தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பூனையும், செந்தில் பாலாஜியும்!

 பூனையும், செந்தில் பாலாஜியும்!

 பூனையும், செந்தில் பாலாஜியும்!


PUBLISHED ON : ஏப் 03, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2026 03:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: 'கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில், தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது, மதில் மேல் நிற்கும் பூனை போன்றதாகும். எந்த பக்கம் விழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

இவர் பல சமயம் உளறினால், சில சமயம் உண்மையை கூறிவிடுகிறார். அவ்வகையில், செந்தில் பாலாஜியை, 'மதில் மேல் நிற்கும் பூனை' என்று கூறியிருப்பதன் வாயிலாக, பூனையின் தன்மையோடு செந்தில் பாலாஜி எப்படி ஒத்துப் போகிறார் என்பதை பார்க்கலாம்...

 அந்த காலத்தில் வீடுகளில் விறகு அடுப்பு தான் இருக்கும்; எந்த வீட்டில் அடுப்பு எரியாமல் உள்ளதோ, அந்த வீட்டு அடுப்பில் போய் படுத்துக் கொள்ளும் பூனை. அதைப்போல் செந்தில் பாலாஜியும், பதவி சுகம் கொண்ட பூனையாக, அ.தி.மு.க.,விலிருந்து தாவி, தி.மு.க.,வில் பதுங்கியுள்ளார்

 'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம்' என்பது பழமொழி. அ.தி.மு.க.,விலிருந்து வந்திருந்தாலும், தி.மு.க., சாம்ராஜ்யத்திற்கு தன்னை முடிசூடா மன்னனாக நினைத்து கொண்டு வலம் வருகிறார், செந்தில் பாலாஜி

 எலியை தவிர எதனிடமும் தன் வீரத்தை வெளிப்படுத்தாத பூனை, தன்னை கம்பீரமாக காட்டிக்கொள்ள சத்தமிட்டுக்கொண்டே செல்லுமாம். அதைப்போன்று, அமலாக்கத் துறை என்றால், நெஞ்சு வலி என்று மயங்கி விழும் செந்தில் பாலாஜி, தி.மு.க., தயவால் தன்னை ஜாம்பவானாக காட்டிக் கொள்கிறார்

 'திருட்டுப் பூனை' என்பதற்கு மிகவும் பொருத்தமானவர், செந்தில் பாலாஜி. ஏனெனில், தமிழகம் முழுக்க, 6,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக விலை வைத்து, விற்பனை செய்யும் நுணுக்கமான திருட்டை அரங்கேற்றியவர் என்பதால்!

 'பூனை தன் குட்டியை சாப்பிடும்' என்பது பொதுக்கருத்து. அதன்படி, செந்தில் பாலாஜி, தற்போது சார்ந்துள்ள தி.மு.க.,வின் அடிவருடியாகி, தன் தாய் கட்சியான அ.தி.மு.க.,வையே அழிக்க துடிக்கிறார்.

எனவே, சி.பி.ஐ., விசாரணையில், 'மதில் மேல் நிற்கும் பூனை'யாக இருக்கும் செந்தில் பாலாஜி, தண்டனை பெற்று சிறைக்குள் விழுவாரா இல்லை தண்டனையில் இருந்து தப்புவாரா என்பதை காலம் சொல்லும்!



எவர் ஓட்டை பிரிப்பார் விஜய்? கே.மகாதேவன், திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜய் எந்த கட்சியின் ஓட்டுகளை பிரிப்பார் என்பது தான், தமிழக அரசியலின் இன்றைய பிரதான விவாதமாக உள்ளது.

விஜய் நடிகராக இருந்த வரை, தி.மு.க., அவரை காயப்படுத்தாமல் அனுசரணையாகவே நடந்து கொண்டது. அதேநேரம், அ.தி.மு.க.,வுட னான முட்டல் மோதல் தொடர் கதையாகவே இருந்தது.

கடந்த 2006ல் அப்போதைய தி.மு.க., மத்திய அமைச்சர் தயாநிதி, விஜயை டில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியிட ஏற்பாடு செய்தார். அப்போது இருந்து ஆரம்பித்தது, தி.மு.க.,வுடனான விஜயின் நட்பு!

அதையடுத்து, சுறா, வேட்டைக்காரன் என்று அடுத்தடுத்து, 'சன் பிக்சர்ஸ்' படங்களில் நடித்து, தன்னை மேலும் தி.மு.க.,வோடு நெருக்கமாக்கி கொண்டார், விஜய்.

எந்த அளவு அந்த நெருக்கம் இருந்தது என்றால், 2010ல் திரைத்துறையினர் கருணாநிதிக்கு நடத்திய, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்ச்சியில், தி.மு.க., உறுப்பினர் போல், 'கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும்; அதைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும்' என்று கூறும் அளவுக்கு இருந்தது.

இதனால், கடுப்பான ஜெயலலிதா, 2013ல் தன் ஆட்சி காலத்தில், விஜய் தன் பிறந்த நாளை மிகப்பெரிய விழாவாக கொண்டாட விரும்பி, சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த போது, அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார்.

மேலும், தலைவா படத்தின் வாயிலாக விஜய் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்திய போது, அப்படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்க விடாமல் தடை ஏற்படுத்தினார்.

தடையை விலக்க கோடநாடு வரை சென்ற விஜயும், அவர் தந்தையும் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமலேயே திரும்பினர்.

அதேபோன்று, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரன் தயாரித்தது என்று கூறி, கத்தி படத்தை எதிர்த்து, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திரையரங்குகளின் முன் போராட்டம் நடத்தினர்.

வேல்முருகனை துாண்டி விட்டதே ஜெயலலிதா தான் என்று, அன்று சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்நிகழ்வுகளால், விஜய் ரசிகர்கள் ஜெயலலிதா மீது கோபத்தில் இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அமைதியாக இருந்த விஜய், 2016ல் அவரது மறைவுக்கு பின்னரே எதிர்வினை ஆற்றினார்.

அவ்வகையில், சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்ததுடன், அவர் வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தும் காட்சியிலும் நடித்தார்.

இதனால், அ.தி.மு.க., வினர் அனைத்து திரையரங்குகளின் முன்பும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பிகில் படத்திற்கான வருமான வரியில் ஏமாற்றி கணக்குகள் தாக்கல் செய்தார் என்று கூறி, ஷுட்டிங்கை நிறுத்தி விஜயை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர், வருமான வரித்துறையினர்.

இது அவரை மட்டுமல்ல; அவருடைய ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்தது.

இதன் ஒட்டுமொத்த எதிர்வினையாகத் தான், 2021 சட்டசபை தேர்தலின் போது கருப்பு - சிவப்பு வண்ணம் கொண்ட மிதிவண்டியில் வந்து ஓட்டு போட்டார், விஜய்.

இந்த சமிக்ஞையைப் புரிந்து கொண்ட விஜய் ரசிகர்களும், தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டனர்.

கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற காரணம், விஜய் ரசிகர்கள் தான். ஏனென்றால், அப்போது விஜய் கட்சி ஆரம்பித்திருந்தாலும், தேர்தலில் போட்டியிடவில்லை; தன் அரசியல் எதிரி எவர் என்றும் சொல்லவில்லை.

இப்படி அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் ஏற்பட்ட முட்டல் காரணமாக, விஜய் ரசிகர்களின் ஓட்டை தி.மு.க.,வே அறுவடை செய்து வந்தது.

அதன்படி பார்த்தால், வரும் சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க.,வால், அ.தி.மு.க., - பா.ஜ.,விற்கு எந்த பாதிப்பும் இல்லை; தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் தான் ஓட்டை விழும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us