/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தவறுகளை திருத்தினால் தான் தீர்வு!
/
தவறுகளை திருத்தினால் தான் தீர்வு!
PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

ரவி ராமானுஜம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அன்றாடம் அரசு துறையில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது துாண்டி விட்டு, துாண்டி விட்டு, அரசியல் சதுரங்கம் விளையாடியது, இப்போது அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது.
கடந்த காலத்தில் அ.தி.மு.க., அரசு விட்டுச் சென்ற கடன் 5.25 லட்சம் கோடி. தற்போது 7.75 லட்சம் கோடியாக உயர்ந்தது தான் இந்த அரசின் சாதனை. நிர்வாக ரீதியாகவும் இந்த அரசில் சொல்லி கொள்ளும்படி எந்த சாதனையும் நடக்கவில்லை.
கோடை மழை பெய்து வரும் நாட்களில், தானியங்களை சேமிக்க மற்றும் பாதுகாக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி. பல இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழானதை செய்திகளில் பார்த்தபோது, மனம் மிகவும் வேதனைப்பட்டது.
எதிர்கால சந்ததியினர் கெட்டு போகும் அளவுக்கு ஒருபுறம் மது விற்பனை கூடங்கள் மறுபுறம் கணக்கு வழக்கில்லா அளவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம். கஞ்சா போதையில் சிறுவர்களே கொலை, கொள்ளை போன்ற மனம் பதைபதைக்கும் காரியங்களில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில், போலீசாரையே தாக்கும் அளவுக்கு அவர்கள் புத்தி பேதலித்து கிடக்கின்றனர்.
சொல்ல போனால், தமிழகமே போதை காடாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், நம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி விடும் என்பது மட்டும் உறுதி. இந்த அரசின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள், தங்கள் தவறுகளை திருத்தி கொண்டால் மட்டுமே, மீண்டும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க முடியும்!
கோசாலைகள் அமைக்க வேண்டும்!
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பசு வதையை சகித்துக் கொள்ள
முடியாது... பசுவை வதை செய்பவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவர்' என்று
மிகவும் கோபமாக பேசியுள்ளார். இது நியாயமான கோபம் தான்.
பசு என்பது
பெற்ற தாயை போன்றது. தாய், தன் ரத்தத்தை பாலாக தன் பிள்ளைகளுக்கு ஊட்டுவது
போல், பசுவும் தன் பாலை மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறது. எனவே, அதை வதை
செய்வது மகா பாவம். அதே நேரம், பசுவை வதை செய்வதற்கு தெரிந்தே துணை
போவோரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பொதுவாக, பசுங்கன்றுகளை
எவருமே வதை செய்வதில்லை. காளை கன்றுகளை விட, பசுங்கன்றுகளுக்கு அதிக
மதிப்பு உண்டு. அதிக விலைக்கும் விற்பனையாகும். ஏனென்றால் பசு வளர்ந்தால்,
கன்று ஈனும் மற்றும் பால் கொடுக்கும்.
எனவே, இளம் பசுக்களை எவருமே
வதம் செய்வதில்லை. ஆனால், பசுவை வளர்த்து அதற்கு நல்ல ஊட்டச்சத்துக்கள்
கொடுத்து, அதை சீராட்டி பாராட்டி வளர்த்து வரும் பசுவின் உரிமையாளர்கள்...
அந்த
பசு இனிமேல் கன்று ஈனாது; பால் கொடுக்காது என்ற நிலை வரும் போது, அந்த
பசுவை வளர்ப்பது வீண் செலவு என்று எண்ணி, அடிமாட்டுக்கு விற்பனை செய்து
விடுகின்றனர்.
அதை வெட்டி கொன்று, இறைச்சியாக்கி விற்பர் என
தெரிந்தே, விற்பனை செய்து விடுகின்றனர். பால் வற்றிய பசுக்களையும்
மலட்டுத்தன்மை உள்ள பசுக்களையும் வதம் செய்வதில் இருந்து காப்பாற்ற அமித்ஷா
போன்ற சகல அதிகாரம் படைத்தவர்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது.
எனவே,
உரிய விலையை பசுவின் உரிமையாளர்களிடம் கொடுத்து வாங்கி, அரசின்
கோசாலைகளில் வைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். இதுதான் பசுவதையை
தடுப்பதற்கு ஒரே வழி. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் கோசாலைகள் அமைக்க
மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை குமுறல் நியாயமானதே!----------
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1967 வரை
இருந்த காங்கிரஸ் ஆட்சி எப்படி ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் எளிமையாக,
வெளிப்படையாக இருந்தது என்பது இன்று, 70 வயதை கடந்தவர்களுக்கு தான்
தெரியும். அந்த ஆதங்கத்தை, இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
குமுறி தள்ளியுள்ளார்.
'தமிழகத்தில் 1967 முதல் 57 ஆண்டுகளாக நாம்
ஏமாந்தது போதும். தேர்தலில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து,
காங்கிரஸ் கட்சி தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும்.
இன்னும் இரண்டு ஆண்டில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதுவரை
நாம் அமைதியாக இருக்க வேண்டும்.
'கட்சியில் இத்தனை கோஷ்டிகளா...
அவமானமாக இருக்கிறது. பணம் இருந்தால் பதவி வாங்கி விடலாம் என்ற சிந்தனையை
இன்றுடன் மறந்து விடுங்கள். கட்சி வளர்ச்சிக்கு உழைத்தால் பதவி தேடி வரும்.
மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற குறிக்கோளுடன் நாம் செயல்பட வேண்டும்'
என்று, தர்மபுரி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் செல்வப்பெருந்தகை
பேசியுள்ளார்.
அவரது ஆவேசம் நியாயமானதே. 70 மாவட்ட தலைவர்கள், ஐந்து
செயல் தலைவர்கள், 38 மாநில துணை தலைவர்கள்,50 மாநில பொது செயலர்கள், 100
மாநில செயலர்கள், 22 அணி அமைப்பாளர்கள் என, 400க்கும் மேற்பட்ட மாநில
நிர்வாகிகள். இவர்கள் அனைவருக்கும் சக நிர்வாகிகள் அனைவர் பெயர்களும்
தெரியாது.
இது போக, 39 செயற்குழு உறுப்பினர்கள்; 234 பொதுக்குழு உறுப்பினர்கள். இந்த 274 பேருக்குள் மாநில நிர்வாகிகள் போதாதா?
இந்த
274 பேருக்கும் பொறுப்பு, கடமை வேண்டும். செயற்குழு உறுப்பினர்களை,
அந்தந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் கட்சி
வளர்ச்சிக்கு பொறுப்பாக்க வேண்டும். அவர் மாதம் ஒரு மாவட்டம் சென்று,
மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த வேண்டும்.
அதுபோல்,
பொதுக்குழு உறுப்பினர்கள் அவர்களது சட்டசபை தொகுதியில் உள்ள கிராமம்,
பேரூர், நகரம் பெருநகரங்களில் அடிமட்ட தொண்டர்களுடன் கட்சி வளர்ச்சி பணிகள்
பற்றி கலந்துரையாட வேண்டும். உள்ளூர் பிரச்னைகளுக்கு, மக்களுடன் நின்று
போராட வேண்டும். இதை எல்லாம் செய்தால், செல்வப்பெருந்தகையின் கனவு
பலிக்கும்.

