/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
எங்கெங்கு காணினும் பாலம்... எதற்கும் உதவாத அவலம்!
/
எங்கெங்கு காணினும் பாலம்... எதற்கும் உதவாத அவலம்!
UPDATED : பிப் 06, 2024 04:12 PM
ADDED : பிப் 05, 2024 01:43 AM

ஐம்பதாண்டுகளில் இல்லாத வளர்ச்சிப்பணிகளை, ஐந்தாண்டுகளில் செய்ததாக மார் தட்டிக் கொண்ட அரசியல்வாதிகளையும், இந்த பாலங்களை ஒரே நேர்கோடாகவும், குறுகலாகவும் அவசர கதியில் கட்டுவதற்கு வடிவமைத்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளையும் கண்டா வரச் சொல்லுங்க! இந்த பாலங்களின் கீழே, அவர்களை ஒரு நாள் நிற்க வைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தச் சொல்லலாம்.
கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை, 25 லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது, தினமும் 500 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கேற்ப ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை; புதிய பை பாஸ் ரோடுகள் அமைக்கப்படவில்லை. கமிஷனுக்காக, பாலங்களை மட்டும் ரோடுக்கு ரோடு கட்டியிருக்கிறார்கள்.
இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்; கட்டப்போகிறார்கள். அந்த பாலங்களையாவது ஒழுங்காக வடிவமைத்து, தொலைநோக்கோடு கட்டுகிறார்களா என்றால் அதுவுமில்லை. முக்கிய சாலை சந்திப்புகளில், ஏறுதளங்கள், இறங்குதளங்கள் இல்லாமல், ஓரிடத்தில் ஏறி, மற்றொரு இடத்தில் ஏறுவதற்கு எதற்கு இந்த பாலங்களைக் கட்ட வேண்டும்...அதன் விளைவு தான்...இந்த பாலங்களுக்குக் கீழே எப்போதுமே குறையாத போக்குவரத்து நெரிசல்.
காந்திபுரம், நுாறடி ரோடு, ராமநாதபுரம் பாலங்கள் தான் இதற்கு ஆகச்சிறந்த உதாரணம். கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, நுாறடி ரோடு, சின்னச்சாமி ரோடு, பங்கஜா மில் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு ஆகிய ரோடுகளில், இந்த பாலங்களிலிருந்துஏறுதளங்கள், இறங்குதளங்கள் கண்டிப்பாக அமைத்திருக்க வேண்டும்.
சிலருடைய வணிகக் கட்டடங்களைக் காப்பாற்றுவதற்காக, பணத்தை வாங்கிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளும், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் சேர்ந்து, கோவைக்குச் செய்த கொடுமைதான், இந்த பாலங்களின் வடிவமைப்பை மாற்றியது. அதனால்தான், எல்லாப் பாலங்களுக்குக் கீழேயும், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. பத்துக்கு ஒரு வாகனம், பாலத்துக்கு மேலே போகிறது.
ஐம்பதாண்டுகளுக்கு முன், கோவையில் கட்டப்பட்டுள்ள அவினாசி ரோடு மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலங்களின் வடிவமைப்பை, இப்போது பார்த்தாலும் பிரமிப்பாகவுள்ளது. ஆனால் வாகனங்களும், தொழில்நுட்பமும் பல மடங்கு அதிகமாகியுள்ள இந்தக் காலத்தில், இவ்வளவு 'கேவலமாக' பாலங்களைக் கட்டும்அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் என்ன செய்தாலும் தகும்!
இப்போதும் கூட கெட்டுப்போகவில்லை. இந்த பாலங்களில், முக்கிய சந்திப்புகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, ஏறுதளம், இறங்குதளம் போன்றவற்றை அமைக்க வேண்டும்; இதற்காக வணிகக் கட்டடங்கள், கோவில்கள்எதுவாயினும்அகற்ற வேண்டும்.
அவற்றுக்கு மாற்று இடம், கூடுதல் இழப்பீடு தர வேண்டும். இதைச் செய்யாவிட்டால், கோவை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு என்றுமே தீர்வுகிடைக்காது.
கடைகளையும், கோவில்களையும் எங்கேயும் கட்டலாம்; பாலங்களை ரோட்டில் தான் கட்ட முடியும்!

