/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியை மறப்பதா?
/
எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியை மறப்பதா?
PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM

கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அ.தி.மு.க.,வை துவங்கிய எம்.ஜி.ஆர்., அதில் வெற்றியும் பெற்றார்.
அதன்பின் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை விட மிக தீவிரமாக தி.மு.க.,வையும், கருணாநிதியையும் எதிர்த்தார். இன்னும் சொல்லப் போனால், தி.மு.க.,வை, 'தீய சக்தி' என்று தான் அழைத்தார். அ.தி.மு.க.,வின் பலமே தி.மு.க., எதிர்ப்பு மற்றும் கருணாநிதி குடும்ப அரசியல் எதிர்ப்பு தான்.
அ.தி.மு.க., தொண்டர்களும் இந்த திசையில் தான் பயணித்தனர். ஆனால், சமீபகாலமாக பழனிசாமியின் போக்கு, கட்சியை திசை மாற்றி அழைத்து செல்வது போல் தெரிகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், 'இன்னும் 27 அமாவாசை யில் தி.மு.க., ஆட்சி போய் விடும். 2024ல் சட்டசபைக்கும் தேர்தல் வரும்' என்று கூறிய பழனிசாமி, இப்போது தி.மு.க.,வுக்கு சாதகமாக செயல்படுகிறார்.
பலமான எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் அவர், ஏன் தி.மு.க., எதிர்ப்பில் தீவிரம் காட்டவில்லை; எதற்கு மேலோட்டமான, மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
தான் முதல்வராக இருந்த போது, தி.மு.க., எவ்வளவு தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்தது என்பதை பழனிசாமி மறந்து விட்டாரா?
தன் ஆட்சி காலத்தில், தி.மு.க.,வினர் மீதான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்தி, தண்டனை பெற்று தரும் முயற்சியில் ஏன் பழனிசாமி ஈடுபடவில்லை?
ஒரு வேளை, '2021ல் தோற்று விடுவோம். அப்போது, தி.மு.க., அரசு தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து விடக் கூடாது' என, இருந்து விட்டாரா?
சிறுபான்மையினர் ஓட்டுக்காக பா.ஜ., உறவை முறித்துக் கொண்டார். பா.ஜ.,வை எதிர்க்க, தி.மு.க.,வை அனுசரித்து செல்வது சரியல்ல; எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகள் இதை ஏற்க மாட்டர்.
முதல்வர் பதவி தந்த சசிகலாவையும், ஜெ.,யால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்தையும் புறக்கணித்து விட்டார். நான்கு ஆண்டுகள் தன் ஆட்சிக்கு துணை நின்ற பா.ஜ.,வையும் ஓரங்கட்டி விட்டார்.
இப்போது அ.தி.மு.க.,வின் அடிப்படை கொள்கையான, தி.மு.க., எதிர்ப்பையும் ஓரங்கட்டி விட்டார். 2026 சட்டசபை தேர்தலில் வென்று முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் பழனிசாமி, தி.மு.க.,வை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
இல்லை என்றால், இதுவரை எட்டு தோல்விகள் கண்ட பழனிசாமி, ஒன்பதாவது தோல்வியை யும் சந்திக்க வேண்டி வரும்.
விடை இருக்கா கனிமொழி மேடம்?
என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை,
குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டு
நடப்புகளையும், உண்மை நிலவரங்களையும் அறிந்தோருடன் நட்பு கொண்டு, அறிவை
வளர்த்துக் கொண்டால், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பிரதமர் மோடியிடம் 15
லட்சம் ரூபாயை கேட்டிருக்க மாட்டார்,
ஒரு எம்.பி., எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்து கொள்ளாமல் பேசுவது, அவருக்கு போதுமான அறிவு இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரதமர் மோடி, 'வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பணத்தை மீட்டால், நம் நாட்டு
மக்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்க முடியும். அந்த
அளவுக்கு பணம் பதுக்கப்பட்டுள்ளது. இதை மீட்டு, நம் நாட்டு வளர்ச்சிக்குப்
பயன்படுத்தலாம்' என, கடந்த லோக்சபா தேர்தலின்போது பேசினார்.
இந்த
விபரத்தை கனிமொழி அறியவில்லை. இத்தனைக்கும், இவருக்கு டில்லியில் ஏராளமான
நட்புகள்; போதாகுறைக்கு, மீடியாவில் வேலை பார்த்தவரும் கூட!
துல்லியமான பேச்சு தான் இவர் வாயிலிருந்து வர வேண்டும்.
'தி.மு.க.,
ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து, தமிழகத்தில் மதுக்கடைகளை
மூடுவதற்காக தான் இருக்கும்' எனப் பேசினார்; ஆனால், நடப்பது என்ன... தமிழக
மக்கள் அறிவர்.
எனவே, '15 லட்சம் ரூபாய் எங்கே?' என மோடியிடம்
நீங்கள் கேட்டால், 'மதுக்கடைகளை மூடப் போவது எப்போது?' என, மக்கள் திருப்பி
கேட்பர். விடை இருக்கா?
புதிய சிவில் நீதிபதிகள் கவனத்திற்கு...!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் தமிழகத்தில், 245 சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், நீதிமன்றங்களில் வழக்கு நடத்திய அனுபவம் இல்லாத இளம் வழக்கறிஞர்கள் தான்.
உதாரணமாக, திரு வண்ணாமலை மாவட்டத்தின் பழங்குடியின பெண்ணான, 23 வயது ஸ்ரீபதி, திருக்கோவிலுார் பெண் வழக்கறிஞரான, 24 வயதான அனிஸ் பாத்திமா, துாத்துக்குடியில் மணல் மாபியாக்களால் படுகொலை செய்யப்பட்ட, லுார்து பிரான்சிஸ் மகனான 24 வயதான ஏசுவடியான் ஆகியோர் சிவில் நீதிபதிகளாக தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் சட்டப் படிப்பை சமீபத்தில் முடித்தவுடனே, தேர்வுகள் எழுதியதால், சிவில் நீதிபதி தேர்வுகள், அவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்திருக்கலாம்.
ஆனால், போதிய வழக்குகள் நடத்திய அனுபவம் இல்லாத காரணத்தால், மிகவும் தயக்கத்துடன் தான், மூத்த வழக்கறிஞர்கள் இவர்களிடம் தங்களது வழக்குகளை நடத்துவர்.
தற்போது, தேர்வாகிஉள்ள சிவில் நீதிபதிகள் அனைவரும், தங்களது வழக்குகளில் தீர்ப்பு எழுதும் போது, அனைத்தையும் நன்றாக படித்து அலசி ஆராய்ந்து, யார் பக்கம் நீதி உள்ளதோ அதை கூற வேண்டும்; 1 சதவீதம் கூட நேர்மை தவறக்கூடாது.
தங்களது மேல் அதிகாரிகளான, மூத்த நீதிபதிகளிடம் சில நேரங்களில் ஆலோசனை பெற்றாலும், அவை சரியானவையா என்று தீர ஆராய்ந்து, சுயமாகவே முடிவு எடுக்க வேண்டும்.
எப்போதும் நேர்மையாக நடந்து கொண்டால், உங்களை நெருங்க யாரும் அஞ்சுவர்.
உதாரணமாக, மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு மிகுந்த செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றவர்களுக்கு எதிராக, தற்போது வரை வளைந்து கொடுக்காத நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சி.வி.கார்த்திகேயன், ஜெயச்சந்திரன் மற்றும் சென்னை மாவட்ட நீதிபதி அல்லி போல, துணிச்சலாக, நேர்மையாக பணியாற்றுங்கள்.
ஒவ்வொரு வழக்கிலும் நீதி வழங்கும் முன் உங்களது மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் பல உயரங்களை நீங்கள் எட்ட, 'அட்வான்ஸ்' வாழ்த்துக்கள்!

