PUBLISHED ON : ஏப் 10, 2026 01:13 AM

என்.சுப்பையா,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை
தேர்தலுக்கு இதுவரை, 3,300 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் எத்தனை பேர் வாபஸ் வாங்குவர் என்று தெரியாது.
பேரம் படியாமல், வேட்பு மனுவை வாபஸ் வாங்காமல் இருப்போரில் எத்தனை பேர்
அரசியல் கட்சிகளின் அதிருப்திக்கு ஆளான போட்டி வேட்பாளர்கள் என்பது, வேட்பு
மனு பரிசீலனை முடிந்தவுடன் தெரிந்துவிடும்.
இதில், உங்கள்
தொகுதியில் கட்சி சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்களின்
முகங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள்... அவற்றில் எந்த முகத்திலாவது,
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உத்வேகமும், உந்துதலும் தென்படுகிறதா
என்று!
இயேசுநாதரின் வரலாற்றில் ஒரு சம்பவம் உண்டு...
அவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு பெண்ணை சுற்றி நின்று, சிலர் அவளை கற்களால் அடித்து கொண்டிருந்தனராம்!
அவர்களில் ஒருவரிடம், 'அப்பெண் என்ன குற்றம் செய்தார்? ஏன் அவரை கல்லால் அடித்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டாராம்!
அதற்கு, 'அவள் பாலியல் குற்றம் புரிந்தவள்; அதனால் தான் கல்லால் அடித்து கொல்ல முயன்று கொண்டிருக்கிறோம்' என்றாராம்!
'அப்படி என்றால், உங்களில் எவர் பாவம் செய்யாத உத்தமரோ அவர்கள் மட்டும்
அப்பெண்ணை கல்லால் அடியுங்கள்' என்று கூறினாராம், இயேசுநாதர்.
மொத்தக் கூட்டமும் வெட்கி தலைகுனிந்து கலைந்து போனதாம்.
அதைப் போன்று உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் தன்னலம் கருதாது,
ஊழல் புரியாது, லஞ்சம் வாங்காது, பினாமி பெயர்களில், அரசு ஒப்பந்தங்களில்
ஊடுருவாமல், கலெக் ஷன், கமிஷன், கரப்ஷனில் ஈடுபடாமல், நாட்டை சுரண்டாமல்,
மக்களுக்கு சேவை செய்யும் முகம் ஏதாவது தெரிகிறதா என்று பாருங்கள்.
அந்த முகத்தை நன்றாக நினைவில் வைத்து, தேர்தல் நாளன்று அந்த உத்தம சிகாமணிக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்.
நீங்கள் போடும் ஓட்டு, ஓர் உத்தமனுக்கு சென்றால், உங்கள் எதிர்காலம்
காப்பாற்றப்படும்; அதேநேரம் உங்கள் ஓட்டு ஓர் அயோக்கியனுக்கு சென்றால்,
அவனது குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமே மேம்படும்!
முடிவு உங்கள் கையில்!
திருமாவின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!
ஜெ.பொன்மணி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாநில அரசியலில் கவனம் செலுத்த போகிறேன்' என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
ஏற்கனவே, எம்.பி., பதவியில் இருக்கும் திருமாவளவன், அதை விட்டு விட்டு ஏன் எம்.எல்.ஏ., ஆக ஆசைப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்த போது, 'இந்த தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் சூழல் மாற இருக்கிறது' என்று விளக்கமும் கொடுத்தார், திருமா.
அதாவது, தி.மு.க., கூட்டணியில் 22 கட்சிகள் இருந்தாலும், அது பலமான கூட்டணி கிடையாது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறுவது போல், 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை.
தொங்கு சட்டசபை தான் அமையும். அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது தான் எம்.எல்.ஏ., வாக இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வாங்கலாம். துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு கூட கிடைக்கலாம் என்பது தான் திருமாவளவன் போட்ட மனக்கணக்கு!
மேலும், தி.மு.க.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பர்; அப்போது, கட்சியை உடைத்து வி.சி.க.,- - எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி விடுவரோ என்ற அச்சத்தில் தான், தி.மு.க.,வுடன் அதிக நெருக்கமாக இருந்த எம்.எல்.ஏ.,களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்து விட்டார், திருமாவளவன்.
அவரது அதிரடி முடிவும், கருத்தும் தி.மு.க., பலமான கூட்டணி என்ற தோற்றத்தை கெடுப்பதுடன், வெற்றி வாய்ப்பையும் பறித்துவிடும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.
எனவே, ஸ்டாலினின் அன்பிற்கோ, அதிகாரத்திற்கோ, தேர்தல் செலவுக்காக கிடைக்கும் பணத்தி ற்கோ பணிந்து தேர்தலில் போட்டியிடும் முடிவை இப்போது கைவிட்டுள்ளார், தி ருமாவளவன்.
ஆனாலும், 'கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதை போல், 'என்னை யாரும் மனமாற்றம் செய்ய முடியாது' என்று வீராப்பாக பேசி வருகிறார்.
'அடங்க மறு; அத்து மீறு' வசனமெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும்தானா?
'நான், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாது என்பதை ஏற்க முடியாது' என்று கூறிய திருமாவளவன், பின், ஏன் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டார்?
எது எப்படியோ, துணை முதல்வர் ஆவதற்காக திருமா போட்ட ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டன என்பது மட்டும் உண்மை!
உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
எஸ்.உதயம்ராம், பெரம்பூர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தொகுதி தரப்படவில்லை என்றதும் சமூகவலைத்தளங்களில் கட்சியைக் கடந்து அவரது ஆதரவாளர்கள், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் ஆதங்கத்தோடும், கோபத்தோடும் பதிவுகள் செய்து வருகின்றனர் .
அது நியாயமான கோபம்தான். காரணம், பத்தோடு பதினொன்றாக இருந்த பா.ஜ.,வை தனியொருவராய் தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்று, கட்சிக்கு முகவரி தந்தவர், அண்ணாமலை.
நேர்பட பேசுதல், ஆதாரங்களை அடுக்குதல், கடுமையான உழைப்பு, துணிச்சலான அணுகுமுறை போன்றவற்றால், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவராய் மாறியுள்ள அவரது வளர்ச்சியை, ஆரம்பத்திலிருந்தே விரும்பாத பா.ஜ.,வின் பழைய பெருச்சாளிகளால், இத்தேர்தலில் திட்டமிட்டு ஒதுக்கப் பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு போன்றவற்றிலிருந்து அவர் விலக்கப்பட்டதிலிருந்தே இந்த உண்மை அப்பட்டமாக தெரிந்து விட்டது.
இத்தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாமலை சட்டசபையில் இடம் பிடிக்காவிட்டால் என்ன...
எதிர்க்கட்சிகளை அலறவிடுவதிலும், 'அண்ணாமலைக்கு சீட் இல்லையாமே' என்று பொது மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதிலும், அண்ணாமலை வெற்றி பெற்று விட்டாரே!
