/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நன்மதிப்பு!
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நன்மதிப்பு!
PUBLISHED ON : ஜன 24, 2024 12:00 AM
வி.பத்ரி, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்'கடிதம்: தமிழக கவர்னர் ரவிக்கு, ஒரு நல்ல கவர்னர் எப்படி இருக்க வேண்டும் என்று சுத்தமாக தெரியவில்லை.
புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து விட்டு, பேசாமல் இருக்க வேண்டும்
தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை, அப்படியே சட்டசபையில், 'கவர்னர் உரை' என்ற பெயரில் வாசிக்க வேண்டும்
தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட வேண்டும்
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களில், கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்
எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்காமல், உடனே ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்
முக்கியமாக, கவர்னர் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், கவர்னர் மாளிகைக்குள் மட்டும் உலா வந்து, அங்கு துள்ளி ஓடும் மான்களை ரசித்து கொண்டிருக்க வேண்டும்
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்து, முதல்வரை புகழ்ந்து தள்ள வேண்டும்
அரசின் செயல்பாடுகளை ஒரு போதும் விமர்சிக்க கூடாது
மத்திய அரசு வழங்கும் நிதிக்கு கணக்கு கேட்டு, முதல்வரையும் அமைச்சர்களையும் ஆத்திரமூட்ட கூடாது
ஆக மொத்தம், மாநில அரசின் தலையாட்டி பொம்மையாக இருந்து, ஆமாம் சாமி போட வேண்டும்.
இப்படி செய்தால், அவரை இந்திரன், சந்திரன் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் புகழ்ந்து தள்ளுவர். அவ்வளவு ஏன்...? அவர்கள் அடிக்கும் கமிஷன் தொகையில், கணிசமான பங்கை கவர்னர் மாளிகைக்கும் அனுப்பி வைப்பர்.
இதற்கு முன்பிருந்த கவர்னர்கள் பலரும் இப்படித்தான் இருந்துள்ளனர். ஆனால், கவர்னர் ரவி, தன் பதவிக்குரிய அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதும், நேர்மையான நிர்வாகத்தை விரும்புவதும் தான், இவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கிறது.
அதே நேரம், தமிழக மக்கள் மத்தியில், கவர்னர் மீதான நன்மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!
அண்ணாமலை எதிர்காலத்தை இவர் கணிப்பதா?
எஸ்.ஜெயக்குமார்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அண்ணாமலை முதல்வர்
ஆவார் என்பது இலவு காத்த கிளி கதை தான். தமிழகத்தை பொறுத்தவரை, 2026ல்
அ.தி.மு.க., ஆட்சி, பழனிசாமி தலைமையில் கட்டாயம் மலரும். இது எழுதப்படாத
விதி.
குருமூர்த்தி, ரஜினி போன்ற யார் சொன்னாலும், அண்ணாமலை
முதல்வர் ஆவது என்பது நடக்காத விஷயம். இரட்டை இலை துளிர்த்து பசுமையாக
உள்ளது' என துள்ளி குதித்து, ஆரூடம் சொல்லி இருக்கிறார், முன்னாள் அமைச்சர்
ஜெயகுமார்.
'பணம் முக்கியமல்ல. நல்ல கருத்துக்களை மட்டுமே படத்தில்
சொல்வேன்' எனக் கூறி நடித்த ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்., மட்டும் தான்'
என்றும், 'பிட்'டைப் போட்டு இருக்கிறார் ஜெயகுமார்.
அவருக்கு எம்.ஜி.ஆர்., படத்திலிருந்தே ஒரு பாட்டை, மேற்கோள் காட்டி, முகத்தில் கொஞ்சம் 'மேக்கப்' போடுவோமா?
'நடக்கும்
என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்து விடும்...' என்ற இந்த பாடல்
வரிகள் எந்த படத்தில், எம்.ஜி.ஆர்., பாடியது என்று கொஞ்சம் நினைவு கூர்ந்து
பாருங்கள் ஜெயகுமார் அவர்களே...
'ஜெயலலிதா, முதல்வர் பதவியில்
நீடிக்க தகுதியில்லாதவர்' என நீதிமன்றம்அறிவிப்பது வரை, தேனியில் டீக்கடை
நடத்தி கொண்டிருந்த பன்னீர்செல்வம், தான் முதல்வராவோம் என்று பகல் கனவாவது
கண்டிருப்பாரா?
அதே பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் மகுடம்,
அவருக்கு பவ்யமாக கும்பிடு போட்டு கொண்டிருந்த பழனிசாமிக்கு மாறும் என்று
அவரும் தான் எண்ணி இருப்பாரா?
அதுபோல, அண்ணாமலை முதல்வர் ஆக
வேண்டுமா, வேண்டாமா என்பது தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
ஜெயகுமாரோ, பன்னீர்செல்வமோ, பழனி சாமியோ, தினகரனோ, திவாகரனோ, சசிகலாவோ
அல்ல.
அண்ணாமலை முதல்வராவது காலம் தீர்மானிக்க வேண்டிய விஷயமேயன்றி, திராவிட மாடல் கழகங்களோ, முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ அல்ல!
வடக்கு வளர்கிறது; தமிழகம் தாழ்கிறது!
ம.சீனிவாசன்,
கடமலைக்குண்டு, தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உத்தர பிரதேசத்தை கண்டு இன்று உலகமே வியக்கிறது. அங்குள்ள அயோத்தி மாநகரை
கண்டு அகிலமே ஆச்சரியப்படுகிறது. இந்தியாவின் பண்பாட்டு மையமாக அயோத்தி
திகழப் போகிறது. உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக உழைத்து
மாநிலத்தை உயர்த்துகிறார்.
சாதாரண சிற்றுாராக இருந்த அயோத்தி, இன்று
சர்வதேச நகரமாக மாறியுள்ளது. அங்குள்ள மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான
நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சர்வதேச
தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன.
ராம் பாதை, அயோத்யா டாம்
போன்ற கட்டுமானங்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. அயோத்தியிலிருந்து லக்னோ,
அம்பேத்கர் நகர், ரேபரேலி செல்லும் சாலைகள் கண்ணாடிகளாக பளபளக்கின்றன.
மீன்வளம்,
ஊரக வளர்ச்சி, சுற்றுலா, மருத்துவம், விவசாயம் போன்றவற்றில் உ.பி.,
முன்னேறி வருகிறது. வரும் காலங்களில், உலகின் முக்கிய சுற்றுலா மையமாக
அயோத்தி மாறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
அயோத்தியில்
சாதாரணமாக இருந்த நிலத்தின் விலை, இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது. அங்கு
வசிக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். அமிதாப்பச்சனே அங்கு ஒரு இடத்தை வாங்கி
போட்டுள்ளார்.
ஆனால், நம் தமிழகத்தில் குடி பழக்கத்தால் இளைஞர்கள்
சீரழிகின்றனர். இதில், மாணவர்களும் அடக்கம். இலவசங்களால் யாரும் வேலைக்கு
செல்வதில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர்.
அரசு
நிர்வாகத்திலும் ஆயிரத்தெட்டு குளறுபடிகள். ஆனால் நம் முதல்வர், மத்திய
அரசுடன் இணங்கி போவதே இல்லை. கவர்னரிடமும் ஆயிரம் பிரச்னைகள்.
பிரதமர்
தலைமை ஆசிரியர், முதல்வர் ஒரு ஆசிரியர். தலைமையாசிரியர் சொல்படி கேட்டால்
தான் பள்ளி முன்னேறும். அதை விடுத்து, தலைமையை மதிக்காமல் இருந்தால்
ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் தான் இழப்பு.
மத்திய அரசுடன்
இணக்கமாக இருந்தால், நிதி ஆதாரங்கள், பல்வேறு திட்டங்கள் நம் மாநிலத்திற்கு
வரும். அதை விடுத்து ஒன்றிய அரசு, மத வெறியர்கள் என விமர்சித்து விட்டு,
அவர்களிடம் நிதி கேட்டால் எப்படி தருவர்?
சுருக்கமாக, 'வடக்கு
வளர்கிறது; தமிழகம் தாழ்கிறது' என்றே சொல்லலாம். எனவே உத்தர பிரதேசம் போல்
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து
செல்ல முதல்வர் முயற்சிக்க வேண்டும்.

