PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து, புற்றீசல் போல் பாகிஸ்தானியர் மட்டுமல்ல; வங்கதேசத்தினரும் முறையான அனுமதியின்றி நம் நாட்டில் ஆயிரக்கணக்கில் குடியேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மே.வங்கம், அசாம் வழியாக அனுமதியின்றி நுழைந்து, வடமாநிலத்தவர் என்ற போர்வையில் தமிழகத்திற்கு வரும் வங்கதேசத்தினர், பெயரை மாற்றி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வோட்டர் ஐ.டி., என, இந்திய குடிமகனுக்கான அனைத்து அடையாளங்களையும் பெற்று, நம் நாட்டின் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.
அதில் ஒருவர் தன் பெயரை சயன் என மாற்றி, தமிழக பெண்ணை மணந்து, பல மாடி வீடு கட்டி, அதை வாடகைக்கு விட்டு, கடந்த, 26 ஆறு ஆண்டுகளாக சொகுசாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.
வீட்டு லோனை கட்டமுடியாத காரணத்தில், இப்போது மாட்டிக் கொண்டார். மற்றொரு சி.ஆர்.பி.எப்., வீரர், பாகிஸ்தான் பெண்ணை மணந்து வேலையை இழந்துள்ளார். இன்னும் எவ்வளவு பேர், முறைகேடாக ஊடுருவியுள்ளனரோ!
இவர்களையெல்லாம் தேடிப் பிடித்து, அவர்களின் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும். பாவம் - புண்ணியம் பார்க்காமல் துரிதமாக இவர்களை வெளியேற்றுவதுடன், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவு என்ற பெயரில், குடியுரிமை சட்டத்தை இங்குள்ள சில அரசியல் கட்சியினர் ஏன் எதிர்த்தனர் என்பது இப்போது புரிகிறதா?
எல்லாம் ஓட்டுக்காக... நாடு நாசமானால் என்ன, ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக, இத்தகைய அந்நிய குடியேற்றத்தை மவுனமாக வேடிக்கை பார்த்துள்ளனர்!
இந்த சுயநலவாதிகள் தங்கள் குடும்பம், சுற்றம் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக நாட்டை கூட விற்று விடுவர். மக்கள் தான் உண்மையை புரிந்து கொண்டு, ஓட்டு போடும் போது, நாட்டு நலனை கருத்தில் வைத்து, ஓட்டளிக்க வேண்டும்!
தீர்ப்பு வெளியாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
எஸ்.இளமாறன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நேஷனல் ஹெரால்டு ஆங்கில
பத்திரிகை வழக்கில், 5,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக,
அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுள்ள
டில்லி நீதிமன்றம், சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அயலக
பிரிவு செயலர் சாம் பிட்ரோடா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ல், பா.ஜ., மூத்த தலைவர்களுள் ஒருவரான
சுப்பிரமணியன் சுவாமி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பண மோசடியை
கண்டுபிடித்து, அப்பத்திரிகையின் மீது வழக்கு தொடர்ந்தார்.
நேரு
ஆரம்பித்த பத்திரிகை, தற்போது, அக்குடும்ப வாரிசுகளான சோனியா, ராகுல் வசம்
இருக்கும் நிலையில், அவ்வளவு எளிதாக வழக்கு விசாரணைக்கு வந்து விடுமா?
இதோ, 13 ஆண்டுகளுக்கு பின், அவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
சுப்பிரமணியன்
சுவாமி மட்டும் இம்முறை வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவரவில்லை என்றால்,
சோனியாவும், ராகுலும் விழுங்கி ஏப்பம் விட்ட சொத்துக்களில் இதுவும் ஒன்றாக
இருந்திருக்கும்.
சமீபகாலமாக, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள்
கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. ஜனாதிபதிக்கே மனுக்கள் மீதான
முடிவெடுக்க மூன்று மாதங்கள் என்று காலக்கெடு விதித்த நீதிபதிகள், இதற்கு
தீர்ப்பு வழங்க எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்ளப் போகின்றனரோ!
கடந்த
2012ல் தொடுக்கப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வரவே 13 ஆண்டுகள் ஆகியுள்ளன.
அப்படியே நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்து, அந்த விசாரணையும் முடிந்து தீர்ப்பு வெளியாவது இந்த நுாற்றாண்டில்
நடந்து முடியும் விஷயமல்ல என்பது மட்டும் நிச்சயம்!
முதுகெலும்பு உடைந்து போன பாகிஸ்தான்!
கே.நாகலட்சுமி,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அறுக்க
மாட்டாதவன் இடுப்பை சுற்றி, ஐம்பத்தெட்டு கருக்கருவாள்' என்ற சொலவடை,
இன்றைய சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு கன கச்சிதமாக பொருந்தும்.
அந்நாட்டின்
நிலப்பரப்பில் பாதிக்கு மேல் பலுசிஸ்தான் மாநிலத்திற்கு உட்பட்டது.
அங்குள்ள மக்கள் தனி நாடு கேட்டு கிளர்ச்சி செய்கின்றனர்.
சமீபத்தில்
பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ரயிலைக் கடத்தி, ராணுவ வீரர்களை
சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் அரசின் இயலாமையே இதற்கு காரணம். ஆனால்,
அந்நாட்டு அரசோ, இந்தியாவின் துாண்டுதலின் பேரில் நடந்ததாக நம் நாட்டை
நோக்கி கை காட்டியது.
இன்று, பாகிஸ்தான் பொருளாதாரம்
அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை
முட்டுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்லாமிய நாடுகள் செய்த பொருளாதார உதவிகளை
திறம்பட உபயோகித்திருந்தால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டு இருக்கலாம்.
ஆனால்,
அந்நாட்டு அரசு, அப்பணத்தை பயங்கரவாதத்தை வளர்க்கவே பயன்படுத்துகிறது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. ஒரு நாடே பயங்கரவாதிகளை
உற்பத்தி செய்யும் மையமாக இருந்தால், அங்குள்ள மக்களின் நிலை என்ன?
ஓர்
இஸ்லாமிய நாடாக இருந்தும், தொழுகையின் போது குண்டு வைத்து சொந்த மக்களை
பலியாக்குகின்றனர் என்றால், அங்குள்ள சிறுபான்மையினரின் நிலையை நினைத்துப்
பார்க்கவே, படு பயங்கரமாக இருக்கிறது.
இந்த லட்சணத்தில், இவர்களுக்கு காஷ்மீர் வேண்டுமாம். இந்தியா பெருந்தன்மையாக கொடுத்த நிலத்தை முறையாக ஆட்சி செய்ய முடியவில்லை.
இதில், இந்தியாவின் சொத்தான காஷ்மீருக்காக போராடுவராம்.
உள்நாட்டு
பிரச்னைகளை திசை திருப்பவே, பகல்ஹாமில் தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான்.
இப்போது சிந்து நதி நீரும் போச்சு. இனி அங்கு விவசாயம் செய்ய முடியாது;
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
துப்பாக்கி துாக்காமல், செலவு இல்லாமல், பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்து விட்டது, இந்தியா.
'கத்தி
எடுத்தவன், கத்தியால் சாவான்' என்பதுபோல், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்
பாகிஸ்தானும், அதே குழியில் விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து
கொண்டிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை!

