தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ வார்த்தைகளில் கவனம் அமைச்சர்களே!

 வார்த்தைகளில் கவனம் அமைச்சர்களே!

 வார்த்தைகளில் கவனம் அமைச்சர்களே!

2


PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:20 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ.கோபாலசுாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை இதுவரை ஆண்ட இரு திராவிட கட்சிகளும், இதுவரை சமூக நீதியை, வார்த்தைகளில் தான் பேசின; த.வெ.க.,வோ, அதை அமைச்சரவை அட்டவணையில் பதிவு செய்துள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்த எட்டு பேருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளதுடன், இரண்டு பிராமண அமைச்சர்களுக்கும் இடமளித்து, 'பார்ப்பனிய எதிர்ப்பு என்பது, ஓர் இனத்தினரோடு அல்ல; சமூக ஏற்றத்தாழ்வோடு மட்டுமே இணைக்க வேண்டும்' என்ற, அரசியல் முதிர்ச்சி வியக்க வைக்கிறது.

அதேநேரம், இந்த அமைச்சர்களில் பலர் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து மற்றும் சாமானிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள்; சிறு வட்டத்திற்குள் வளர்ந்தவர்கள்.

சட்டசபை என்பது வேறு உலகம்; அதிலும், அமைச்சகப் பொறுப்பு என்பது போர்க்களம் போன்றது என்பதை, அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகள் குறிப்பாக, தி.மு.க., இந்த அரசின் மிகப்பெரிய அரசியல் எதிரி. பல ஆண்டுகளாக ஆட்சியிலும், எதிர்ப்பு அரசியலிலும் கூர்மையாக்கப்பட்ட அக்கட்சி, இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு அமைச்சரின் நடவடிக்கையையும், சட்டசபை உரையையும், தி.மு.க., நுணுக்கமாகக் கவனிக்கும். ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட, அதை மலையாக்கும்!

இதை விட ஆபத்தானது, அக்கட்சி விரித்து வைக்கும் வலை!

தவறுகளுக்காக இவர்கள் காத்திருப்பதில்லை; தவறுகளை உருவாக்க திட்டமிடுவர். அரசியல் சூழ்ச்சிகள், வேண்டுமென்றே துாண்டும் கேள்விகள், தவறான தகவல்களைப் பரப்பி, அமைச்சர்களை சிக்க வைக்கும் மலிவான உத்திகள், தி.மு.க.,விற்கு கைவந்த கலை.

த.வெ.க., அமைச்சர்களுக்கோ இந்த அரசியல் சதுரங்கத்தில் அனுபவம் இல்லை. இளமையும், அனுபவமின்மையும் இணையும்போது, ஒரே ஒரு துாண்டில் போதும்; பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்க!

அப்படி ஒரு தவறு, த.வெ.க., அரசையே சரிக்க வாய்ப்பாக மாற்றப்படலாம் என்பதை, புதிய அமைச்சர்கள் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்ள வேண்டும்.

அமைச்சரவை நடைமுறைகள், சட்டசபை நடத்தை, ஊடக கேள்விகளை கையாளும் கலை, அதிகாரிகளுடன் பணியாற்றும் நுட்பம் இவற்றை வெறும் படிப்பால் மட்டும் கற்க முடியாது. அதற்கு, செங்கோட்டையன் போன்ற நிர்வாக அனுபவமுள்ள மூத்தோரின் வழிகாட்டுதல் அவசியம்.

சமூக ஊடகங்கள் இன்று, எல்லா அரசியல் தவறுகளையும் நிமிடத்தில் பூதாகரமாக மாற்றும் வல்லமை பெற்றதாக உள்ளன.

ஓர் அமைச்சரின் பக்குவமற்ற சிறு வார்த்தை கூட, ஒரு மாவட்டத்தின் அமைதியை கலைக்கலாம்; ஒரு கூட்டணியின் நம்பிக்கையை சரிக்கலாம்.

எனவே, புதிய அமைச்சர்களே... வார்த்தைகளில் கவனமாக இருந்து களமாடுங்கள்!

-----

'மிக்சர்' தின்ன ஆர்வம் காட்டும் தமிழக பா.ஜ.,


சொ.முத்துசாமி,பாளையங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆங்கிலேயரால் இங்கிலாந்துக்கு கவர்ந்து செல்லப்பட்ட, இந்தியாவின் கோஹினுார் வைரத்தை, இப்போது வரை திருப்பிப் பெற முடியவில்லை. ஆனால், அந்த வைரத்தை விடவும் மதிப்பில் கூடியதும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான, ஆனை மங்கலச் செப்பேடு பிரதமர் மோடியின் விடாமுயற்சியால், நெதர்லாந்து நாட்டில் இருந்து, இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

ஆனால், இதுகுறித்து தமிழகத்தில் பெரிதாக யாரும் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இதுவே, பிற மாநிலமாக இருந்திருந்தால், அம்மாநில மக்கள் பெரிதாக கொண்டாடியிருப்பர். ஆனால், தமிழகத்தில் தமிழ் உணர்வு என்பது, 'ஹிந்து ஒழிக; தமிழ் வாழ்க' என்பதில் மட்டும் தான் இருக்கிறது!

தமிழ் மொழி மீது இவர்கள் பாசம் காட்டுவது, வெறும் ஓட்டு அரசியலுக்குத் தான் என்பது புரியாமல், 'தமிழகத்தில் எந்தளவுக்கு பேசப்பட வேண்டுமோ அந்தளவுக்கு பேசப்படவில்லை' என்று வருத்தப்பட்டுள்ளார், பிரதமர் மோடி.

ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த, ஆனைமங்கல செப்பேடு என்பது, தமிழனின் பெருமை. அதன் முக்கியத்துவத்தை அறிந்த டச்சுக் காரர்கள், 300 ஆண்டுகளுக்கு முன், தங்கள் நாட்டுக்குக் கடத்தி கொண்டு சென்று விட்டனர்.

நாமும், அது, 'ஆனை வாயில் போன கரும்பாக' நினைத்து கை கழுவி விட்ட நிலையில், தமிழகத்தின் மீது தீராக் காதல் கொண்ட பிரதமர் மோடி, தன் விடா முயற்சியால் நெதர்லாந்து நாட்டிற்கே சென்று, செப்பேட்டை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. தமிழக அரசும், மத்திய தொல்லியல் துறையும் இணைந்து, சென்னை, கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை போன்ற இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் சுழற்சி முறையில் செப்பேட்டை காட்சிப் பொருளாக வைத்து, பொது மக்கள், பள்ளி - கல்லுாரி மாணவ - மாணவியரை பார்வையிடச் செய்யலாம்.

இதன்வாயிலாக, தமிழகத்தின் தொன்மையையும், பண்பாட்டையும், தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் சென்றடையும் படிச் செய்யலாம்.

அரசு அதற்கான முயற்சியில் இறங்குமா?

தமிழக, பா.ஜ.,விற்கு கூட்டம் கூட்டி, 'மிக்சர்' தின்பதில் தான் ஆர்வம் இருக்கிறதே தவிர, இதுபோன்ற தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை என்பது வேதனை!

------

ஆசிரியர் பணி நியமனம் எப்போது?


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக கூறப்பட்டாலும், கல்வித் துறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை. காரணம், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப் படவில்லை.

மேலும், மாணவர்கள் யாருமின்றி, 311 'நிழல்' பள்ளிகள் நடந்து வருவதாகவும், அவற்றில், 432 ஆசிரியர்கள் பணி புரிவதாகவும், 'நிடி ஆயோக்' அறிக்கை கூறுகிறது.

வேலை செய்யாத ஆசிரியர்களுக்கு, அரசு நிதி ஒருபுறம் வீணடிக்கப்படுகிறது என்றால், மறுபுறம் ஓராசியர்கள் பள்ளிகள் பல இயங்கி வருகின்றன.

ஏற்கனவே, பல்வேறு காரணங்களால் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டுகளில், 2,000 முதுநிலை ஆசிரியர்கள், 6000 பட்டதாரி ஆசிரியர்கள், 2000 இடைநிலை ஆசிரியர்கள், 12,000 முதல், 18,000 ரூபாய் வரை ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் பெற்று பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமிக்கப்பட்ட, 10,000 ஆசிரியர்கள் பணி தொடர அனுமதிக்கப்படுவாரா அல்லது மீண்டும் புதிதாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவரா என்ற கேள்வியும் எழுகிறது.

இக்காலிப் பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில், எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.

முதல்வர் உத்தர விடுவாரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us