PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:48 AM

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களுக்கு பின், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில், அ.தி.மு.க.,வும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
காலச் சக்கரத்தின் சுழற்சியில், அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது!
'கண்ணுக்கெட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை' என்றவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் கட்டிக் காத்த கட்சி, அரசியலில் பால பாடம் கூட கற்காத கட்சியிடம், இன்று, தன் எம்.எல்.ஏ.,க்களை தாரை வார்த்தபடி இருக்கிறது.
அதேபோன்று, மே.வங்கத்தில், கிட்டத் தட்ட 34 ஆண்டுகள் கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2011ல் மம்தாவின் திரிணமுல் காங்கிரசிடம் ஆட்சியை இழந்து, வீழ்ந்து போனது; இன்றுவரை அக்கட்சியால் எழ முடியவில்லை.
கம்யூனிஸ்ட்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி, 15 ஆண்டு கால ஆட்சியில், தன்னை எவராலும் அசைக்க முடியாத சக்தியாக நினைத்து, ஆணவமாக நடந்து கொண்டார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் ஆட்சியை பறி கொடுத்து, பரிதாபமாக நிற்கிறார்.
பழம் பழுத்த மரத்தை தேடிச் செல்லும் பறவைக் கூட்டம் போல், இன்று அவரது கட்சியினர், பா.ஜ.,வில் அடைக்கலமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அதிகார மாற்றம், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின்போது, உலக அரங்கில் பிரபலமாகப் பேசப்பட்ட இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், போருக்கு பின் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் தோல்வியடைந்தார்.
இப்படி ஆட்சிகள் மாறி, காட்சிகள் மாறுபடுவதற்கு காரணம், அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில், ஆட்சியாளர்கள் அரங்கேற்றும் மக்கள் விரோத செயல்களே!
தமிழகத்திலும் அதுபோன்ற ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அரசு இந்த மாற்றத்தை மக்களுக்கான ஏற்றமிகு ஆட்சியாக மாற்றினால், காலச்சுழற்சியில் ஆட்சி மாறினாலும் கூட, காமராஜர் போன்று, காலத்தை வென்ற தலைவராக விஜய், வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!
பயிற்சி அவசியம் அமைச்சர்களே!
எஸ்.ரேவதி பாலு, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை கூடுவதற்கு முன், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் சட்டசபை நடைமுறைகள், விதிகள் குறித்து பயிற்சி வழங்கப் படும்; மூத்த, எம்.எல்.ஏ.,க் கள் இப்பயிற்சியில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களை இளம் எம்.எல்.ஏ.,க்களுக்கு எடுத்து கூறலாம்' என்று அறிவித்துள்ளார், சபாநாயகர் பிரபாகர்.
இது வரவேற்றப்பட வேண்டிய விஷயம்!
சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள மட்டுமல்ல; மக்கள் நல திட்டங்களை தீட்டவும், அதை திறன்பட செயல்படுத்தவும் கூட பயிற்சி அளிக்க வேண்டும்.
தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் பலர் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர்களாக உள்ளனர். எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத இவர்களுக்கு, அரசியல் அனுபவம் உள்ளவர்களை வைத்து பயிற்சி அளிப்பதன் வாயிலாக, அவர்களால் திறமையாக செயல்பட முடியும்.
தமிழகத்தில் முதல் முறையாக, ஒரு மாற்று ஆட்சி அமைந்திருக்கிறது; அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு ஓர் ஆர்வம் இருக்கும்.
அதனால், முதலில் தாங்கள் எவ்வாறு பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரிந்து, இவர்கள் பணியாற்ற ஆரம்பித்தால், இந்த மாற்று ஆட்சி நல்லாட்சியாக அமைய வாய்ப்பு இருக்கும்!
எட்டாக்கனியாகும் நீதி!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, 'முரசொலி' பத்திரிகை அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டு, இவ்வழக்கு, 2019 முதல் நடைபெற்று வருகிறது; இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையில், இரண்டு சட்டசபை தேர்தல்களும் நடந்து முடிந்து விட்டன.
இதேபோல், காங்கிரஸ் பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக கூறப்படும் வழக்கும், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது; இதுவரை அவ்வழக்கும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
முதல் வழக்கில், நீதி மன்றமே முரசொலி அலுவலக இடத்தின் மூல பத்திரத்தையோ அல்லது அதன் நகலையோ கொண்டுவரச் சொல்லி, அதை ஆய்வு செய்தபின் முடிவை எடுக்கலாம்; இதைச் செய்வதற்கு, சில வாரங்கள் போதும்!
அதேபோன்று, ராகுல் இரட்டை குடியுரிமை வழக்கில், நீதிமன்றமே மத்திய அரசின் வாயிலாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து, ராகுல் இங்கிலாந்து குடியுரிமை உள்ளவரா என்பதற்கான விபரங்களைப் பெறலாம்.
இந்த விபரங்களை பிரிட்டிஷ் அரசிடமிருந்து பெற கூடிப் போனால், ஒரு மாதம் ஆகலாம்!
ஆனால், மேற்கூறிய இரண்டு வழக்குகளும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
இப்படி சில மாதங்களில் தீர்க்க வேண்டிய வழக்குகள் கூட, ஆண்டுக்கணக்கில் இழுத்து கொண்டு போவதால் தான், இந்திய நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், வாதி, பிரதிவாதி என, இருதரப்பினருக்குமே ஏகப் பட்ட செலவும், நீதிமன்றத்தின் நேரமும் வீணாகின்றன.
இந்த இழுத்தடிப்பினாலேயே, ஊழல் வழக்கில் சிக்கிய அரசியல்வாதிகள் பலர், தீர்ப்பு வருவதற்கு முன்பே, இறந்து விடுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கத் தான், சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இங்கும் இறுதி தீர்ப்பு வெளிவர பல ஆண்டுகள் ஆகின்றன; குற்ற வழக்கின் வீரியம் குறையும் முன் தண்டனை கிடைத்தால் தானே ஊழல்வாதிகளுக்கு பயம் வரும்!
மத்திய அரசும், நீதித் துறையும் ஒருங்கிணைந்து காலதாமதம் செய்யாமல், விரைந்து மக்களுக்கு நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்; இல்லையென்றால், இந்நாட்டில் நீதி என்பது, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி விடும்!
