/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஊழல்வாதிகளுக்கு சர்வாதிகாரி தான் மோடி!
/
ஊழல்வாதிகளுக்கு சர்வாதிகாரி தான் மோடி!
PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரதமர் மோடி
சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார். இந்த லோக்சபா தேர்தல் மூலம், அவரது
சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டுவேன்' என்று சூளுரைத்திருக்கிறார் ஊழல்
சக்கரவர்த்தியான அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்தியப் பிரதமர்களிலேயே
சர்வாதிகாரியாகச் செயல்பட்டவர் இந்திரா தான். வரலாற்றிலேயே முதன் முதலில்
எமர்ஜென்சியை அமல் செய்து, எதிர்க்கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில்
அடைத்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆட்சிக் காலத்தில் தான், எத்தனையோ
மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டன.
பத்திரிகை சுதந்திரம் பறிபோனதும் இந்த அம்மையார் ஆட்சியில் தான். போராட்டம் நடத்திய மத்திய அரசு ஊழியர்களை இரும்புப்பிடி பிடித்தவர்.
இன்னும் சொல்லப்போனால், தன்னைப் பிரதமராக்கிய பெருந்தலைவர் காமராஜரையே, சிறையில் அடைத்தவர் இந்தப் புண்ணியவதி.
பிரதமர்
மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில், எந்த மாநில அரசும் கவிழ்க்கப் பட்டதாக
வரலாறு இல்லை. பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது இல்லை.
மத்திய அரசு ஊழியர்கள், பா.ஜ., அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியது இல்லை.
இந்தியாவில் மோடி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்று வெளிநாட்டு
தலைவர்கள் பாராட்டி இருக்கின்றனர். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் மோதல்
போக்கை பிரதமர் மோடி கையாண்டதில்லை.
பிரதமர் மோடி மீது எந்த ஊழல்
குற்றச் சாட்டும் இல்லை. எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வது போல,
சர்வாதிகாரியாக, பிரதமர் மோடி என்றைக்கும் நடந்தது இல்லை. ஊழல்வாதிகள்
கண்ணுக்கு மட்டுமே அவர், சர்வாதிகாரியாகத் தெரிகிறார்.
சசிகலா ஒதுங்கினால் போதுமே!
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா, சமீபத்தில் அ.தி.மு.க.,வினர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில் விண்ணப்ப படிவம் ஒன்றில், கட்சியினர் தன் கல்வி தகுதி, கட்சியில் சேர்ந்த ஆண்டு போன்ற விபரங்களை பூர்த்தி செய்து, தனக்கு அனுப்பும்படி கூறினார். அவர் வேண்டுகோளை அ.தி.மு.க.,வினர் புறக்கணித்து உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, சசிகலா தம்பி திவாகர் மகன் ஜெய்ஆனந்த் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார். அதில், 'தற்போது உள்ள அமைச்சர்கள் எங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள் தான்' என்றார். இதை அப்போது இருந்த, அ.தி.மு.க., அமைச்சர்கள் ஒருவர்கூட மறுக்கவில்லை.
சசிகலா உறவினர்கள் வீட்டில் வேலை செய்த வர்கள், ஜெயலலிதா இருந்த போது, சசிகலாவிடம் விண்ணப்பப் படிவம் கொடுத்தவர்கள். அது அப்போது ஓ.கே., அதேபோல இப்போது சசிகலாவிடம் விண்ணப்பப் படிவம் கொடுத்தால், வருங்காலத்தில் அமைச்சர் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கை, யாருக்கும் இப்போது இல்லை. இதுதான் இப்போதைய உண்மையான நிலைமை.
ஜெயலலிதா இருந்த போது தனக்கு, அ.தி.மு.க.,வில் இருந்த அதே மரியாதை, பந்தா இப்போது இருக்கும் என்று சசிகலா நினைக்கலாமா?
இதற்கு ஒரு விஷயத்தை எடுத்துக்காட்டி சசிகலாவுக்கு புரிய வைக்கவேண்டும். கடந்த 2011ல், சென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில், ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
விழா முடிந்தவுடன், முன் வரிசையில் இருந்த சசிகலாவுக்கு, தன் இரு கைகளை கூப்பி வணக்கம் வைத்தார், முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்; அதை சசிகலா கவனிக்கவில்லை.
மீண்டும் ஒருமுறை அதே போல வணக்கம் வைத்தார்; அதையும் சசிகலா கவனிக்கவில்லை.
மூன்றாவது முறை சசிகலாவுக்கு எதிரே அவரை வழி மறித்து நின்று,நேருக்கு நேர் பார்த்து வணக்கம் வைத்தார் பொன்னையன். அப்போது தான், சசிகலா கவனித்து பதிலுக்கு வணக்கம் வைத்தார். 'நாம் சசிகலா கண்களில் பட்டுவிட்டோம்' என, பொன்னையனுக்கு அப்போது எல்லையில்லா மகிழ்ச்சியாகி விட்டது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்து ஒன்றில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் சசிகலா. இவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பொன்னையன், சசிகலாவை பார்க்காமல், தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். நீண்டநேரம் சசிகலா இருக்கும் பக்கம் திரும்பி பார்க்காமலேயே, கழுத்து வலியுடன் அவதிப்பட்டபடி நின்றுகொண்டு இருந்தார் பொன்னையன்.
ஜெயலலிதா இருந்த போது, பொன்னையன் தனக்கு செய்த மரியாதையையும், அதே பொன்னையன் இப்போது தன்னை பார்க்காமல் தவிர்ப்பதையும், சசிகலா நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.,விலும், ஆட்சியிலும், 35 ஆண்டு காலம் சசிகலா அதிகாரத்துடன் கம்பீரமாக வலம் வந்தது போதும். இனியும், தான் தான் அ.தி.மு.க.,வின் தற்போது பொதுச் செயலர் என்று சொல்லி, குழப்பத்தை செய்வது சசிகலாவுக்கு அழகல்ல.
விண்ணப்ப படிவங்களை சசிகலாவிடம் வழங்குவதற்கு அ.தி.மு.க.,வினர் ஏங்கிய காலமெல்லாம் போய் விட்டது. அரசியல் வாழ்க்கையில் ஓய்வு எடுப்பது தான் சசிகலாவுக்கு மிகவும் நல்லது.
எதற்கு இவ்வளவு பிரபலப்படுத்த வேண்டும்?
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு 'யு டியூப்' நடத்தி, அதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளையும், முக்கிய பிரமுகர்களையும், ஆபாசமாகவும், குதர்க்கமாகவும், வில்லங்கமாகவும் பேசி, தனக்கு ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சங்கர் என்பவர். தனக்கு தானே ஒரு அடைமொழியாக, 'சவுக்கு' என்று தன் பெயருடன் இணைத்துக் கொண்டவர்.
இவரது அடாதடியான பேச்சு, யு டியூபில் பிரபலமானவுடன், எதிர்கட்சியினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசவும், ஆளுங்கட்சியில் பதவி பொறுப்பு கிடைக்காதவர்கள், தங்களுக்கு வேண்டாதவர்களின் ஊழலை வெளிப்படுத்தவும், இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.
சாதாரண நபரான இந்த சங்கரை, தமிழக காவல் துறையினரும், ஊடகங்களும் பெரிய வி.ஐ.பி., ரேஞ்சுக்கு பிரபலப்படுத்தி, ஒரு கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு துாக்கி விட்டுஉள்ளனர். இவர் ஒன்றும் பெரிய தீவிரவாதியோ, கடத்தல்வாதியோ, கொலை கொள்ளை குற்றவாளியோ அல்ல; ஆயுதங்களுடன் இருப்பவரும் அல்ல.
இவரது ஆயுதம், வெறும் வெற்றுப் பேச்சு பேசும் வாய் தானே தவிர, வேறொரு புண்ணாக்கும் கிடையாது. இவரை கைது செய்து, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல, எதற்கு இத்தனை காவலர்கள்? அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்ன?
சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பனை அழைத்து வருவது போல், சுற்றிலும் போலீசார் படைசூழ அவரும், தான் இவ்வுலகிலேயே மிகப் பெரிய 'ஜர்னலிஸ்ட்' என்று கற்பனை செய்தபடி, பேட்டி கொடுத்ததையும் பார்த்து, சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

