/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க.,வின் 'பி டீம்' அ.தி.மு.க.,
/
தி.மு.க.,வின் 'பி டீம்' அ.தி.மு.க.,
PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM
எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வுக்கு முரசொலி பத்திரிகை போல, பா.ஜ.,வின் முரசொலி, 'தினமலர்' நாளிதழ் என்று விமர்சித்து, மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்.
தினமலர் நாளிதழ் என்றும் நடுநிலையுடன் தான் செய்திகளை வெளியிடுகிறது. 'காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' என்பதை போல இவர் பேசுகிறார்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பங்காளிகள் என்று கூறியது தினமலர் நாளிதழோ, பா.ஜ.,வோ அல்ல; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் முனுசாமி தான்.
அரசியல் களத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு சில ஆண்டுகளாகவே அ.தி.மு.க., என்பது, தி.மு.க.,வுக்கு, 'பி' டீமாக இருந்து வருவது நன்றாக தெரியும்.
தி.மு.க., எப்போதும் காங்., அல்லது பா.ஜ., போன்று ஏதாவது தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்கும்; ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க., கட்சி பா.ஜ.,வின் அடிமை என்று விமர்சிக்கும்.
சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில், 'அண்ணாமலையின் பாத யாத்திரைக்கு பின் பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, தமிழகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும்' என்றே கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., மட்டும் பா.ஜ.,வுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும். இதனால், அ.தி.மு.க.,வில் சிலருக்கு மத்தியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம். இது, முதல்வர் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் நன்றாக தெரியும்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால், வளமான எதிர்காலம் இருக்கும் என்று தெரிந்த போதும், தனித்து நின்று, தான் தோற்றாலும் பரவாயில்லை... நம் பங்காளி கட்சி தானே வெற்றி பெறுகிறது. நம் எதிரிக் கட்சியான பா.ஜ., தமிழகத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில், பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பங்காளிக்காக தன் சொந்த பிள்ளையை காவு கொடுக்கும் பரந்த மனப்பான்மை யாருக்கும் வராது.
பழனிசாமி எடுக்கும் முடிவுகள், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை பாழாக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
தேசிய நீரோட்டத்தில் பயணிப்போம்!
கே.என்.ஸ்ரீதரன்,பெங்களூரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வர இருக்கும் லோக்சபா தேர்தல்,
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இம்முறை இந்த கட்சி, அடுத்த முறை அந்த
கட்சி என்று வாக்களிப்பதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு
வாக்களிப்பது தான் தமிழகத்திற்கு நல்லது.
மோடி எதிர்ப்பு என்ற
ஒற்றை கொள்கையில், பதவி ஆசை கொண்ட சுயநல அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளும்,
குடும்ப அரசியல் செய்வோரும், 'இண்டியா' என்ற கூட்டணியில் ஒன்று
சேர்ந்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பே, அவிழ்த்து கொட்டிய நெல்லிக்காய் மூட்டை போல சிதறி ஓடும் இந்த கட்சிகளை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பர்?
தமிழகத்தை
பொறுத்தவரை, மறைந்த தலைவர்களின் பெயரை சொல்லி, எத்தனை ஆண்டுகள் தான்
அரசியல் செய்வர் என்று தெரியவில்லை. தற்போதைய தலைவர்கள் தனக்கென்று
ஆளுமையையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
'கட்சி
இருக்கிறது, தொண்டர்கள் இருக்கின்றனர், கட்சி பணம் பல ஆயிரம் கோடிகள்
இருக்கிறது. நமக்கு திறமை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?' என்று
களத்தில் நிற்கின்றனர்.
ஒரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த
சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ரா.செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்ற
அறிவாற்றல் மிக்க தலைவர்கள், லோக்சபா உறுப்பினர்களாக இருந்தனர்;
விவாதங்களிலும், முடிவுகள் எடுப்பதிலும் அவர்களின் பங்களிப்பு பெரிதாக
இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
தற்போதுள்ள
மத்திய அரசில் ஊழல் இல்லை. பொருளாதார நடவடிக்கைகள் சரியான திசையில்
செல்கின்றன. கொரோனா காலத்தில் இலவச தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. பண வீக்கம்
கட்டுக்குள் இருக்கிறது.
பா.ஜ.,வுக்கு பார்லிமென்ட்டில் தமிழகத்தை
சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்றாலும், மத்திய அரசின் நலதிட்டங்களால்
அதிகம் பலன் பெற்றது தமிழக மக்கள் தான்.
ஒட்டுமொத்த நாட்டு
மக்களின் எண்ண ஓட்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தான் மூன்றாவது
முறையும் பிரதமராக வருவார் என்று, கருத்து கணிப்புகள் சொல்கின்றன.
இதுதான்
நிலை என்று தெரிந்த பின், கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பை கைவிட்டு, மோடியை
ஆதரிப்பது தமிழக மக்களின் கடமை. தேசிய நீரோட்டத்தில் கலந்து பயணிக்க இது
ஒரு நல்ல வாய்ப்பு.
பிரமிப்பூட்டும் ஸ்ரீபதியின் சாதனை!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில்,
கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 245 சிவில் நீதிபதி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை, 2023 ஜூன் 1ல் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த பணியிடத்துக்கு மொத்தம், 12,037 பேர்
விண்ணப்பித்து இருந்தனர். முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில்
வெற்றி பெற்ற 472 பேர், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில்,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த,
23 வயது பழங்குடியின பெண் ஸ்ரீபதி, நீதிபதி பணிக்கு தேர்வாகியுள்ளார்.
'தமிழ்
வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை' என்ற அரசாணை வழியே,
ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலை கிராம
சூழ்நிலையில் எளிதில் இணைய வசதி கிடைக்காத, பாமர மக்கள் அதிகம் வசிக்கும்
பகுதியில் படித்து வளர்ந்த ஸ்ரீபதியின் சாதனை பிரமிப்பூட்டுகிறது.
அக்கறை, ஆர்வம், இலக்கு இருந்தால், எந்த சூழ்நிலையிலும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு.
முன்னேறுவதற்கு அரசு கொடுக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தினால், எந்த மதம், ஜாதி மாணவர்களும் முன்னேற முடியும்.
சமூகநீதி
பேசும் அரசியல்வாதிகள் இதுபோன்ற வசதி குறைவான மலை கிராமங்களில் வசிக்கும்
மாணவ - மாணவியர் பலர் உயர்கல்விக்கு செல்லவும், அவர்கள் அரசு பணிக்கு
விண்ணப்பிக்கவும் வேண்டிய வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும்.
அவ்வாறு செய்தால், இன்னும் நிறைய ஸ்ரீபதிகள் வெளிவருவர்.

