தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம்!

 பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம்!

 பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம்!

4


PUBLISHED ON : ஏப் 14, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 14, 2026 01:47 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்: வரும் சட்டசபை தேர்தலில், எவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, எவர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மனதில் வைத்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியில் கஞ்சா கடத்தல், பாலியல் வன்முறை, விலைவாசி, சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் என, அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல... கொலை, கொள்ளை, ரவுடித்தனம் மிதமிஞ்சி உள்ளது; அமைச்சர்களின் அநாகரிகப் பேச்சு, பெண்களை இழிவு படுத்துதல் குறைந்தபாடில்லை.

ஐந்தாண்டுகளில் உலக வங்கியில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதை தவிர, வேறு எந்த சாதனையையும் நிகழ்த்தவில்லை. இந்நிலையில், மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

மாற்று அரசியலை முன் வைத்து களமிறங்கியுள்ள விஜயோ, இன்னும் மக்களுடன் கலக்காமல், சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார்.; அவரைப் போன்றே அவரது தொண்டர்களும் உள்ளனர். மக்களின் பிரச்னையே தெரியாமல், அதை தீர்க்க முடியாது. அதனால், இவர் இன்னும் அனுபவப்பட, நிறையவே பயணப்பட வேண்டியவர்; இந்த தேர்தலுக்கானவர் அல்ல!

அடுத்து சீமான்... இவர் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன் வைத்த போதும், அவரது மொழி அரசியல், தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடர் மற்றும் பிற மொழி பேசும் மக்களின் ஓட்டுகளை பெற்றுத் தராது.

அவ்வகையில், தற்போதைய நான்கு முனை போட்டியில், ஓரளவு நிர்வாக திறமையும், அரசியல் அனுபவமும் பெற்றவராக கண்ணுக்கு தெரிபவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டுமே!

இவர் தன் ஆட்சியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, திறமையாக ஆட்சி செய்தார். தி.மு.க., ஆட்சியைப் போன்று சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருக்கவில்லை. புயல், மழை, வெள்ளக் காலங்களை, தி.மு.க., அரசுடன் ஒப்பிடும் போது சிறப்பாகவே கையாண்டார்.

தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து, அதில் கால்வாசியை கூட நிறைவேற்ற முடியாமல் இருப்பது போல் அல்லாமல், மத்திய அரசை அனுசரித்து, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.

எனவே, பழனிசாமிக்கு மீண்டும் ஒருவாய்ப்பு கொடுக்கலாமே!

lll

அக்கறை காட்டாத கட்சிகள்! ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1956ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது, வைகை அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என, ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை பயன்பாட்டிற்கு வந்து, 70 ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒரு முறை கூட துார் வாரப்படவில்லை.

இதனால், அணையின் அடிமட்டத்தில், 20 அடிக்கும் மேல் வண்டல் மண் படிந்துள்ளது. இதன்காரணமாக, நீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் அதிக நீரை சேமிக்க முடிவதில்லை.

அணையை துார்வாரக் கோரி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், விவசாயிகள் கோரிக்கை வைத்தும், இரு திராவிட கட்சிகளும் செவிசாய்ப்பதாக இல்லை.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அணையை துார் வார, 244 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, பின் நிதியை காரணம் காட்டி கைவிடப்பட்டது.

அதேபோன்று தான், ஆளும் தி.மு.க., அரசு, 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறியது; ஆனால், இன்று வரை துார்வாரப்படவில்லை.

தேர்தலை முன்னிட்டு, ஒரே நாளில், 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒவ்வொரு குடும்பதிற்கும், 5,000 ரூபாய் வழங்க முடிந்த தி.மு.க., அரசுக்கு, அணையை துார்வார சில நுாறு கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா அல்லது துார்வார நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக் கிறதா?

தமிழகத்தை ௫௯ ஆண்டுகளுக்கும் மேல் மாறி மாறி ஆட்சி செலுத்தி வரும் இரு திராவிட கட்சிகளும், இலவச திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்கின்றனர். ஆனால், மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணையை துார் வார எவருக்கும் மனமில்லையே!

lll

தொண்டர்கள் வழி விட வேண்டும்! ஆ.ஈஸ்வரன், ஆசிரியர் (பணி நிறைவு), சேலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நட்சத்திர அந்தஸ்துடன் அரசியலுக்கு வந்தவர் தான், எம்.ஜி.ஆர்., பிரசாரத்திற்கு ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மூன்று நாட்கள் கழித்த பின்பே அவ்விடத்திற்கு வருவார். காரணம், பேசுவதற்கு திட்டமிட்ட இடங்கள், 10 என்றால், வழிநெடுகிலும் மக்களின் அன்பு கட்டளையால் பேசிய இடங்கள், ஐம்பதை தாண்டும். மூன்று நாட்கள் ஆனாலும் கூட்டம் கூடி கலைந்தாலும், மக்களிடம் கட்டுப்பாடு இருக்கும்.

எம்.ஜி.ஆரை கண்டதும் அவர்களிடம் ஆவேசம், ஆர்ப்பரிப்பு இருக்குமே தவிர, அடாவடித்தனமோ, எல்லை மீறல்களோ இருக்காது.

ஆனால், 'என் வாகனத்தை பின் தொடராதீர்கள்; பாதுகாப்போடு பயணியுங்கள்' என, விஜய் எத்தனை முறை கூறினாலும், அதை கேட்கும் மனநிலையில் தொண்டர்கள் இல்லை.

வாகனத்தை பின் தொடர்வதோடு இல்லாமல், அதன்மீது ஏறுவது, துண்டுகளை எறிவது, குளிர்பான பாட்டில்களை, மாலைகளை வீசுவது என, திரையரங்குகளில் செய்யும் அநாகரிகங்களை பொதுவெளியில் அரங்கேற்றுகின்றனர்.

மாவட்டத்தில் ஒன்றிரெண்டு இடம் என இல்லாமல், தமிழகம் முழுதும் மற்ற கட்சி தலைவர்களை போல தொடர்ந்து பயணம் செய்திருந்தால், இவ்வளவு கூட்ட நெரிசல் இருந்திருக்காது; தொண்டர்களும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பர்.

மாதத்துக்கு ஒரு நாள், ஓர் இடம் என்ற விஜயின் பயணத் திட்டமே, இதுபோன்ற சம்பவங்களை உருவாக்குகிறது.

எனவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு சுற்றுப்பயணம் அமைத்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற திறமைசாலிகளை, இவ்விஷயத்தில் விஜய் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் விஜயை, தங்கள் தலைவனாக ஏற்று, அவரது ஒவ்வொரு செயலுக்கும் முட்டுக் கொடுத்து நிற்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தமிழகம் முழுதும் சென்று, விஜய் அவர்களை சந்திக்க வேண்டும்.

தொண்டர்களும், விஜய் மக்களிடமும், மீடியாக்களிடமும் இன்னும் நெருங்கி வர வழிவிட வேண்டும். அப்போது தான், இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலிலாவது வெற்றியை விஜய் அறுவடை செய்ய முடியும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us