/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
வீட்டுக்கு தரும் சொற்பமும் பறிபோகும்!
/
வீட்டுக்கு தரும் சொற்பமும் பறிபோகும்!
PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM
ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளது. மழை இல்லை, விளைச்சல் இல்லை அல்லது பெருமழை பெய்து ஒரே வெள்ளம், அறுவடை நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள், அதனால் தானியங்கள், காய்கறிகள் விலையேற்றம் என்றால் கூட ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால், டாஸ்மாக் சரக்கு ஏன் விலை உயர்த்தப்படுகிறது? விலையேற்றத்திற்கு சரியான காரணம் சொல்லப்பட வில்லையே...
'மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதால், தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது' என்று சிலர் சொல்கின்றனர். இந்த விலை உயர்வால் அரசுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
குடித்து குடித்து போதை மனிதர்களாகி போன மது பிரியர்கள், இந்த விலை உயர்வை எதிர்ப்பரா? வேறு வழியின்றி, கூலி வேலை செய்து, டாஸ்மாக்கில் கொடுத்தது போக, வீட்டிற்கு தரும் சொற்ப காசும் இனிமேல் வராமல் போகும்.
குடிக்க கையில் காசு இல்லாவிட்டால் வேறு விதத்தில், தங்கள் வீடுகளிலேயே மனைவிக்கு தெரிந்தோ தெரியாமலோ, சாமான்களை அடகு வைத்தோ, விற்றோ அன்றைக்கு குடிக்கத் தேவையான பணத்தை தயார் செய்வர்.
அதுவும் இல்லாத சமயத்தில், வீட்டில் மனைவி, குழந்தைகளை திட்டுவது, அடிப்பது என சண்டை, சச்சரவுகள் தான் அதிகமாகும்.
மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், மக்கள் தெருவிற்கு வந்து போராடுவர். மதுபானங்கள் விலை உயர்வை பற்றி, கடை வாசலில் குடித்து விட்டு ஆதங்கப்பட்டு, கூச்சலிடும், 'குடி'மகன்களை அரசு ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆகவே தான், ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை ஏற்றிக் கொண்டே போகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் ஆறுதல் நடவடிக்கை!
அண்ணா
அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: மேற்கு வங்கத்தில் எம்.பி. பி.எஸ்., மருத்துவ படிப்பில்,
இடஒதுக்கீடு இடங்களைப் பெற போலி ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக,
கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த,
நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார்; கூடவே
மேற்கு வங்க அரசையும், காவல் துறையையும் கடுமையாக விமர்சித்தார்.
அடுத்த
நாளே, நீதிபதி சவுமியாசென் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வில், மேற்கு
வங்க அரசின் அட்வகேட் ஜெனரல் துஷார்தத்தா ஆஜராகி, வழக்கை முறையாக
விசாரிக்காமல் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக முறையிட்டார்.
அதை ஏற்று சி.பி.ஐ., விசாரணை உத்தரவை, நீதிபதி சவுமியாசென் அமர்வு ரத்து
செய்தது.
இதனால் கோபமடைந்த, நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா,
'நீதிபதி சவுமியாசென் அமர்வின் உத்தரவு செல்லாது; சி.பி.ஐ., விசாரணையை
தொடரலாம்' என்று உத்தர விட்டார். கூடவே, நீதிபதி சவுமியாசென், மேற்குவங்க
ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிர்ச்சிகரமான
இந்த மோதல், நீதித்துறையை திடுக்கிட வைத்தது. இதனால், உச்ச நீதிமன்றம்
இப்பிரச்னையை கையிலெடுத்து, இந்த வழக்கில் கோல்கட்டா உயர் நீதிமன்றம்
பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ததுடன், மேற்கொண்டு இவ்வழக்கை
விசாரிக்கவும் தடை விதித்துள்ளது.
கூடவே, போலி ஜாதி சான்றிதழ் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்ச நீதிமன்றமே விசாரிக்கவும் முடிவெடுத்துள்ளது.
மக்களின்
கடைசி புகலி டமாகவும், நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கமாகவும் திகழ்வது,
நீதிமன்றங்கள் தான். இங்கே நீதிபதிகளுக்குள் மோதல் வளர்வதும், அதனால்
மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாவதும் திடுக்கிட வைக்கிறது. 'நீதிபதிகள்
அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும். தனிப்பட்ட
கருத்துக்களை திணிக்கக் கூடாது' என்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே
அறிவுறுத்தி இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நடவடிக்கை மக்களுக்கு
ஆறுதலாகவும், நிவாரணமாகவும் திருப்தி அளிக்கிறது. நீதித்துறை, நீதிமன்ற
மாண்பை பேணி வளர்த்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்து திகழ
வாழ்த்துக்கள்.
நன்றாக நாடகம் ஆடும் பழனிசாமி!
ஆர்.வித்யாசாகர்,
அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: 'மத்திய
அரசின் குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்' என்று,
முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
குடியுரிமைச் சட்டத்தின்படி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து
வெளியேறிய சிறுபான்மையினரான ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்,
பார்சிகள், பவுத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும்.
இந்த
சட்டம் இயற்றப்பட்டபோது, பாகிஸ்தான் தவிர, மற்ற இரு நாடுகளும் ஆதரவு
தெரிவித்துள்ளன. எல்லையோர மாநிலங்களில் சட்டவிரோதமாக ஊடுருவி, குழப்பத்தை
விளைவிக்க முயலும் பயங்கரவாத சக்திகளுக்கு முடிவு கட்ட, இந்த சட்டம் மிக
அவசியமானது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்குள்ள உரிமை களும், பாதுகாப்பும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு கிடையாது.
பாகிஸ்தானில்
வசிக்கும் ஹிந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதத்தினரின் எண்ணிக்கை, 3.45
சதவீதம். ஆண்டுக்கு சராசரியாக, 1,000 ஹிந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள்
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்; ஹிந்து பெண்கள் கடத்தப்பட்டு,
முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்யப்படுகின்றனர்.
பார்லிமென்டின் இரு
சபைகளிலும் அங்கீகாரம் பெற்று, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக
இயற்றப்பட்ட பின், அதை அமல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை.
இந்த
விவகாரத்தில் ஸ்டாலின் நாடகமாடுவதாகவும், 'நாங்கள் தான் சிறுபான்மையினரின்
பாதுகாவலர்கள்' என்றும், 'அ.தி.மு.க., என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாக
நின்று, அடக்குமுறை சட்டங்களை எதிர்க்கும்' என்றும், அதன் பொதுச் செயலர்
பழனிசாமி கூறியிருக்கிறார்.
இதே பழனிசாமி 2020-ல்,'இந்த சட்டத்தால்,
தமிழக சிறுபான்மையினருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவர்கள்
பாதிக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்; நாங்கள் பதில் கூறுகிறோம்'
என்று ஆளுங்கட்சியாக இருந்தபோது, சட்டசபையில் தி.மு.க.,வினரை பார்த்து
கேட்டார்.
இன்று, ஸ்டாலினை பார்த்து நாடகமாடுவதாக கூறும் இவர் தான்,
பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறியதும், குடியுரிமை சட்ட விவகாரத்தில்
நன்றாக நாடகமாடுகிறார்.

