுக்கு திடீர் யோகம் அடிச்சது மாதிரி, முதல்வர்
பதவிக்கு வந்தவர் பழனிசாமி; அவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது;
அவர் மனம் முழுதும் துரோகம் எனும் நஞ்சு தான் நிறைந்திருக்கிறது' என்று
நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார், தி.மு.க., முதல்வர்
ஸ்டாலின்.
அவரது தந்தை கருணாநிதி எப்படி சென்னைக்கு வந்தார், முதல்வர் பதவியை எப்படி அடைந்தார் என்பதை ஸ்டாலின் மறந்து விட்டாரா?
இன்று, தன்னை முத்துவேல் கருணாநிதி என்று, ஏதோ ராஜராஜ சோழனின் வாரிசு
போன்று நீட்டி முழக்கும் ஸ்டாலினுக்கு, அந்த முத்துவேல் என்ன பணி செய்து
பிழைப்பு நடத்தினார் என்பது தெரியாதா?
திருவாரூரில் கோவிலில்
இறைவனுக்கு மேளம் வாசித்து, அந்த வருமானத்தில் வாழ்ந்தவர் தான் முத்துவேல்;
அவரது மகன் கருணாநிதி திருவாரூரில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த
காலத்தில், தன் மாமன் ஜெயராமன், சென்னையில் சினிமா பாடகராக கோலோச்சுவதை
அறிந்து, கையில் ஒரு மஞ்சள் பையுடன், ரயில் கட்டணம் செலுத்தக்கூட காசு
இல்லாத நிலையில், திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர்.
தி.மு.க., நிறுவனரான அண்ணாதுரைக்கு, 'ஜால்ரா' அடித்து, அவர் வால் பிடித்து,
தி.மு.க.,வில் நுழைந்தவர், அவரது மறைவிற்கு பின், எம்.ஜி.ஆரை காக்கா
பிடித்து, முதல்வர் பதவிக்கு வந்தவர் தான் கருணாநிதி.
கட்சியின் வரவு - செலவு கணக்கு கேட்டார் என்பதற்காக, நன்றி மறந்து, எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கினார், கருணாநிதி.
அவ்வகையில், கருணாநிதி - பழனிசாமி இருவரும் ஒரே தராசில் தான்
இருக்கின்றனர். பழனிசாமியின் மனம் முழுதும் நஞ்சு நிறைந்தது என்றால்,
எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய கருணாநிதியின் மனம் முழுதும்
கருணையிலா நிரம்பி இருந்தது?
ஆரம்பகாலத்தில், எம்.ஜி.ஆரும்,
கருணாநிதியும் எப்படி அடிமட்டத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து, பின்
அரசியலில் கோலோச்சினரோ அதைப் போன்று தான் பழனிசாமியும், அ.தி.மு.க., கிளை
செயலர் பதவியிலிருந்து மாவட்ட செயலர், அமைச்சராகி, ஒரு கட்டத்தில்
முதல்வராகவும் ஆக்கப்பட்டார்.
கருணாநிதி எப்படி முதல்வர்
வேட்பாளராக தேர்தலில் வெற்றி பெறாமல், கட்சி மூத்த தலைவர்கள்,
எம்.எல்.ஏ.,க்களை, 'தாஜா' செய்து, முதல்வர் பதவிக்கு வந்தாரோ, அதைப்
போன்று தான் பழனிசாமியும் முதல்வர் ஆனார்.
அவ்வகையில், ஸ்டாலின் மொழியில் கூறுவது என்றால், இருவருமே திண்ணையில் கிடந்து, திடீர் யோகத்தில் முதல்வர் ஆனவர்கள் தான்!
இதில் பழனிசாமியை மட்டும் பழிப்பது ஏன்?
எதற்கு இந்த வெட்டி வீரம்?
என்.கந்தையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால், பழைய தி.மு.க.,வை பார்ப்பீர்கள்' என மத்திய அரசுக்கு, 'வீடியோ' பதிவு வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.
இந்த மிரட்டலுக்கு எல்லாம் பிரதமர் அஞ்சி நடுங்குவாரா என்பது வேறு விஷயம்.
ஆனால், 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில், குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற உடன்பிறப்புகள், விடுதலை அடைந்து வெளியே வந்தவுடன், தங்கள் பெயர்களுக்கு முன் இனிஷியலைப் போன்று, 'மிசா' என்று போட்டுக் கொண்டதையும், எமெர்ஜென்சி காலகட்டத்தில் கரை வேட்டிகளை துறந்து, 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று தமிழகத்திலிருந்து தப்பி, ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாக பதுங்கி இருந்ததைப் போல், தற்போதும் காண, தமிழக மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதுவரை, 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த ஸ்டாலின் கண்களில், தோல்வி பயம், அப்பட்டமாக தெரிய துவங்கி உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த மிரட்டல்!
உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் மாறுதலுக்கு உட்பட்டவையே; இரண்டு வயதில் அணிந்த ஆடைகளை, 20 வயதில் அணிய முடியுமா?
தொகுதி மறுவரையறையின் வாயிலாக, 543 லோக்சபா இடங்கள், 850 ஆக உயரப்போகிறது. எதுவும் முறையாக வெளியாகும் முன், எதற்கு இந்த கொதிப்பு?
கடந்த 1960களில் ஆடிய ஆட்டத்திற்கு, 1975ல் தி.மு.க.,வினர் கட்சி வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு, தமிழகத்தை விட்டே ஓடி ஒளிந்ததை ஸ்டாலின் மறந்து விட்டார் போலும்!
அன்று, கருணாநிதி மட்டும் தான் மெகா ஊழல்வாதியாக இருந்தார்; இன்றோ, கட்சியில் உள்ள கிளை செயலர்கள் முதல் அமைச்சர்கள் வரை, கை நீட்டி பைக்குள் வாங்கிப் போடுவதில் வல்லவர்களாக இருக்கும் போது, முதல்வருக்கு இந்த வெட்டி வீரம் தேவையா?
திருமாவுக்கு தகுதி இல்லை!
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆடி ஓடி உழைக்காமல் சினிமாவில் ஆட்டம் போட்டால் போதும்; அடுத்த முதல்வர் ஆகிவிடலாம் என, சிலர் கனவு காண்கின்றனர்' என்று, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
விஜய் மக்களுக்காக உழைக்கவில்லை சரி; கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமாவளவன் ஆடி ஓடி மக்களுக்காக உழைத்த ஆக்கப்பூர்வமான பணிகள் எத்தனை?
வேங்கை வயலில் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் முதல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்காக திருமாவளவன் உழைத்து பெற்றுக் கொடுத்த நியாயம் தான் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ ஆணவக் கொலைகள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. தலித் மக்கள் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர்; அவமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கெல்லாம் குரல் கொடுத்து, உழைத்து களைத்து விட்டார் போலும் திருமாவளவன். அதனால், இவர் முதல்வர் கனவு காணலாம்; ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று குரல் எழுப்பலாம்...
அதேநேரம், விஜய் ஆசைப்பட்டால், அது மட்டும் கனவா?
மேலும், அ.தி.மு.க., போர்வையில், பா.ஜ., - சங்பரிவார் தமிழகத்தில் உள்ளே வந்துவிடும் என்று, தன் இயலாமைக்கு முட்டுக் கொடுக்கிறார்.
பெரும்பாலான மாநிலங்களில் ஆள்வது பா.ஜ., அரசு தான்; ஏன் கடந்த பார்லிமென்ட் தேர்தலின்படி, பா.ஜ., தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி.
உண்மை இவ்வாறு இருக்க, 'பா.ஜ., உள்ளே வந்து விடும்' என்ற பெயரில், தி.மு.க.,விற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் செய்யாமல், அவர்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், அதிகாரத்திற்காக ஆளுங்கட்சிக்கு அடிவருடிக் கொண்டிருக்கும் திருமாவளவனுக்கு, நடிகர் விஜய் குறித்து மட்டுமல்ல; எந்த ஓர் அரசியல் கட்சியையும் விமர்சிக்க தகுதி இல்லை!
