/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தெளிவான பார்வை இருந்தால் புரியும்!
/
தெளிவான பார்வை இருந்தால் புரியும்!
PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

என்.
வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நேரு முதல்
மோடி வரை உள்ள பிரதமர்களில், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ.,
போன்ற அரசு நிறுவனங்களை, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்திய
மோசமான பிரதமர், மோடி மட்டுமே என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்
முதல்வர் ஸ்டாலின்.
காங்., கட்சியைச் சேர்ந்தவரான முன்னாள் பிரதமர்
இந்திரா, தனக்கு எதிராக செயல்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்த்தார்.
எமர்ஜென்சியை பிரகடனம் செய்து முக்கிய அரசியல் தலைவர்களைக் கைது செய்து
சிறையில் அடைத்தார்.
தன்னைப் பிரதமர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்த பெருந்தலைவர் காமராஜரையும் விட்டு வைக்காமல், சிறையில் அடைத்து வேதனைப்பட வைத்தார்.
எமர்ஜென்சியின்
போது தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் எல்லாம் தப்பிக்க வழியில்லாமல்,
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையாகத் தாக்கப்பட்டனர்.
சிட்டிபாபு என்ற தி.மு.க., பிரமுகர், சிறையில் சித்தரவதைகளைப் பொறுக்க முடியாமல் உயிர் இழந்தார்.
கடந்த
பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம், இந்திரா
காலத்தில் அமலுக்கு வந்த எமர்ஜென்சியின் போது அடைந்த கொடுமைகளை இப்போது
அனுபவிக்கின்றனரா என்ன?
இப்போதும் சீனாவும், பாகிஸ்தானும்
இந்தியாவை நட்புடன்தான் நடத்துகின்றன. உலகத் தலைவர்கள் எல்லாம், பிரதமர்
மோடியை, தங்கள் நண்பராகத் தான் பார்க்கின்றனர்.
தெளிவான பார்வையுள்ளோர், இதை புரிந்து கொள்வர்.
அடுத்த சரியான இலக்கு இது!
எஸ். சபரிநாதன், முன்னாள் துணை தலைமை இயக்குனர், பிரசார் பாரதி, புதுடில்லியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களாகவே, ரேடியோவை, 'வானொலி' என்று சொல்வதா, 'ஆகாசவாணி' என்று சொல்வதா என விவாதம் நடைபெற்று வருகிறது.
ஹிந்தியைப் பொருத்தவரை, துாய ஹிந்தி என்ற ஒன்று கிடையாது. 'துாயது' என்றாலே, பழம் பெருமையுடைய செம்மொழிக்கு மட்டுமே உண்டு. துாய தமிழ், பழம் தமிழ் என்பதெல்லாம் பேருண்மை.
ஹிந்தியில், மைதிலி ஹிந்தி, போஜ்புரி ஹிந்தி, உருது கலந்த ஹிந்தி, வட்டார மொழி கலப்புள்ள ஹிந்தி என்று, பல வகைகள் உண்டு. புரிந்து கொள்வதற்கு எளிமையாக்கப்பட்ட, பல வட்டார வழக்குகளை உள்ளடக்கிய, நாடு தழுவிய நடைமுறைக்கு ஏற்ற வகையில், அன்றாட பயன் பாட்டிற்கும், செயல் பாட்டிற்கும் ஏற்புடையதாக, ஏற்றுக் கொள்ளப்பட்ட 'கடிபோலி' ஹிந்தியை தான், இந்தியாவின் பல பகுதிகளில், அரசு கோப்புகளில் பயன்படுத்துகிறோம்.
கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இது, பழக்கத்தில் உள்ளது.
நிற்க...
கேட்பதற்கு சமஸ்கிருத வாடை இருந்தாலும், 'ஆகாசவாணி' என்பது ஒரு கடிபோலி சொல் என்றே, பலமொழி வல்லு னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அப்படியாயின், 'வானொலி' என்ற துாயத் தமிழ்ச் சொல்லை ஓரம்கட்டவே, 'ஆகாசவாணி' கொண்டு வரப்பட்டது என்று சொல்வதில், சற்றும் வரலாற்று உண்மை இல்லை.
அறுபது ஆண்டுகளுக்கு முன், ஹிந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டங்கள் என்று, பார்லி., கிடுகிடுத்த நேரத்தில், 'ஆகாசவாணி' என்ற சொல்லை, தமிழக நிலையங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற, உறுப்பினர்கள் சண்டையிட்டனர். அதற்கு பதிலாக, 'ஆல் இண்டியா ரேடியோ' என்ற வார்த்தையைப் பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அமல்படுத்தப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவெனில், ஹிந்தியை வேண்டாம் என்று சொன்னவர்கள், நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் சொல்லிக் கொடுத்த ஆங்கிலத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெளிநாட்டு மோகம் படுத்தும் பாடு இது!
மேலும் ஒரு தமாஷ் என்னவெனில், வேறு எந்த சொல்லையும் அறிவிக்கக் கூடாது என்ற பார்லி.,யின் தீர்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு, காலப் போக்கில், 'அகில இந்திய வானொலி' என்று உபயோகப்படுத்தி வருகின்றனர்.
'ஆகாசவாணி' அல்லது 'ஆல் இந்தியா ரேடியோ' என்ற இந்த இரண்டு சொல்லுமே, வணிக குறி அல்லது வணிக முத்திரை என்ற நிலைக்கு, என்றோ மாறிவிட்டன. அவற்றைப் பயன்படுத்துவதில் என்ன கவுரவக் குறைச்சலோ தெரியவில்லை.
'ஆவின்' என்ற சொல்லை, ஹிந்தியில் மொழிபெயர்த்துப் பயன்படுத்தினால், கதை கந்தல் ஆகி விடும் அல்லவா! அது போல, 'ஆகாசவாணி, ஆல் இண்டியா ரேடியோ' என்று 'பிராண்ட்' ஆகிப் போன சொற்களை, அப்படியே பயன்படுத்தலாமே! மொழியைக் கடந்த முகப்பு, சில மொழிகளில், சில சொற்களுக்கு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கிடைத்து விடுகிறது.
இந்தியாவின் தேசிய இலக்கியமாக திருக்குறளை அறிவிப்பதற்கான, முழு முயற்சியில் தற்போதே இறங்கி, அதில் வெற்றியைக் காண்பதே, அடுத்த சரியான இலக்கு. அதில் கவனம் செலுத்துவோம் நாம்!
திராவிட மாடல் இது!
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன், ஜார்க்கண்ட் மாநிலம், ராய்கஞ்ச் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக, 9 கிலோ கஞ்சாவுடன் இரண்டு நபர்களை கைது செய்தனர் காவல் துறையினர்.
சமீபத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, முன்பு கைப்பற்றபட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் காட்சிப்படுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த கஞ்சாவை, காவல் துறையினரே விற்று காசாக்கி விட்டனரோ என்னவோ தெரியவில்லை... அவர்களால் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த முடியவில்லை. 'கஞ்சாவை எலிகள் தின்று அழித்து விட்டன' என்று பதில் கூறியுள்ளனர்.
இந்த பதிலை படித்தவுடன், எனக்கு வேறு ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது. அது என்னவென்றால்...
முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 27,000 மூட்டை சர்க்கரை மாயமானது தொடர்பாக, சர்க்காரியா கமிஷன் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, அவைகளை எறும்பு தின்று விட்டது என்றும், 'அந்த 27,000 காலியான கோணிப்பைகள் எங்கே?' என்று கேட்டதற்கு, 'அவற்றை கரையான் தின்று விட்டன' என்றும் பதில் கூறினாராம்.
இது உண்மையான நிகழ்வா அல்லது கருணாநிதியின் பேச்சுத் திறமையை புகழ்வதற்காக கூறப்படும் கற்பனையான நிகழ்வா என்பது தெரியவில்லை.
இதை ஏன் இப்போது நினைவுபடுத்துகிறேன் என்றால், 'தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கான ஆட்சி நிர்வாக முறை' என்று முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
அவர்கள் சொன்னது அப்போது புரியவில்லை. இப்போது, 'சர்க்கரை... எறும்பு... கோணி... கரையான்...' என்று வந்தபோது, 'கஞ்சா... எலிகள்...' என்று உவமைப்படுத்தி விட்டது மூளை. எப்பூடி! திராவிட மாடல் இது!

