PUBLISHED ON : ஜூன் 09, 2024 12:00 AM

டாக்டர் தென்காசி கணேசன், கனடாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
முன்னாள் கவர்னர் அக்கா, அவசரப்படக் கூடாது.
மத்தியில்
ஆட்சி அமைத்து, அதற்குப் பின், மாநிலங்கள் வாரியாக வெற்றி, தோல்வி,
இடங்கள், ஓட்டு சதவிகிதம் கணக்கு வரும். அதற்குள்ளாகவே, 'அ.தி.மு.க.,
கூட்டணி இருந்திருந்தால், வெற்றி கிடைத்திருக்கும். கூட்டணியை எதிர்த்தவர்
அண்ணாமலை தான் என்றெல்லாம் நீங்கள் பேசுவது, உங்களுக்கு அழகல்ல. உங்கள்
உயரத்துக்கு மேலேயே, அதாவது உங்களை விடப் பல வருடங்கள் கட்சிக்கு
உழைத்தவர்களை விட, உங்களுக்குப் பதவிகள், இரண்டு மாநிலங்களுக்கு கவர்னர்
என்ற கவுரவமெல்லாம் கிடைத்தது. இப்போது வெற்றி பெற்று இருந்தால், பதவி
கிடைக்கலாம் என்ற உங்கள் ஆசை நிறைவேறவில்லை.
நேருவிற்குப் பின்,
3வது முறை தொடர் பிரதமராக சாதனை செய்துள்ள மோடி போல, 1971க்குப் பின்,
தனியாக ஒரு தேசிய கட்சி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், இரட்டை
இலக்கத்தில் ஓட்டு சதவீதத்தைப் பெற்றது ஒரு சாதனையே. அதுவும் ஓட்டுக்குப்
பணம், மது, பிரியாணி என எதுவும் கொடுக்கவில்லை.
தங்களுக்கு சுமை
என்றும், பிரசாரத்துக்குக் கட்சிக் கொடியுடன் வரக்கூடாது, இவர்கள்
சேர்ந்ததால் தங்களுக்கு ஓட்டு சதவீதம் குறைந்தது என்றெல்லாம் மரியாதை
இல்லாமல் பேசியவர்களுடன் சென்று, ஒரு சில சீட்கள் வாங்கி அமைச்சர் பதவி
வாங்குவது, அரசியல் வெற்றி ஆகாது. சார்ந்திருக்கும் கட்சிக்கும் வளர்ச்சி
ஆகாது.
ஒட்டுமொத்த பா.ஜ., தொண்டர்களும், நேர்மையான எண்ணம் கொண்ட
பிற கட்சித் தொண்டர்களும் கூட, அண்ணாமலை தோல்வியைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் சாதிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் தான்
உள்ளனர்.
எனவே தேவையின்றிப் பேசி, வளரும் தேசிய கட்சிக்கு, புதுப் பிரச்னைகளை உருவாக்காதீர்கள்.
இலவசம் வேண்டாம் இனி!
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கூட்டணி ஆட்சிக்கு திரும்பிய தேர்தல் காற்று, 'சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட மாட்டர்கள் நம் வாக்காளர்கள்' என்ற மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்து விட்டது. இது தான் ஜனநாயகம்.
தேர்தல் கணிப்புகள், அரைக்கேணி தாண்டிய கதை ஆகி விட்டன; ஆச்சரியங்களை வெளிப்படுத்தியுள்ளன. '10 ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சி; அதற்குப் பின், அடுத்த ஆட்சி' என்ற நடைமுறை தவிடுபொடியாகி விட்டது.
ஜனநாயக பாதையில் சென்று, அவசர முடிவுகளுக்கு, 'ஸ்பீட் பிரேக்கர்' பதித்து விட்டது.
கவனமாக பின்னப்பட்ட கூட்டணிகள், பலன் தந்துள்ளன. ஆந்திரா, உ.பி., மாநிலங்கள், இதற்கு எடுத்துக்காட்டு. கூட்டணியை தவிர்த்த பா.ஜ., ஒடிசாவில் வெற்றி பெற்றது.
தே.ஜ., கூட்டணிக்கு, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் அசாத்தியமான கோரிக்கைகளை சமாளிப்பது, வேதாளம் - விக்கிரமாதித்தன் கதை போல நிகழலாம். வில்லங்கமான முடிவுகளை, மத்திய அரசு, அவசர கோலத்தில் எடுக்க முடியாது என நம்பலாம்.
பா.ஜ., கோட்டை என கருதப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் உ.பி.,யில், அக்கட்சி பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், உள்ளூர் பிரச்னைகளை, 'இண்டியா' கூட்டணி கையிலெடுத்து சாதித்து விட்டது.
பெண்களுக்கு உதவித் தொகை, இலவச மின்சாரம், இலவச ரேஷன் என, எல்லா கட்சிகளுமே வாக்குறுதி கொடுத்தன. ஆனால், அவை எதுவும் முக்கியமில்லை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தான் முக்கியம் என்பதை வாக்காளர்கள் வெளிப்படுத்தி விட்டனர்.
இனி வரும் தேர்தல்களில், அனைத்து கட்சியினரும் இலவசங்களை அள்ளித் தெளிப்பதை நிறுத்திக் கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும்.
'இண்டியா' கூட்டணி வென்றிருந்தால்...
எஸ்.உதயம் ராம், சென்னை- யில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: பல்டி நாயகன் நிதீஷ் குமார், சைலன்ட் கில்லர் சந்திரபாபு நாயுடு மற்றும் குட்டி குட்டி கட்சிகள், நொடிக்கு நொடி தரும் தொல்லைகளுடன், நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று வாழ்வதை விட, பேசாமல் எதிர்க்கட்சியாய் இருந்து விடலாம் என்று பா.ஜ.க., முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என சிந்தித்துப் பார்த்தபோது உதித்த கற்பனை இது...
நாயுடுவும், பல்டி நாயகனும், இதர உதிரிகளும், 'இண்டியா' கூட்டணிக்குத் தாவினால், ஆட்சி அமையும்.
குறைந்த பட்சம் 4 துணைப் பிரதமர்கள், 4 இணைப் பிரதமர்கள், 4 உதவிப் பிரதமர்கள் என தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதற்கே யார் யார் என ஒரு மாத காலம் சண்டை மண்டை உடையும்.
அடுத்து இலாகா பொறுப்புகள்... யார் யாருக்கு எத்தனை, என்னன்ன என்பதில் ஒரு மாதம் ரகளை களைகட்டும்.
சுயேச்சை தவிர்த்து, 39 கட்சிகளுக்கு தலா ஒன்று என்று கணக்கு வைத்தால் கூட, 39 அமைச்சர்கள். அதில் பெரிய கட்சிகள் என்றால், சமாஜ்வாதியும், தி.மு.க.,வும் மட்டுமே.
இவங்க குறைஞ்சபட்சம் 5, 5 என கேட்பர். வங்கத்து வீராங்கனை சும்மா இருப்பாங்களா? அவங்களுக்கு ஒரு 5; நாயுடுகாருக்கு 4; நிதீஷ் கட்சிக்கு 4.
தமிழக காங்கிரசில் ஜெயித்த ஒன்பது பேரில், இரண்டு பேருக்காவது கொடுக்கணுமே...
ஆக, 45 மந்திரிகளாவது காங்கிரசுக்கு வேண்டும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், 100 பேராவது அமைச்சர்களாக இருப்பர். அத்தனை பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
கால் வலி எடுக்க, ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து விடுவார்.
முதல் வரிசையில் யார் அமர்வது? சண்டை நடக்கும்!
நவகிரகங்களும் ஒரே நேர்க் கோட்டில் வந்தால் உலகம் அழிந்து விடும். எல்லாரையும் ஒருங்கிணைத்து ஒருமித்து கருத்து ஏற்பட்டு, தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்கவென ஒரே ஒரு தீர்மானம் போடுவதற்குள், அனைவருக்கும் கண்கள் வெளியே வந்து விழும்.
பொதுவாக எதிர்க்கட்சியினர் தானே வெளிநடப்பர்... இங்கே இவர்களே, ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்துக் கொண்டு வெளிநடப்பு செய்வர்.
இவர்கள் செய்யும் அலப்பரையைப் பார்ப்பதற்காகவே, பா.ஜ., உறுப்பினர்கள், நாற்காலியில், 'கம்' போட்டு அமர்ந்து விடுவர்.
இது மட்டுமா... அதை விட முக்கியமான கடமைகள் இருக்கே!
தேசியக் கொடி உட்பட எல்லா இடத்திலும் காவிக் கொடியை நீக்கிவிட்டு, அனைத்து கட்சிக்காரர்களின் கொடியையும் கட்டியாக வேண்டும்.
ஒவ்வொரு விழாவுக்கும், அனைத்து தலைவர்களையும் அழைக்க வேண்டும்.
சிறப்பு அந்தஸ்து கேட்கும் அனைத்து மாநிலங்களையும் பிரித்து, அவர்களுக்கான அதிகப்படி தொகையைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், ஆதரவு வாபஸ் என்ற ஓலை வரும். வேறு வழியின்றி, கடனுக்கு மேல் கடன், கடனுக்கு மேல் கடன் என அல்லாட வேண்டியது தான்.
நல்லா இருக்குமா நாடு?

