/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சம்பிரதாய சடங்கான தேர்தல் கமிஷனர் அறிவிப்பு!
/
சம்பிரதாய சடங்கான தேர்தல் கமிஷனர் அறிவிப்பு!
PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM
எச்.ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் தலைமையில், இரண்டு நாட்களாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதன்பின், பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜிவ்குமார், 'மதுபானம், இலவச பொருட்கள் வினியோகம் கண்காணிக்கப்படும். பணம் மற்றும் வெகுமதிகள் வழங்குவதை தடுத்து, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும், அதை முன்னின்று நடத்தும் பொறுப்பிலுள்ள தேர்தல் கமிஷனர் கூறுவதைத் தான், தற்போதைய தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரும் கூறி இருக்கிறார்.
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேர்தல் கமிஷன் ஒரு பக்கம் சோதனை நடத்தி கொண்டிருக்கும். அரசியல் கட்சிகள், மறுபக்கம் பணப் பட்டுவாடாவையும், இலவச பொருட்களையும் கச்சிதமாக வினியோகித்து முடித்து விடும். காலம் காலமாக இது தான் நடக்கிறது.
இதுவரை பணப் பட்டுவாடா நடத்தியதற்கும், இலவச பொருட்கள் வழங்கியதற்கும் எத்தனை கட்சிகள் மற்றும் கட்சிக்காரர்கள் மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது?
அவற்றை வழங்கியோரை தேர்தல் அதிகாரிகள் பிடித்து கொடுத்தாலும், உள்ளூர் போலீசார் தான் வழக்கு பதிவு செய்வர். தேர்தல் முடிந்ததும், வழக்கில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு கீழே தான் அந்த போலீசார் பணியாற்ற வேண்டும். பிறகு எப்படி, வழக்குகளின் மீது மேல் நடவடிக்கை எடுப்பர்.
அதுவும் இல்லாமல், தேர்தல் முடிந்த சில நாட்களில் கமிஷனின் அதிகாரம் முழுதும் வாபஸ் பெறப்படும். அதன்பின், மாநில அதிகாரிகள் மற்றும் போலீசார் தான், அந்த வழக்குகளை நடத்த வேண்டும். ஏராளமான வழக்குகள் மற்றும் பணிச்சுமை காரணமாக, தேர்தல் வழக்குகளை அப்படியே கிடப்பில் போட்டு விடுவர்.
எனவே, பேப்பரில் எழுத துவங்கும் முன், பிள்ளையார் சுழி போடுவது போல, தேர்தல் ஏற்பாடுகள் துவங்கும் முன், தலைமை தேர்தல் கமிஷனர் இப்படி அறிவிப்பதும் ஒரு சம்பிரதாய சடங்காகி விட்டது. அவ்வளவு தான்!
ஹிந்தி தெரிந்தவர்களுக்கு ஓட்டளியுங்கள்!
ஆ.மோகன்,
அமராவதிபுதுார், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: பார்லிமென்டில், தமிழகத் தின் பிரச்னைகளை எடுத்துக் கூறி,
அதற்கு மத்திய அமைச்சர்கள் அளிக்கும் விளக்கம் அல்லது சமாளிப்பு களுக்கு,
நம் எம்.பி.,க்கள் தக்க பதிலடி கொடுத்து, தமிழக மானத்தை காப்பாற்ற வேண்டும்
எனில், வடமாநிலத்தவர்களுக்கு தகுந்த மொழியான ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.
அதனால், வரும் லோக்சபா தேர்தலில், நிற்கும்
வேட்பாளர்களில் ஹிந்தி நன்கு சரளமாக பேச தெரிந்த நபர்கள் யாராவது
இருந்தால், அவர்களுக்கு நடுநிலையாளர்கள் ஓட்டு போட வேண்டும்.
அரசியல்
கட்சி தலைவர்கள், தொண்டர்களை எவ்வளவு மோசமான நிலையில் வைத்திருந்தாலும்,
அவர்களுக்கு தான் அந்தந்த கட்சி தொண்டர்கள் கண்ணை மூடியபடி ஓட்டளிப்பர்.
அதனால், அவர்களிடம் சொல்வது, செவிடன் காதில் ஊதும் சங்கை போன்றது.
அதனால்,
கட்சி சாராத, நடுநிலையாளர்கள் ஓட்டு போடும் முன், ஒரு கணம் சிந்திக்க
வேண்டும்... 'நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு என்ன தகுதி
இருக்கிறதோ, இல்லையோ... வடமாநிலத்தவர்களை சாதுர்ய மாக கையாண்டு நம் தேவைகளை
கேட்டுப் பெற, ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்' என, முடிவெடுக்க வேண்டும்.
சட்டசபை
வேட்பாளருக்கு ஹிந்தி அவசியம் இல்லை. ஆனால், லோக்சபா வேட்பாளருக்கு
கட்டாயம் ஹிந்தி தெரிந்தால் தான், தமிழகத்திற்கு வேண்டியதை கேட்டு பெற
முடியும்.
ஆனால், இதுவரை டில்லி சென்ற தமிழக எம்.பி.,க்களில் ஒருவர்
கூட சரளமாக ஹிந்தி பேசி, வடமாநில எம்.பி.,க்களை வாயடைக்க வைத்து நாம்
பார்க்கவில்லை.
'ஆங்கிலம் தெரிந்தால் போதாதா?' என்று கேட்கலாம். பல
வடமாநில எம்.பி.,க்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், அவர்கள் மொழியிலேயே
பதிலடி தர, ஹிந்தி தெரிந்தோருக்கு சீட் வழங்குவதில் அரசியல் கட்சிகள்
முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்காளர்களும், அவர்களை தேர்வு செய்து
டில்லிக்கு அனுப்ப வேண்டும்.
தெருநாய்க்கான துட்டையும் திருடும் பேர்வழிகள்!
பொன்மணி
ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'கொரோனா பெருந்தொற்றுக்கு பின், தெருநாய்கள் இனப்பெருக்க
தடை சிகிச்சை திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. இதனால்,
தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி
வருகிறது.
'எனவே, தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்தை முறையாக
செயல்படுத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது' என, தமிழக அரசின் நிதிநிலை
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெருநாய்கள் தொல்லை
அதிகரித்திருப்பது உண்மை தான். சமீபத்தில், மனதை பதைபதைக்க வைக்கும்
விதமாக, குழந்தைகளை தெரு நாய் கூட்டம் விரட்டிச் செல்லும் காட்சிகள், சமூக
வலைதளத்தில் உலா வந்தன.
சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களால்
விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த
முன்வந்துள்ள அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதே நேரம், கோவையில்
கருத்தடைக்கு ஆளான தெரு நாய்கள் மீண்டும் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.
எனவே, இத்திட்டத்தில் ஊழல் நடப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பணம் ஒதுக்குவதால் மட்டும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது; முறையாக அறுவை சிகிச்சையும் நடைபெற வேண்டும்.
அரசு இவ்விஷயத்தில் கண்காணிப்புடன் நடந்து கொள்வது அவசியம்.
தெய்வத்தின் தீர்ப்பு தவறாதே!
க.ஸ்ரீதர்,
கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்
துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில்
ஈடுபட்டதற்காக, கைது செய்யப்பட்டு, 180 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில்
இருக்கிறார்.
ஆனால், அவர் கைதாவதற்குள் நடத்தப்பட்ட நாடகங்கள் தான்
சூப்பர். நெஞ்சு வலி என மருத்துவமனையில் சேர்ந்தது, அதுவும் தனியார்
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றது, அறுவை சிகிச்சை நடந்ததாகச் சொல்வது...
இறுதியில்
ஜாமின் மேல் ஜாமின் மனு போட்டு, அவை செல்லுபடியாகாமல் போனது,
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், அவருடைய அமைச்சர் பதவியை
நீட்டிக்க வைத்தது...
இனி அவர் எப்போது சிறையிலிருந்து வெளியே வருவார் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்; தீர்ப்பு தப்பாதே!

