/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கமலாலய குளத்திலும் கருணாநிதிக்கு சிலை?
/
கமலாலய குளத்திலும் கருணாநிதிக்கு சிலை?
PUBLISHED ON : ஜன 10, 2024 12:00 AM
கி.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் படித்த செய்தி இது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி ஒன்றில், 'திருவாரூர் கமலாலயம் குளம், கருணாநிதி விளையாடிய நெடிய வரலாற்று சிறப்புமிக்க இடம். அங்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதை கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது... அந்த குளம் புகழ் பெற்றதே, ஏதோ முன்னாள் முதல்வர் கருணாநிதி, அதனுள் குதித்து விளையாடியதால் தான் என்பது போல் உள்ளது அவரது பேச்சு. ஏற்கனவே, கருணாநிதி உபயோகித்த பேனாவின் ஞாபகார்த்தமாக, கடலில், மக்களின் வரிப்பணம் 81 கோடி ரூபாயில் ஒரு நினைவு சின்னம் வைக்க திட்டம் போட்டு வருகின்றனர்.
இது போதாதென்று, சேலம் மாடர்ன் ஸ்டூடியோ நுழைவுவாயில் அருகே, அவருக்கு ஒரு சிலை வைக்கவும் திட்டமிடுகின்றனர். இப்போது, கமலாலய குளத்தில் மராமத்து பணிகள் முடிந்ததும், அங்கும் கருணாநிதிக்கு சிலை வைக்கும் எண்ணம் இவர்களுக்கு உள்ளதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. போகிற போக்கில், கமலாலய குளத்தையே 'கலைஞர் குளம்' என்று பெயர் மாற்றி விடுவரோ என்றும் பயமாக இருக்கிறது.
புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலுக்குள், 'நாதஸ்வரம், மேளம் வாசிக்க தற்சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி, ஹிந்துக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பல விதங்களில் ஹிந்து கோவில்களுக்கும், அதில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்களுக்கும் தமிழக அரசு ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, தன் கட்சி தலைமையின் மனம் குளிர என்னென்ன செய்யலாம் என யோசிப்பதும், பேசுவதும் சரியல்ல.
தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் இப்போதாவது விழித்து கொள்ளவில்லை என்றால், ஒவ்வொரு கோவிலுக்கு வெளியிலும் நாளை கருணாநிதிக்கு சிலை திறந்தாலும் திறப்பர்.
நீதி தவறாமல் நடக்குமா நீதிபதிகள் தேர்வு?
அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: பொதுவாக, போட்டித் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்பட்டு,
பின் நேர்முகத் தேர்வு என்று வரும் போது தான், அவற்றில் குறுக்கீடு
வருவதாக, புகார் கூறப்பட்டு வருகிறது.
உண்மையில் தேர்வுகளுக்கு
மிகவும் கடுமையாக பயிற்சி எடுத்து தேர்வு எழுதி, தேர்ச்சி அடையும்
மாணவர்கள், நேர்முகத் தேர்வில் குறுக்கு வழியில் தேர்ச்சியாகி பணியாணை
பெறுபவர்களால், பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
இந்தப் பிரச்னையை,
முழுமையாக களைய வேண்டும் எனில், நேர்முகத் தேர்வை நடத்தும் நடுவர்கள், 100
சதவீதம் நேர்மையானோராக இருக்க வேண்டும்; யாருக்காவும் நடுநிலை தவறக்கூடாது.
ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறையில், ஏகப்பட்ட புகார்கள் எழுகின்றன. ஒரு
பதவிக்கு இவ்வளவு ரூபாய் என, பேரம் பேசப்படுவதாகவும் புகார் எழுகிறது.
இந்நிலையில்,
245 நீதிபதிகளை தேர்வு செய்ய, உரிமையியல் நீதிபதி தேர்வு, கடந்த
ஆகஸ்ட்டில் நடந்தது. மொத்தம், 12,000 பேர் தேர்வு எழுதினர்; 2,500 பேர்
தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த நவம்பரில்
நடந்தது; அதில், 472 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களிலும், 245 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., இதில் எந்த தவறும்
செய்யாமல், நேர்மையானவர்களை, நேர்மையான முறையில் தேர்வு செய்யும் என,
நம்புவோம்!
வியக்கத்தக்கது தன்கரின் நாகரிகம்!
அ.யாழினி
பர்வதம், சென்னையிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட்
குளிர்கால கூட்டத் தொடரின்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி
எம்.பி.,க்கள், பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப்
தன்கர் போல, 'மிமிக்ரி' செய்து கிண்டலடித்தார்.
துணை
ஜனாதிபதியாகவும் திகழும் ஜகதீப் தன்கரை, பார்லி., வளாகத்திலேயே கிண்டல்
செய்தபோது, அதை, காங்., ராகுல், படம் பிடித்து, சமூக வலைதளத்தில்
பரப்பினார். துணை ஜனாதிபதி இது குறித்து மிகவும் மனம் வருந்தி, கருத்து
தெரிவித்திருந்தார்.
இது நடந்த சில நாட்களே ஆனாலும், சமீபத்தில்
பிறந்தநாள் கொண்டாடிய அந்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண்
பானர்ஜிக்கு, அதே தன்கர், மிகப் பெரிய மனதுடன் வாழ்த்து
தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்ல; அவர் மனைவியிடமும் பேசி, தன்
வீட்டுக்கு, விருந்து சாப்பிட வருமாறும் அழைத்திருக்கிறார். அடடா...
இதுவல்லவோ அரசியல் நாகரிகம்!
'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நன்னயம் செய்துவிடல்' என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக, தன்னைப்
பழித்தவரையே, நுாறாண்டு காலம் வாழ வாழ்த்து சொல்வது, இந்நாளில் கிடைக்காத
அரிதான, மிகப் பெரிய மனித பண்பு. மற்ற அரசியல்வாதிகளுக்கு, தன்கர்
ஆசானாகத் திகழ்கிறார்!
தேவையற்ற வெட்டி விவாதங்கள் எதற்கு?
வெ.சீனிவாசன்,
திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்திய கலாசாரம்,
அதிலும் தமிழர்களின் கலாசாரம் அதி உன்ன தமானது. அதை திரைப்படங்கள்
கெடுத்து, குட்டிச் சுவராக்கி விட்டன' என்று, பலர் கூறுவர். அந்த வரிசையில்
இப்போது சேர்ந்திருப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
பெரும்பாலான தொடர்கள், குடும்பங்களில் குழப் பத்தையும், உறவுகளுக்குள் பிளவையும் ஏற்படுத்துவதையே தலையாய பணியாக கொண்டுள்ளன.
அடுத்து
செய்தி சேனல்கள்... ஒரு காலத்தில் பெரும்பாலான பத்திரிகைகள், 'டிவி'
சேனல்கள் உள்ளதை உள்ளபடியே கூறின; ஆனால், தற்போது தலைகீழாக மாறிவிட்டது.
'தினமலர்' நாளிதழ் போன்ற நடுநிலையான பத்திரிகைகள், 'டிவி' சேனல்களை விரல்
விட்டு எண்ணி விடலாம்.
உதாரணத்திற்கு, சுதந்திரம் அடைந்து நம்மை
நாமே ஆண்டு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் ஒரு புயல், சற்றே அதிக மழை
பெய்தால், மாநில தலைநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போதைய அரசு, மழைநீர்
வடிகால் கட்டமைப்புக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்ததாக கூறியது.
'அப்படி
இருந்தும், வெள்ளத்தில் தத்தளித்தது ஏன்? உண்மையான காரணங்கள், பிரச்னைகள்
என்ன? இனி அவற்றை எப்படி சரி செய்யலாம். வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க
நிரந்தர தீர்வு என்ன' என்பதை பற்றி, செய்தி சேனல்கள் விவாதித்ததாக
தெரியவில்லை.
அதை விடுத்து, பெரும்பாலான சேனல்கள், 'மத்திய அரசு
குறைவான நிதி ஒதுக்கி, தமிழக அரசை வஞ்சிக்கிறதா' என்பது போன்ற தலைப்பில்
கட்சி பிரமுர்களை அழைத்து, காரசார விவாதங்கள் நடத்தின.
இவற்றால்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துளியும் பலன் இல்லை. ஆனால், அதை பற்றி
சேனல்களுக்கு கவலையில்லை; அவைகளுக்கு டி.ஆர்.பி., ரேட்டிங் மட்டுமே
முக்கியம்.
எனவே, ஊடக தர்மத்தை மீறாமல், பாரபட்சமின்றி,
நடுநிலையோடு, உள்ளதை உள்ளபடி மக்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகங்களுக்கு
தான், நல்ல மதிப்பும், மரியாதையும், வரவேற்பும் இருக்கும்.

