PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

எஸ்.ஜெகதீசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட, 67 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது, பராசக்தி திரைப்படம். சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான அத்திரைப்படத்தில், நீதிமன்ற காட்சியில் இடம்பெற்ற கருணாநிதியின் வசனங்கள் கூர்மையானவை.
'இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த வழக்கு விசித்திரமும் அல்ல. வழக்காடும் நான் புதுமையான மனிதனும் அல்ல' என, கர்ஜிப்பார் சிவாஜி கணேசன்.
அதுபோன்றதொரு வழக்கை, டில்லி நீதிமன்றம் சந்திக்கவிருக்கிறது. ஆனால், டில்லி நீதிமன்றம் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், சாதாரணர் அல்ல; புதுமையானவர். அன்னார் மீது நீதிமன்றம் வழக்கு பதிவு செய்வதற்கே, 40 ஆண்டு அவகாசம் எடுத்து கொண்டுள்ளதென்றால், அன்னார் எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டசாலி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அந்த மகானுபாவரின் திருநாமம் ஜெகதீஷ் டைட்லர். 1984 அக்., 31ல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து, நாடு முழுதும் சீக்கியர்களுக்கு எதிராக, காங்கிரசார் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
நவ., 1ல், டில்லியின் புல் பங்காஷ் குருத்வாரா ஆசாத் மார்க்கெட்டில் நடந்த கலவரத்தில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். 'இந்த படுகொலைகளுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததுடன், அதை முன்நின்று நடத்தியவர் தான், இந்த ஜெகதீஷ் டைட்லர்' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 1984ல் நடந்த படுகொலைகளுக்கு பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு, 2023 மே 20ல் தான் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதை ஆக., 30ல் விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு தொடர, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக, 40 ஆண்டுகளுக்கு பின், டில்லி நீதிமன்றம் கடந்த 13ல் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
வழக்கை பதிவு செய்வதற்கே, 40 ஆண்டு காலம் ஆகி உள்ளது. அடுத்து, வாய்தா மேல் வாய்தா, விசாரணை, குறுக்கு விசாரணை, சாட்சிகளின் குட்டிக்கரணம், பிறழ் சாட்சி என எத்தனை நீதிமன்ற விவகாரங்கள் இருக்கின்றன? இன்னும், 60 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணை நீடிக்காதா என்ன?
எப்படியும், 2084க்குள் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியாகி விடும். அதனால், உலக வரலாற்று பதிவு புத்தகமான கின்னஸ் பத்தகத்தில் இந்த வழக்கு நிச்சயம் இடம் பெறும்.
பல நுாறு கோடிகள் மிச்சமாகும்!
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட
பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நுாற்றுக்கணக்கான
மாணவர்கள் போலியாக வருகை பதிவேட்டில் இருப்பது சில நாட்களுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்த பள்ளி தலைமை ஆசிரியர்,
உடந்தையாக இருந்து கண்டுகொள்ளாத வட்டார கல்வி அலுவலர் இருவரும் அதிரடியாக
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பம்மதுகுளம் பள்ளியில் மாணவர்கள்
வருகை பதிவேட்டில், 566 மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால், உண்மையில்
படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை வெறும், 266 என்கின்றனர். மிகப்பெரிய
வித்தியாசம் உள்ளது; இது, இமாலய முறைகேடாக பார்க்கப்படுகிறது.
பள்ளியை
ஆய்வு செய்ய வரும் வட்டார கல்வி அலுவலர்கள், அவர்களுக்கான, 'ஆப்'பில் தான்
பள்ளி சார்ந்த விபரங்களை பதிவிடுகின்றனர். சம்பந்தப்பட்ட வட்டார கல்வி
அலுவலர், இவ்வளவு பெரிய வித்தியாசத்தை இந்நாள் வரை கண்டு கொள்ளாமல்
இருந்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
தேவையை விட அதிக
எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். கூடுதலாக கணக்கு
காண்பிக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அரசு வழங்கிய
விலையில்லா பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை எங்கு சென்றன? கடந்த சில
ஆண்டு களாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
இன்று மாநிலம்
முழுதும் அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலை பள்ளிகளில் பரவலாக
போலியாக மாணவர்கள் சேர்க்கை இருக்கத்தான் செய்கிறது. போலி மாணவர்களை கண்டு
பிடித்து நீக்கினால், ஆண்டுக்கு பல நுாறு கோடிகள் கல்வித்துறைக்கு
மிச்சமாகும். அரசு உடனே இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
என்று வருமோ தெரியவில்லை!
வெ.சீனிவாசன்,
திருச்சி யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா, 'பெங்களூரு ராமேஸ்வரம் கபே
குண்டு வெடிப்பில் ஈடுபட்டது தமிழர்களே' என்று பொறுப்பில்லாமல் குற்றம்
சாட்டினார்.
தமிழக அரசு, கோர்ட் வரை சென்று, அவரை மன்னிப்பு கேட்க வைத்தது.
தேசிய
கட்சியின் பார்லி., உறுப்பினர் ராகுல், மோடி என்கிற சமூகத்தை
அவமரியாதையாகப் பேசிய காரணத்தால், தன் எம்.பி., பதவியை சில மாதங்கள் இழக்க
நேரிட்டது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜனி,
'சீனியர் மாணவரான துரைமுருகன், இளைஞர்களுக்கு வழிவிட மறுக்கிறார்' என்கிற
தொனியில் பேச, அதற்கு பதிலாக துரைமுருகனும், 'பல்லு போன கிழவர்களெல்லாம்
திரைஉலகில் இளைஞர்களுக்கு வழிவிட மறுக்கின்றனர்' என்று பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்ட சபையில் வேட்டி, புடவையை உருவுவதையும், முடியைப் பிடித்து
இழுப்பது, செருப்பைத் துாக்குவது, மைக்கை பிடுங்கி எறிவது போன்ற
காட்சிகளையும் நாம் பார்க்க நேரிட்டது.
தவறான, பொய் பிரசாரங்கள்,
இன, மொழி, மத, பிரிவினைவாத, வாரிசு அரசி யல், ஓட்டுக்குப் பணம், இலவசங்கள்,
தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் செய்வதற்கு சாத்தியமில்லாத அல்லது
செய்தால் பெரும் கடன் சுமையை ஏற்றக்கூடிய வாக்குறுதிகளையும் அளித்தல்,
ஆட்சிக்கு வந்த பின், கூறிய உறுதிமொழிகளில் பலவற்றை நிறைவேற்றாமல்
இருப்பது.
எதிர்க்கட்சிகளை வளர விடாமல் தடுக்க, அவர்களின் நியாயமான
ஜனநாயக உரிமைகளை தடுத்தல், எங்கும் எதிலும் ஊழல், வெறுங்கையோடு அரசியலுக்கு
வந்த பலர், குறுகிய காலத்திற்குள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு மேல்
சொத்துக்களைக் குவித்தல் போன்ற தரம் தாழ்ந்த, ஜனநாயக விரோத, அநாகரிக
அரசியல் செய்வோரை தான் பெரும்பாலும் காண முடிகிறது.
காமராஜர், மொரார்ஜி தேசாய், கக்கன் போன்றோரின் நேர்மையை குறித்து சொன்னால், இந்த கால இளைஞர்களால் நம்ப முடிவதில்லை!
இந்த
மாசுகளை அகற்ற, தேசம், தேசியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, ேநர்மை, நாணயம்,
தகுதி வாய்ந்தவர்கள், அரசியல் குடும்ப பின்னணி இல்லாதவர்கள், உண்மையிலேயே
நாட்டிற்கு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்,
பெருமளவில் அரசியலுக்கு வர வேண்டும்.அந்த நாள் என்று வருமோ தெரியவில்லை!

