தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ வருக விஜய்; நல்லாட்சி தருக!

 வருக விஜய்; நல்லாட்சி தருக!

 வருக விஜய்; நல்லாட்சி தருக!

2


PUBLISHED ON : மே 05, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2026 12:36 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.பரத்வாஜ் ஐயர், ஆடிட்டிங் நிறுவன துணை அதிகாரி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: தமிழகத்தில் புதிதாக தோன்றியுள்ள, நடிகர் விஜயின் த.வெ.க., நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின், மூன்று பெரும் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு விட்டன. முதலில் காங்கிரஸ்; அதன் பின், மாறி மாறி ஆட்சி அமைத்த, தி.மு.க.,வும், அதி.மு.க.,வும் ஊழல் சாம்ராஜ்ய கோட்டைகளாக மாறி விட்டன என்பதை மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.

அத்தகைய மாபெரும் சலிப்பே, புதிய மாற்றுக் கட்சி ஒன்று, தமிழகத்தில் தோன்றாதா என்று மக்களை சிந்திக்க வைத்து விட்டது.

தி.மு.க., - அ.தி.மு.க.,வின் அவல ஆட்சியைப் பார்த்து, மனம் புழுங்கி, வெதும்பிக் கிடந்த மக்களுக்கு, விஜயின் த.வெ.க., வரவு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களும், விஜய் பக்கம் திரும்பி விட்டனர் என்பதை, இத்தேர்தல் அப்பட்டமாகக் காட்டி விட்டது.

'கை நிறைய காசு, பெண்களுக்கு ஏகப்பட்ட சலுகை, தங்கக் காசு, வெள்ளிக் காசு என, தி.மு.க., - அ.தி.மு.க., என எந்த கட்சி கொடுத்தாலும் வாங்கி, பையில் போட்டுக் கொள்வோம்; ஏனெனில் அவை நம்மிடமிருந்து அக்கட்சியினர் அடித்துப் பிடுங்கியவை. ஆனால் இம்முறை விஜய் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம்' என, தீர்மானமாய் இருந்து, அமைதியாக புரட்சி செய்து காட்டி விட்டனர், மக்கள்.

வாங்க விஜய்; முதல்வர் பதவியில் அமருங்கள்!

இனி... முதன்முறையாக ஆட்சி நடத்தப் போகிறீர்கள். சினிமா காட்சிகள் போல அல்லாமல், சட்டசபையும், அரசு நிர்வாகமும் வேறு விதமாய் இருக்கப் போகின்றன.

யதார்த்த களத்தைப் புரிந்து கொள்ள, உங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறோம். அரசு நிர்வாகம், எளிதானது அல்ல.

ஓட்டு அள்ளும் மனப்பான்மையில், முன்பு ஆட்சி செய்தவர்கள் தீட்டிய திட்டங்களை அலசி ஆராய்ந்து, எது வேண்டுமோ அதைத் தொடர வைத்து, வேண்டாததை நீக்கி நல்லாட்சி புரிவீர்கள் என, மனப்பூர்வமாக நம்புகிறோம்.

மிக அத்தியாவசியமான, அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும், எந்த தரப்பு மக்களும் மனம் கோணாமல் இருக்கும் வகையில், திட்டங்கள் தீட்ட சிறந்த அனுபவம் பெற்ற அதிகாரிகளை அருகில் அமர்த்தி, அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்டு, சீர்துாக்கிப் பார்த்து திறம்பட ஆட்சி புரிவீர்கள் என்று நம்புகிறோம்.

காமராஜரோ, கருணாநிதியோ, எம்.ஜி.யாரோ, ஜெயலலிதாவோ... அவர்கள், முதல்வர் பதவியில் அமர்வதற்கு முன், எம்.எல்.ஏ.,க்களாக பதவி வகித்து, சட்டசபையில் அமர்ந்து, அங்கு நடந்த விவாதங்களை, அரசு நடைமுறையை, நிர்வாகத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

அந்த அனுபவங்கள் உங்களுக்கு இல்லை என்றாலும், மிகச் சிறந்த மூத்த தலைவர்களின் ஆலோசனை களைக் கேட்டு நடந்து, சிறப்பாக ஆட்சி நடத்துங்கள்; மக்களாகிய நாங்கள் உங்களுக்கு துணை இருப்போம்!

தண்டனை பெற்றவர்கள் வாழத் தகுதி அற்றவர்களா?


சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குற்றச்செயலுக்கு சிறையில் தண்டனை அனுபவித்த பின், விடுதலை அடைந்தவர் தன் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது மரியாதையான தொழில் செய்து வாழ்வது தானே நடைமுறை? இதைத்தானே சட்டமும் விரும்புகிறது?

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், வழக்கறிஞராகி பார் - கவுன்சிலில் பதிவு செய்ததை காங்கிரசார் எதிர்க்கின்றனர்.

அதேநேரத்தில், ராஜிவ் கொலைக்கு காரணமான விடுதலை புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவுடன் கூட்டணி அமைத்து, தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.

காங்., கூட்டாளியான தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், பேரறிவாளன் விடுதலை ஆகி வந்தவுடன், முதல் ஆளாக அவரை வரவேற்று வாழ்த் தியதை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு கருணை மனுவால் விடுதலையானவர், எப்படி வழக்கறிஞர் தொழில்செய்யலாம் என்று எதிர்க்கின்றனர், காங்கிரசார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட, '2ஜி' வழக்கில் கைதாகி, தன் வாத திறமையாலும், சட்டத்தில் உள்ள ஓட்டையாலும் வெளிவந்துள்ள தி.மு.க., - எம்.பி., ராஜாவுடன் எப்படி காங்கிரசார் உறவு வைத்துள்ளனர்?

தி.மு.க.,வால் ஊழல்வாதி என பிரகடனப்படுத்தப்பட்டு பின், அவர்களாலேயே பாவ மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜியை காங்கிரசார் ஒதுக்கி வைத்து விட்டனரா?

தங்களாலும், தங்கள் காப்பாளரான தி.மு.க., வினராலும், 'ஊழல்வாதிகள்' என்று முத்திரை குத்தப்பட்ட ராஜா, செந்தில் பாலாஜி போன்றோர் மீண்டும் அமைச்சரானதையோ, பார்லிமென்ட் உறுப்பினரானதையோ எதிர்க்காத காங்கிரசார், தண்டனை காலத்தில், படித்து பட்டம் பெற்று முறையாக வழக்கறிஞராக பதிவு செய்து, தொழில் செய்ய முன்வரும் ஒருவரை எதிர்ப்பது நியாயமா?

அப்படி என்றால் தண்டனை முடிந்து, விடுதலையாகி வருவோர் வாழ தகுதி அற்றவர்களா?

பா.ஜ.,வின் எதிர்காலம் பாதிக்கும்!


வா.தியாகராஜன், கல் பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் வணிக எரிவாயுக்கான விலை, முன் எப்போதும் இல்லாத வகையில், 900 ரூபாய் அதிகரிப்பு என்பது, உணவக தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, உணவு பண்டங்களின் விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கும்; இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இப்போதே நடைபாதை உணவகங்களில், எட்டு ரூபாய்க்கு விற்ற இட்லி, 10 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பெரிய உணவகங்களில் விலையேற்றம் பலமடங்கு உயரும்.

அதேநேரம், போர் பாதிப்பு முடிந்து இயல்பு நிலைக்கு எரிவாயு விலை வந்தாலும், இந்த உணவகங்கள் விலை குறைப்பு செய்ய மாட்டார்கள் என்பது தான் உண்மை.

இந்த போர் சூழலிலும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தாமல், 1.30 கோடி ரூபாய் சுமையை பொதுமக்கள் மீது திணிக்காமல், மத்திய அரசே ஏற்றுக்கொண்டதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம், வணிக எரிவாயுவிற்கான விலை உயர்வால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் மத்திய அரசு கவனத்தில் வைத்து, சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; இல்லையெனில், இதன் பாதிப்பு பா.ஜ.,வின் அரசியல் எதிர்காலத்தையே முடக்கி விடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us