/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உதயநிதி பேச்சை செவிமடுக்காதீர்கள்!
/
உதயநிதி பேச்சை செவிமடுக்காதீர்கள்!
PUBLISHED ON : ஜன 27, 2024 12:00 AM
ஆர்.பரத்வாஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை...' என்று பேசியுள்ளார், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி.
இப்படி அறிவுப்பூர்வமான விஷயங்களை, இந்த பட்டத்து இளவரசர் ஒருவரால் மட்டுமே பேச முடியும். 500 ஆண்டு கால பிரச்னை, 150 ஆண்டு கால நீதிமன்ற விசாரணைகள், இறுதியாக ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், ஒருமனதாக தீர்ப்பு வழங்கியே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அந்த ஐந்து நீதிபதிகளிலும் ஒருவர், முஸ்லிம்; அயோத்தியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்த, தொல்லியல் நிபுணர் கே.கே.முகமது என்ற முஸ்லிம் பற்றி எல்லாம் உதயநிதிக்கு தெரியாதா?
முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஒரு வேண்டுகோள்...
அயோத்தி விவகாரம் அல்லா - ராமர் பிரச்னை இல்லை. மாறாக, ஹிந்துக்கள் நிலமா அல்லது முஸ்லிம்கள் நிலமா என்று தகராறு எழுந்து, அது தீர்க்கப்பட்டுள்ளது
கடந்த 2019ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், அதை தி.மு.க. உட்பட எந்த ஒரு பெரிய கட்சியும் எதிர்க்கவில்லை; இன்று, இப்படி பேசுவது ஏன் என்று சிந்தியுங்கள்
அன்று ஹிந்து - முஸ்லிம் பிரச்னையை துாண்டி, ஆங்கிலேயன் நம்மை ஆண்டான். இன்று உதயநிதி போன்றோர் அதே பாணியில் இப்படி பேசுகின்றனர். இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்
உங்களின் ஓட்டு உதயநிதிக்கு வேண்டும். இப்படி வீண் பேச்சுகளை பேசினால் நீங்கள் மனம் குளிர்ந்து விடுவீர்கள் என, உங்களை தரம் தாழ்த்தி பார்க்க முயற்சிக்கிறார். ஜாக்கிரதையாக இருங்கள்
தாங்கள் செய்த சாதனைகளை கூறி என்றாவது இவர்கள் ஓட்டு கேட்டு இருப்பரா... இவர்களிடம் இருப்பது இரண்டே வியூகம் தான்... இலவச அறிவிப்புகள் அல்லது மதம், ஜாதி வெறியை துாண்டும் பேச்சுக்கள்
ஓட்டு வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஸ்டாலின் உட்பட, அவரது கட்சியினர் அன்று வேல் பிடித்து வெட்கம் இல்லாமல் நின்று, 'போஸ்' கொடுத்தனர்; ஆட்சிக்கு வந்ததும் ஒரு ஹிந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து கூறுவதில்லை. இதிலிருந்தே இவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ளுங்கள்.
பாரத தேசத்தில் நாம் எல்லாரும் உறவினர்களே. நம்மை பிரித்து ஆண்ட ஆங்கிலேயர் புத்தி, ஈ.வெ.ராமசாமியை துதிபாடும் உதயநிதியிடம் இருப்பது இயற்கையே.
எனவே, அவரது பேச்சை செவிமடுக்காதீர்கள்!
விவசாயத்துக்கு உரிய பரிசுகள் வழங்கலாமே!
ஏ.அஸ்மாபாக்
அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகளை
அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தங்கக்காசு,
சைக்கிள், பீரோ, பாத்திரங்கள், இருசக்கர மோட்டார் சைக்கிள்கள் என, பல
பரிசுகளை வழங்கினர்.
ஆனால், அதை விட அவர்கள் சார்ந்துள்ள விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த ஏதுவான பொருட்கள் பரிசளிக்கப்பட வேண்டும்.
உழவுத்
தொழிலுக்கு உதவும் டிராக்டர்கள், சூரிய சக்தி பம்ப் செட்டுகள், பூச்சி
மருந்து தெளிக்கும் ட்ரோன்கள், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக
இயற்கை இடு பொருட்கள் போன்ற பயன்மிக்க பொருட்களை பரிசளிப்பதுடன், வெற்றி
பெற்ற வீரர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கலாம்.
'ஸ்போர்ட்ஸ்
கோட்டா' என்ற வரிசையில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டையும் சேர்த்து,
அவ்வீரர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். காயமுற்றோருக்கு
வழங்கப்படும் முதலுதவி மற்றும் மேல் சிகிச்சைக்கான வசதிகளையும் அரசு
மேம்படுத்த வேண்டும்.
மாநில அரசால் தத்தெடுக்கப்பட்ட விளையாட்டாக,
ஜல்லிக்கட்டை அங்கீகரிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், இந்த பாரம்பரிய
விளையாட்டுக்கு புத்துயிர் கொடுத்தால், அவரை மனமுவந்து பாராட்டலாம்.
அடுத்த வரலாறுக்கு பிரதமர் ஆயத்தம்!
-ரெ.ஆத்மநாதன்,
டாம்பா, புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோவிலை திறந்து வைத்த கையுடன்,
பிரதமர் மோடி, 'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' திட்டம் வாயிலாக, ஒரு
கோடி வீட்டுக் கூரைகளில், சோலார் மேற்கூரைகளை அமைக்க திட்டமிட்டு அதற்கான
மாதிரிகளை பார்வையிட்டது, அடுத்த வரலாறு படைக்க அவர் ஆயத்தமாகி விட்டதையே
காட்டுகிறது.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள பெரும்பாலான
வீடுகள் மற்றும் தொழிற்சாலை கூரைகளில், சோலார் பேனல்களைக் காணும் போது,
குளிர் பிரதேசங்களான இங்கேயே இவ்வளவு பேனல்கள் நிறுவும்போது, வெப்ப மண்டல
நாடான நம் நாட்டில் இதுபோன்று நிறுவினால் மின்சார பற்றாக்குறையை பல மடங்கு
குறைக்கலாமே என்று நான் பலமுறை எண்ணியது உண்டு.
ஆனால், அது பற்றிய
விபரங்களை தேடியதில், பல இடங்களில் பேனல்களை நிறுவ மானியங்கள் வழங்கப்பட்ட
போதிலும், அதன் ஆரம்பகட்ட செலவு அதிகம் என்பதாலும், சரியான பராமரிப்பும்,
பழுதடைந்தால், அவற்றை கையாள போதிய டெக்னீஷியன்கள் இல்லாத காரணங்களாலும்,
அது சாதாரண மக்களிடையே பிரபலமாகவில்லை என்று தெரிய வந்தது.
பல அரசு
அலுவலகங்களில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள், பராமரிப்பின்றி விரைவாகவே அதன்
பயன்பாட்டை இழந்து விட்டதும் தெரியவந்தது. இந்த குறைபாடுகளை களையும்
விதமாக, உரிய நடவடிக்கைகள் எடுத்து, அரசு செலவிலேயே இத்திட்டத்தை மேற்கொள்ள
பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று நிச்சயம் நம்பலாம்.
அவ்வாறு
நடைபெறுகையில், ஆண்டின் பல மாதங்கள் அதிக வெப்பம் காணப்படும் நம் நாட்டில்,
சோலார் பேனல்கள் வாயிலாக நிச்சயமாக மின்சார தன்னிறைவை எட்ட முடியும்.
மேலும், நிலக்கரியை எரித்து தயாரிக்கும் மின்சாரத்தால், சுற்றுச்சூழல்
மாசுபடுவதும் பெருமளவு குறையும்.
ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவை
எட்டினால் தான், நாடு உண்மையான வல்லரசாக பரிணமிக்க முடியும். நம் பிரதமர்
அந்த வழியில் செல்வது நமக்கெல்லாம் அனுகூலமே. இதற்காக, அவரை மனதார பாராட்ட
வேண்டியது, ஒவ்வொரு இந்தியனின் கடமை!

